Published:Updated:

`உயிருக்கு உத்தரவாதமில்லை!'- திருச்சியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் பெண் ஊராட்சி மன்றத் தலைவி

உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக் கூறி, திருச்சியில் ஊராட்சி மன்றத் தலைவி உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு நிலவுகிறது.

உள்ளிருப்பு போராட்டம்
உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ளது முடிகண்டம் ஊராட்சி. முடிகண்டம், கோளார்பட்டி, ஓலையூர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓலையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சி திவ்யா வெற்றிபெற்றார்.

தேர்தலில் மஞ்சமாதேவி, விசித்ரா தினேஷ்குமார், அகிலா இளங்கோவன் மற்றும் ஜான்சி திவ்யா ஆகியோர் போட்டியிட்டதில், 312 வாக்கு வித்தியாசத்தில் ஜான்சி திவ்யா வெற்றிபெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய விசித்ராவின் கணவர் தினேஷ் குமார் மற்றும் மாமனார் மூக்கன் ஆகியோர், ஜான்சி திவ்யாவின் கணவர் சகாயராஜ் மீது கோபத்தில் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, ஜான்சி திவ்யாவுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

உள்ளிருப்புப் போராட்டம்
உள்ளிருப்புப் போராட்டம்

இந்நிலையில், திருச்சி மணிகண்டம் முதல் திருவெறும்பூர் வரை ரிங் ரோடு பணிகள் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் பணிக்காக, திருமலைசமுத்திரம் பகுதியிலிருந்து ஓலையூர் பகுதி வழியாக கிராவல் மண் அடிக்கப்படுகிறது. இப்படியிருக்க, நேற்று மாலை திருச்சி ரிங் ரோடு பணிகளுக்காக மணல் ஏற்றிவந்த லாரிகளை மூக்கன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள், எங்கள் ஊர் வழியாக அதிக லாரிகள் செல்வதால், சாலைகள் சேதமடைகின்றன. இதனால் இவ்வழியே லாரிகள் செல்லக்கூடாது எனத் தடுத்துநிறுத்தினர்.

தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஜான்சி திவ்யா, தன் கணவர் சகாயராஜுடன் சென்று எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று கூறியதுடன், லாரிகளை விடுவிக்கக் கூறியதாகக் கூறப்படுகிறது. அப்போது மூக்கன் என்பவருக்கும் சகாயராஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மூக்கன், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஜான்சி திவ்யாவையும் அவரது கணவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த மணிகண்டம் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் விசித்ராவின் மாமனார் மூக்கன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

உள்ளிருப்பு போராட்டம்
உள்ளிருப்பு போராட்டம்

அதையடுத்து போலீஸார், ஊராட்சி மன்றத் தலைவரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்கும்படி கூறிவிட்டுச் சென்றார்கள். இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவி ஜான்சி திவ்யா தனது கணவர் சகாயராஜுடன் முடிகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் உள்ளே, உட்புறமாகத் தாழிட்டபடி, தங்களுக்கும் தங்களது மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். அதைத் தொடர்ந்து, அங்கு குவிந்த அவரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம், நேற்று மாலை முதல் இப்போதுவரை தொடர்வதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜான்சி திவ்யா, ``ஊராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்ததில் இருந்தே, தொடர்ச்சியாக எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தால் என்ன பண்ணுவ, எங்களை ஒண்ணும் செய்ய முடியாது என்றும், அவர்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்றும் மிரட்டுகிறார்கள். போலீஸாரிடம் புகார் கொடுத்தால், அவர்கள் சமரசம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று அரசுப் பணிக்காக மணல் ஏற்றிச்சென்ற லாரியை மடக்கி பிரச்னை செய்தார்கள்.

அலுவலகத்திற்கு வெளியே தர்ணா
அலுவலகத்திற்கு வெளியே தர்ணா

தொடர்ந்து தகவலறிந்த நாங்கள் நேரில் சென்றபோது, எங்களையும் தாக்கினார்கள். இனியும் போலீஸாரை நம்பி பலனில்லை. நாங்களே பாதுகாப்பில்லாமல் இருக்கும் சூழலில் எங்களை நம்பி வாக்களித்த மக்களை நாங்கள் எப்படிப் பாதுகாப்பது. இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விசாரணை நடத்தி, எங்களுக்கு நல்ல தீர்வு வழங்குவார் என நம்புகிறோம். மாவட்ட ஆட்சியர் வரும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேச விசித்ராவைத் தொடர்பு கொண்டோம். அவர், ``நான் இப்போது மருத்துவமனையில் இருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது” என்றவரிடம், கணவரின் தொடர்பு எண்ணை கேட்டோம். அதற்கு, கணவரின் எண் எனக்குத் தெரியாது என்றதோடு இணைப்பைத் துண்டித்தார்.

பெண் ஊராட்சி மன்றத் தலைவர், அவரது கணவருடன் நடத்தும் உள்ளிருப்புப் போராட்டம், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.