Published:Updated:

`வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்கணும்!’ - தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தி

``தமிழகம் முழுவதும் 13,000 பள்ளிகளில், ‘தேர்தல் கல்வியறிவுக் குழுக்கள்’ அமைக்கப்பட்டுள்ளன’’ என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகப் பள்ளி, கல்லூரி உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், ‘தேர்தல் கல்வியறிவுக் குழுக்கள்’ அமைக்கப்பட்டுவருகிறது. இதற்கான பயிற்றுநர்களுக்கு, வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 

பயிற்சி வகுப்பு
பயிற்சி வகுப்பு

இதில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது, பயிற்றுநர்கள் விழிப்புணர்வு பாடல்களைப் பாடி அசத்தினர். 

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, ``தமிழகத்தில் 13,000 பள்ளிகளில், தேர்தல் கல்வியறிவுக் குழுக்களை ஆரம்பித்துள்ளோம். மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகக் கோவை, திருச்சி, வேலூர், மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

பயிற்றுநர்கள்
பயிற்றுநர்கள்

இந்த பயிற்றுநர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று, `நாம், ஏன் வாக்காளர் பட்டியலில் இணைய வேண்டும். தேர்தல் என்றால் என்ன?’ என்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இந்தத் தகவல்களை மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் கொண்டு சேர்ப்பார்கள். 

வேலூரில் நடைபெற்ற இந்த வகுப்பில் வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர். இதுபோன்ற விழிப்புணர்வு மூலம்தான் நாடாளுமன்றத் தேர்தலில் 72 சதவிகித வாக்குகள் பதிவாகின. 

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

அடுத்து வரும் தேர்தல்களில், வாக்குப்பதிவை மேலும் அதிகரிக்கச் செய்யலாம். வாக்காளர் பட்டியலில் ஆண்டுதோறும் 25 லட்சம் புது வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். ஆனால், ஆண்டுதோறும் வெறும் 10 லட்சம் புது வாக்காளர்களைத்தான் இணைத்துவருகிறோம்’’ என்றார்.