Published:Updated:

வேலூர் தேர்தலில் கதிர் ஆனந்த் வென்ற தருணங்கள்..!

தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் (4,85,340), தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை (4,77,199) 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

17-வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் இரண்டாம்கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வாக்கு இயந்திரம்
வாக்கு இயந்திரம்

தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி இருந்தது. பணம் விளையாடியது. இரு தரப்பினரும் தீவிரமான பிரசாரம் உட்பட கடுமையான யுக்திகளைக் கையாண்டனர்.

ஸ்டாலின், இ.பி.எஸ்.
ஸ்டாலின், இ.பி.எஸ்.

தேர்தலின்போது, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரியில் வருமானவரிச் சோதனை நடைபெற்றது. அப்போது அவரது வீட்டிலிருந்து 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் பரவியது. காணொலியும் வெளிவந்தது.

துரைமுருகன் வீடு
துரைமுருகன் வீடு

துரைமுருகன் வீடு தவிர, மேலும் பல தி.மு.க பிரமுகர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இதுதொடர்பாக தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தி.மு.க. நிர்வாகியின் வீடு
தி.மு.க. நிர்வாகியின் வீடு

வேலூர் தொகுதியில் பணப் பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

துரைமுருகன், கதிர் ஆனந்த்
துரைமுருகன், கதிர் ஆனந்த்

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த தேர்தலில், பி.ஜே.பி மீண்டும் தனிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றிபெற்று 38 இடங்களைக் கைப்பற்றியது.

மோடி, ஸ்டாலின்
மோடி, ஸ்டாலின்

இந்த நிலையில், தேர்தல் நிறுத்தப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜூலை 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதிவரை நடைபெற்றது. வாக்குகள் ஆகஸ்ட் 9-ம் தேதி எண்ணப்படும் எனச் சொல்லப்பட்டது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

ஏற்கெனவே இத்தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் மீண்டும் களம் இறங்கினர். இவர்களுக்குப் போட்டியாக நாம் தமிழர் கட்சியும் தீபலட்சுமி என்ற வேட்பாளரை நிறுத்தியது. மக்கள் நீதி மய்யமும் அ.ம.மு.க-வும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த்
ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த்

அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக, முதல்வர் ஈ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்களும், அக்கட்சி நிர்வாகிகளும் தீவிரப்பிரசாரம் செய்தனர். தி.மு.க சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

14,32,555 வாக்காளர்களைக் கொண்ட வேலூர் தொகுதியில், ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.62 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதற்காக, 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குகள் இன்று (ஆக.9) எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் (4,85,340), தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை (4,77,199) 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். 

ஸ்டாலின், கதிர் ஆனந்த்
ஸ்டாலின், கதிர் ஆனந்த்