Published:Updated:

`தனி வாக்குச் சீட்டுடன் வாக்குப் பானை!' -உள்ளாட்சிக்கு உள்தேர்தல் நடத்தி அதிரவைத்த ராமநாதபுரம்

தங்கச்சிமடம் ஊராட்சியிலும் இன்று காலை இதேபோல் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் சார்பில் நடந்துள்ளது.

பஞ்சாயத்து வேட்பாளரை தேர்வு செய்ய வாக்குச் சீட்டு
பஞ்சாயத்து வேட்பாளரை தேர்வு செய்ய வாக்குச் சீட்டு

உள்ளாட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவரைத் தேர்வு செய்ய தனியாகத் தேர்தல் நடத்திய சம்பவம், ராமநாதபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியொரு தேர்தலுக்கு உள்ளூர் போலீஸாரும் துணைபோனதுதான் கொடுமை.

தங்கச்சிமடம் ஊராட்சி அலுவலகம்
தங்கச்சிமடம் ஊராட்சி அலுவலகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் இம்மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட நேற்று வரையில் 497 பேர் கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கும் 306 பேர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கும் ஒன்றிய கவுன்சில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 34 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாவட்டக் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் மனு செய்யவில்லை.

தலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் ரூ.15 லட்சம்- கடலூரில் ஏலம்போன ஊராட்சி மன்றப் பதவிகள் #Video

இந்த நிலையில், ராமநாதபுரம் அருகே உள்ள சுமைதாங்கி என்ற கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடிய நபரைத் தேர்வு செய்ய தனியாகத் தேர்தல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சுமைதாங்கி ஊராட்சிக்குட்பட்டு களரி, ஆனைக்குடி, கீழச்சீத்தை மற்றும் சுமைதாங்கி அகிய 4 கிராமங்கள் உள்ளன. இதுவரை கிராமப் பஞ்சாயத்து தலைவர் பதவியை வகிக்காத சுமைதாங்கி கிராமத்திலிருந்து தலைவர் பதவிக்கு ஒருவரை நிறுத்துவது என அக்கிராம மக்கள் முடிவு செய்தனர்.

தேர்தல் வாக்குப்பெட்டியாக பயன்படுத்தப்பட்ட பானை
தேர்தல் வாக்குப்பெட்டியாக பயன்படுத்தப்பட்ட பானை

இதையடுத்து தலைவர் பதவிக்கு யாரை நிறுத்துவது என முடிவு செய்ய தங்களுக்குள் தேர்தல் ஒன்றை நடத்தி அவரை கிராமத்தின் சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட வைப்பது என சுமைதாங்கி கிராமத்தினர் முடிவு செய்தனர்.

இதன்படி தனிச் சின்னம், தனி வாக்குச் சீட்டு ஆகியவற்றுடன் ராமையா, ராஜா, வீரகுமார், சேதுபாண்டி ஆகிய நால்வர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை நடந்தது. கிராம மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சுமைதாங்கி கிராமத்தில் நடந்த தேர்தலை தடுத்து நிறுத்தியதுடன், தேர்தல் நடத்த ஏற்பாடு செய்த கிராம தலைவர் முருகவேல், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வாக்குச் சீட்டு அச்சடித்த அச்சக உரிமையாளர் ராஜா ஆகிய 8 பேர் மீதும் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தப் பரபரப்பு அடங்கும் முன்னர் தங்கச்சிமடம் ஊராட்சியிலும் இன்று காலை இதேபோல் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் சார்பில் நடந்துள்ளது.

உள்ளூர் போலீஸாரின் ஆதரவுடன் நடந்த இந்தத் தேர்தலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த குயின்மேரி, ஜென்சி, லோவிதெரசா, ரெஜி ஆகிய நால்வர் போட்டியிட்டுள்ளனர். இன்று காலை தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடந்த இந்தத் தேர்தலில் ஏராளமானோர் பங்கேற்று வாக்களித்துள்ளனர்.

தங்கச்சிமடத்தில் தேர்தல் நடத்தப்பட்ட மண்டபம்
தங்கச்சிமடத்தில் தேர்தல் நடத்தப்பட்ட மண்டபம்

மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு மாறாக நடத்தப்பட்ட இந்தத் தேர்தல் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குப் புகார் சென்றுள்ளது. இதையடுத்து, ராமேஸ்வரம் வட்டாட்சியர் சந்திரன், டி.எஸ்.பி மகேஷ், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் போலீஸாருடன் அங்கு சென்றனர். தேர்தலில் ஈடுபட்டவர்களுக்கு இதுகுறித்த தகவல் தெரியவர, வாக்குப்பதிவை பாதியில் நிறுத்திவிட்டு பதிவான வாக்குச் சீட்டுகளுடன் தலைமறைவாகினர்.

தங்கச்சிமடத்தில் பயன்படுத்தப்பட்ட தேர்தல் வாக்கு சீட்டு
தங்கச்சிமடத்தில் பயன்படுத்தப்பட்ட தேர்தல் வாக்கு சீட்டு

இதன்பின் அங்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன், வாக்குப்பதிவு நடந்த திருமண மண்டபத்துக்குப் பூட்டு போட்டனர். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தேர்தல் நடத்தியவர்கள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்றும் அதேபோன்று தேர்தல் நடத்த முயன்ற சம்பவம் மாவட்ட அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.