Published:Updated:

``அ.தி.மு.கவை ஆதரித்துப் பேச பா.ஜ.கவில் யாரும் இல்லையே!" –திருநாவுக்கரசர்

“இடைத்தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்கு பா.ஜ.கவில் ஆட்கள் இல்லை” என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேலைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், தி.மு.க காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியானது அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்கு அஸ்திவாரமாக அமையும்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் எந்த திட்டமும் சரியாக நிறைவேற்றப் படவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட மத்திய மோடி அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு, மகாபலிபுரத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இந்த சந்திப்பு தமிழக மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.கவிற்கு ஆதரவு இல்லை என வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். அதையும் மீறி, அவரது படத்தையோ, கட்சியின் பெயரையோ பயன்படுத்தி ஓட்டு கேட்பது என்பது சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் முறையற்றதாகும். இது, `பந்தியில் இடமில்லை' எனச் சொன்ன பிறகும் உட்கார நினைப்பது போன்ற நியாயம் அற்ற, நாகரிகமற்ற ஒன்று என்பதையே உணர்த்துகிறது. பொதுவாக தேர்தலில் சமுதாய ரீதியான வாக்கு வங்கிகளைக் குறி வைத்தே வேட்பாளர்கள் களமிறக்கப்படுகிறார்கள்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

இதற்கு, இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் விதிவிலக்கல்ல. நாளுக்கு நாள் ஜனநாயகம் சீர் கெட்டுபோய்க் கொண்டுதான் இருக்கிறது. ஆகவே மக்கள் தான் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும். இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு பா.ஜ.கவில் ஆட்கள் இல்லை. அப்படியே ஆட்கள் இருந்து ஓட்டு கேட்டு வந்தாலும் பா.ஜ.கவிற்கு தமிழகத்தில் ஓட்டு வங்கி என்பது இல்லை”என்றார்.