Published:Updated:

டார்கெட் 2024: எதிர்க்கட்சிகளை இணைப்பதில் முந்தும் நிதிஷ் குமார்... மம்தா அமைதியின் பின்னணி என்ன?!

மம்தா, நிதிஷ் குமார்
News
மம்தா, நிதிஷ் குமார்

2024-ம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க மம்தா பானர்ஜி பல முயற்சிகளை எடுத்துவந்தார். ஆனால், இதில் மம்தாவை ஓவர் டேக் செய்யும் அளவு வேகம் காட்டிவருகிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.

டார்கெட் 2024: எதிர்க்கட்சிகளை இணைப்பதில் முந்தும் நிதிஷ் குமார்... மம்தா அமைதியின் பின்னணி என்ன?!

2024-ம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க மம்தா பானர்ஜி பல முயற்சிகளை எடுத்துவந்தார். ஆனால், இதில் மம்தாவை ஓவர் டேக் செய்யும் அளவு வேகம் காட்டிவருகிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.

Published:Updated:
மம்தா, நிதிஷ் குமார்
News
மம்தா, நிதிஷ் குமார்

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக-வை எதிர்த்து மாநிலக் கட்சிகள் ஒரு கூட்டணியின் கீழ் நிற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சில முயற்சிகளை முன்னெடுத்தார். அதற்காக ஓராண்டு முன்னதாகவே, அதாவது 2018-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். குறிப்பாக, எதிர்க்கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஒரு கூட்டணியில் ஒற்றுமையாகச் செயல்பட்டு, பாஜக-வை எதிர்க்க வேண்டும் என்று பேசினார். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சி மக்களவை உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். ஆனால், அவர் முயற்சி தோல்வியடைந்தது. பாஜக அந்தத் தேர்தலில் தனது இரண்டாவது மிகப் பெரிய வெற்றியைப் பதிவுசெய்தது. மெகா கூட்டணி அமையாமல் இருந்ததுதான் தோல்விக்கு முக்கியக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். 

மோடி - மம்தா
மோடி - மம்தா

எனவே, அடுத்த தேர்தலில் மாநிலக் கட்சிகளுடன் எதிர்க்கட்சிகள்  பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே பாஜக-வை எதிர்க்க முடியும். இதை அடிப்படையாக வைத்துதான் எதிர்க்கட்சிகள் சார்பாகக் கூட்டணி அமைக்க வேண்டும் என்னும் வாதம் பல மாநில முதல்வர்களால் கூறப்பட்டுவருகிறது. இன்னும் ஓர் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆனால், இந்த முறை மம்தாவைப் பின்னுக்குத் தள்ளி, முயற்சிக்கான முன்னெடுப்பாளராக இருப்பவர் பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார்தான். 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

கூட்டணியிலிருந்து வெளியேறினார்!

சில மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் அமைத்திருந்த  கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறினார் நிதிஷ் குமார். பின்பு பழைய கூட்டணியான லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தார். தற்போது, 2024-ம் ஆண்டில் நடக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக-க்கு எதிராக அமையும் எதிர்க்கட்சிகளைத் திரட்டும் முயற்சியில் இருக்கிறார் நிதிஷ் குமார்.

நிதிஷ் குமார், மோடி, அமித் ஷா
நிதிஷ் குமார், மோடி, அமித் ஷா

இதை உறுதிசெய்யும் வகையில் நிதிஷ் குமாரும் அடிக்கடி டெல்லிக்கு  விசிட் அடிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார். தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ், நிதிஷ் குமாரைச்  சந்தித்துப் பேசியிருந்தார்.

கடந்த வாரத்தில் வால்மீகி நகரில் நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "மோடி தலைமையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், மாநிலக் கட்சிகளைச் சந்தித்து எதிர்க்கட்சியுடன் கூட்டணி அமைக்க பயணத்தைத் தொடங்கவிருக்கிறேன். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாரத் ஜோடோ யாத்திரை முடிந்தபிறகு, சந்திப்புக்கான திட்டமிடல் இருக்கும்" என்றார். 

சோனியா - நிதிஷ் குமார்
சோனியா - நிதிஷ் குமார்

கடந்த செப்டம்பர் மாதமே டெல்லியில் சீதாராம் யெச்சூரியைச் சந்தித்து, 2024-ம் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பேசியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் வேட்பாளருக்கு நிதிஷ் முயற்சி செய்கிறாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில்கூறிய அவர், ``பிரதமர் பதவியை உரிமைக்கோரும் எண்ணமோ ஆசையோ தனக்கில்லை” எனத் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், `எதிர்க்கட்சி ஓர் அணியாகத் திரண்டு செயல்பட வேண்டும் என்பதே என் நோக்கம். காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள், பிற மாநிலக் கட்சிகள் ஒன்றிணைப்பதில் முழுக்கவனம் செலுத்த இருப்பதாகவும்’ கூறினார்.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்
ட்விட்டர்

நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளரா?

கடந்த வாரம் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும்  காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், ``2024-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி எதிர்க்கட்சியின் முகமாக மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராகவும் இருப்பார்” எனக் கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ் குமார், `எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ்  முன்னிலைப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை’ எனக் கருத்து தெரிவித்திருந்தார். இதன் மூலம் கட்சிகளைச் சேர்க்க மட்டுமே முயல்வதையும் பிரதமர் வேட்பாளராகும் எண்ணமில்லை என்பதை மீண்டும் உறுதிசெய்தார் நிதிஷ் குமார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சுணக்கம் காட்டும் மம்தா பானர்ஜி!

2024-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்டம் மேற்கு வங்கத்திலிருந்துதான் தொடங்கும் எனப் பேசிவந்தார் முதல்வர் மம்தா. ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி தொடர்பாகப் பெரிதாகப் பேசாமல் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், அவரின் நண்பர்களாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உத்தரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இருக்கிறார்கள். `நாங்கள் இணைந்து மாநிலக் கட்சிகளின் கூட்டணிக்கான முன்னெடுப்பு எடுப்போம்' எனக் கூறியிருந்தார். ஆனால், நிதிஷ் குமார் தனியாக தன் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

மம்தா, நிதிஷ் குமார்
மம்தா, நிதிஷ் குமார்

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ராதா கிருஷ்ணனிடம் பேசுகையில், ``பாஜக-வுக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. ஆனால், கட்சிகளிடையே ஸ்டேட்டர்ஜி கொஞ்சம் மாறுபடுகிறது. நிதிஷ் குமாரை பொறுத்தவரையில், அவர் பல காலமாக பாஜகவுடன் கூட்டணியிலிருந்தவர். அதேபோல் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில்லை என்றால் விலகுவது நிதிஷ்குமாருக்கு இயல்பானது. ஆனால், மம்தா தொடக்கம் முதலே பாஜவை தீவிரமாக எதிர்க்கிறார். எப்படி திமுக - பாஜக கூட்டணி அமையாதோ, அதுபோலதான் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஒருபோதும் அமையாது.

ராதா கிருஷ்ணன்
ராதா கிருஷ்ணன்

இந்த வேறுபாடுதான் அவர் வேகமாக ஓடுவதற்கான காரணம். பாஜக-வை எதிர்க்கும் மாநிலக் கட்சிகளுக்கு நானும் பாஜகவை எதிர்க்கிறேன் என்பதைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் நிதிஷ் குமாருக்கு எழுந்திருக்கிறது. எனவே, மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்க தான் செயல்படுவதாகக் காட்டிக்கொள்கிறார். ஆனால், இதை வெளிக்காட்ட வேண்டிய தேவை மம்தாவுக்கு இல்லை. தேர்தல் நெருங்கும்போது அவர் செயல்பட தொடங்கினாலே போதுமானது. அதற்கான காலம் இருக்கிறது என்பதே மம்தாவின் அமைதிக்கான காரணம்” என்றார்.

நிதிஷ் குமார் - மோடி
நிதிஷ் குமார் - மோடி

மேலும் தொடர்ந்த அவர், ``பாஜகவுக்குத்தான் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு அது தேவையில்லை. முதலில் தேவை வெற்றியை உறுதிசெய்வது. அதன்பிறகு வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்துகொள்ளலாம். அதைப் பற்றி தேர்தலுக்கு முன்பு விவாதிப்பது அவசியமற்றது” என்றார்.