Published:Updated:

வேலூரைக் குறிவைக்கும் அ.தி.மு.க., தி.மு.க... காரணம் என்ன?

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்துக்கு எதிராக, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான வாலாஜா அசேன் சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்திருப்பதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஏ.சி.சண்முகம் - கதிர் ஆனந்த்
ஏ.சி.சண்முகம் - கதிர் ஆனந்த்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் தி.மு.க. வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இருவரும் தங்களுக்கு மாற்றாக மனைவியையே வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்தனர்.

ஒரு வேட்பாளர் நான்கு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்ற நடைமுறை இருப்பதால் ஏ.சி.சண்முகம் தன்னுடைய பெயரில் இரண்டு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறார்.

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்

மனுக்கள் பரிசீலனையில், ஒருவேளை தங்களுடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், என்ன செய்வது என்ற அச்சத்தில் ஏ.சி.சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் வேட்பாளர்கள் தங்களின் மனைவியையே மாற்று வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கிறார்கள்.

சுயேச்சை வேட்பாளர்கள் பலர் தினமும் விதவிதமான கெட்அப்பில் வந்து மனுத் தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த முறை களமிறக்கப்பட்ட தீபலட்சுமியே மீண்டும் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். 

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதிலிருந்து விலகியிருக்கின்றன. கடந்த முறை அ.ம.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கனும், ம.நீ.ம. சார்பில் சுரேஷும் நிறுத்தப்பட்டனர். 

மீண்டும் போட்டியிடுவதற்கு அந்த வேட்பாளர்கள் முன்வரவில்லை. சரியான வேட்பாளர்கள் அமையாததால், இரண்டு கட்சிகளும் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி, தி.மு.க., நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி நிலவினாலும், அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்துக்கு எதிராக, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான வாலாஜா அசேன் சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்திருப்பதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் இருவருக்கும் வேலூர் தொகுதியில் ஓட்டு கிடையாது. ஏ.சி.சண்முகத்துக்கு ஆரணியிலும், கதிர் ஆனந்துக்கு அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காட்பாடியிலும்தான் ஓட்டு இருக்கிறது.

‘‘அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி, தி.மு.க., நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி நிலவினாலும், அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.’’ 
அரசியல் விமர்சகர்கள்

அவர்கள் இருவரும் வேலூர் தொகுதியில் ஓட்டு போட முடியாது. இருவரும் சொந்தத் தொகுதியை விட்டுவிட்டு வேலூர் தொகுதியைக் குறிவைத்ததற்கான காரணத்தையறிய பொதுமக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். 

இதுபற்றி நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் சிலர், ‘‘ஏ.சி.சண்முகத்துக்குச் சொந்த தொகுதி ஆரணி. முழுக்க முழுக்கக் கிராமப்புறங்களை உள்ளடக்கிய அந்தத் தொகுதியின் வளர்ச்சிக்காக ஏ.சி.எஸ். அங்குப் போட்டியிட்டிருக்கலாம். அதேபோல், கதிர் ஆனந்தும் அரக்கோணத்தில் நின்றிருக்கலாம். 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி

துரைமுருகன் எம்.எல்.ஏ-வாக இருக்கும் காட்பாடி சட்டமன்றத் தொகுதி அரக்கோணம் மக்களவையில்தான் வருகிறது. இருவருடைய திட்டமும், நகர்ப்புறங்களை உள்ளடக்கிய வேலூரைக் கைப்பற்றுவதுதான்.

ஸ்மார்ட் சிட்டியாக வேலூர் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் டெண்டர் எடுக்கலாம். நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசைப்படுகிறார்கள். இருவருமே ‘காஸ்ட்லி’ வேட்பாளர்கள்தான். ஜனநாயக முறைப்படி அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

‘‘இருவருமே ‘காஸ்ட்லி’ வேட்பாளர்கள். கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்படுகிறார்கள்.’’
அரசியல் விமர்சகர்கள்.

அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், ஏ.சி.சண்முகமும், கதிர் ஆனந்தும் வேலூர் தொகுதியை இறுக்கிப்பிடிப்பதைப் பார்க்கும்போதுதான் சந்தேகம் எழுகிறது. இருவரில் ஒருவர்தான் வெற்றிபெறப் போகிறார்கள். எப்படி இருந்தாலும் வேலூர் மக்களுக்கு நல்லது நடந்தால் சரி’’ என்றனர் சலிப்புடன்.