Published:Updated:

``பிரியாணிக் கடை; செல்போன் கடை; அழகு நிலையம்!” - வேலூரில் தி.மு.க-வினரைக் கலாய்த்த முதல்வர்

எடப்பாடி பழனிசாமி - ஏ.சி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமி - ஏ.சி.சண்முகம்

‘‘தி.மு.க-வினர் ஓசியில் பிரியாணி, பரோட்டா சாப்பிட்டுவிட்டு ஹோட்டல் உரிமையாளர்களைத் தாக்குகிறார்கள். பிரச்னை பெரிதான பிறகு, ஸ்டாலின் அந்த கடைக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்’’ என முதல்வர் கிண்டலாகப் பேசினார்.

வேலூர் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, அணைக்கட்டு மற்றும் வேலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், ‘‘ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சிதான். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல் எங்களை ஊழல் கட்சி என்று சொல்கிறார் ஸ்டாலின். வாரிசு அரசியல் செய்யும் அவருக்கு என்ன தெரியும். கட்சிக்குத் தலைவராக வருவதைத்தான் நாங்கள் வாரிசு அரசியல் என்று சொல்கிறோம். 

பிரசார மேடையில் முதல்வர்
பிரசார மேடையில் முதல்வர்

கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின். அவருக்குப் பிறகு உதயநிதி. இவர்களை விட்டால் நாட்டில் வேறு ஆளே இல்லையா? உதயநிதியை நான்கு படத்தில் விளம்பரத்துக்காக நடிக்கவைத்து கட்சிக்குள் நுழைத்திருக்கிறார். ஸ்டாலினை நம்பி எங்களிடமிருந்து வெளியே சென்ற 18 எம்.எல்.ஏ-க்களும் நடுத்தெருவில் நிற்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் மேலே இருந்து தெய்வமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். யார் தவறு செய்தாலும் தண்டனை கொடுப்பார்கள். 

சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தியவர்கள் நீங்கள். இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் ஒரே அரசு, அ.தி.மு.க தான். திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரின் கணவர், பணிப்பெண் மூவரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்குக் காரணம் நீங்கள். தி.மு.க-வினர் எல்லோரும் குண்டு குண்டாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம் பிரியாணி, பரோட்டா எல்லாம் காசு கொடுக்காமல் ஓசியில் சாப்பிடுகிறார்கள். பணம் கேட்டால், ஹோட்டல் உரிமையாளரை குத்து குத்துனு குத்துகிறார்கள்.

உதயநிதி - கதிர் ஆனந்த்
உதயநிதி - கதிர் ஆனந்த்

மறுநாள், ஸ்டாலின் அந்தக் கடைக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். ஸ்டாலின் கட்சித் தலைவரா அல்லது கட்டப் பஞ்சாயத்து தலைவரா? செல்போன் கடைக்குப் போனால் செல்போன் வாங்குவார்கள். பணம் கேட்டால் உதைப்பார்கள். அழகு நிலையத்துக்குப் போய் பெண்ணைத் தாக்குகிறார்கள். கோவை டு சென்னைக்கு ரயிலில் வந்த சூலூர் தி.மு.க ஒன்றியச் செயலாளர், அதே ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டார். 

இவர்களா பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்போகிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. ஊழல் மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க-வினருக்கு தகுதியே கிடையாது. ஏழு பேரை விடுதலை செய்யவில்லை என்று கூறுகிறார்கள். அதற்கு நாங்களா காரணம். கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில், அமைச்சரவை கூட்டப்பட்டு நளினியை மட்டும் விடுதலை செய்யலாம், மற்றவர்களுக்குத் தண்டனையை நிறைவேற்றலாம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். நாங்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். 

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் திறந்துவைத்ததே தி.மு.க தான். அந்தத் திட்டத்தை தடுத்துநிறுத்தியது, அ.தி.மு.க அரசு. ‘நீட்’டுக்கு நோட்டிஃபிகேஷன் போட்டு வெளியிட்டதே தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிதான். ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது நாங்கள். எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்திவருகிறோம். எனவே, ஸ்டாலின் சொல்லும் பொய்யை நம்பி ஏமாறாதீர்கள். நல்லவரும் வல்லவருமான ஏ.சி.சண்முகத்தை வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு