Published:Updated:

`ஊராட்சிப் பதவிகளுக்கு குலுக்கல் முறை!' - தேர்தல் ஆணையத்தை மிரளவைத்த தேனி

குலுக்கலில் ஈடுபடும் கிராமத்தினர்
குலுக்கலில் ஈடுபடும் கிராமத்தினர்

ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்குக் குலுக்கல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யும் சம்பவம் தேனி அருகே நடந்திருக்கிறது.

ஊரக உள்ளாட்சித்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்றுவரும் சூழலில், தேனி அருகே உள்ள கிராமம் ஒன்றில், ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்குக் குலுக்கல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யும் சம்பவம் இன்று நடந்துள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குலுக்கலில் ஈடுபடும் கிராமத்தினர்
குலுக்கலில் ஈடுபடும் கிராமத்தினர்

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே உள்ளது ஸ்ரீரங்கபுரம் கிராமம். இக்கிராமத்திற்கு ஒரு ஊராட்சி மன்றத்தலைவர், 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், ஊராட்சிமன்றத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிராம மக்கள் அனைவரும், ஊர் நடுவே இருக்கும் சமுதாயக் கூடத்தில் ஒன்றுகூடி, யார் யாரை ஊராட்சி மன்றத்தலைவராகத் தேர்ந்தெடுப்பது, யார் யாரை எந்தெந்த வார்டிற்கு உறுப்பினராகத் தேர்தெடுப்பது எனப் பேசினர். முடிவில், ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பெயர்களைத் துண்டுச்சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தனர்.

தலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் ரூ.15 லட்சம்- கடலூரில் ஏலம்போன ஊராட்சி மன்றப் பதவிகள் #Video
குலுக்கலில் ஈடுபடும் கிராமத்தினர்
குலுக்கலில் ஈடுபடும் கிராமத்தினர்

அதேபோல, 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பெயர்களையும் துண்டுச்சீட்டில் எழுதி, வார்டு நம்பர் எழுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகள் பணத்திற்கு ஏலம் விடப்படும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இந்தநிலையில், இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுவது குற்றமில்லையா என கிராமத்தினர் தரப்பில் கேட்டபோது, ``நாங்கள் பணத்தினை வைத்து ஏலம் நடத்தவில்லை. இது ஏலமும் இல்லை. யார் யார் போட்டியிட விருப்பம் தெரிவிக்கிறார்களோ, அவர்களின் பெயர்களை எழுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்தோம். இது பழங்காலக் குடவோலை முறைதான். இதனால், ஊரில் எந்தப் பிரச்னையும், ஒருவருக்கு ஒருவர் பகையும் ஏற்படாது. ஊர் ஒற்றுமையாக இருக்க இது ஒரு வழி!'' என்றனர்.

குலுக்கல் சீட்டு
குலுக்கல் சீட்டு
`அவரால் நமக்கு நன்மை கிடைக்கும்!’- ஊராட்சி மன்றத் தலைவர் ஏலத்தை எதிர்த்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் பேசிய போது, ``குலுக்கல் முறை, ஏலம் விடுதல் அனைத்தும் சட்டப்படி குற்றம். தேனி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவர் ஆகியோரை ஸ்ரீ ரங்கபுரத்திற்கு அனுப்பியிருக்கிறேன். விசாரணை செய்யப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு