Published:Updated:

ஆபரேஷன் உள்ளாட்சி! - தயாராகும் தமிழகக் கட்சிகள்

ஆபரேஷன் உள்ளாட்சி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபரேஷன் உள்ளாட்சி!

கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி. அமெரிக்கப் பயணம், இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் கிடைத்துள்ள வெற்றி, டாக்டர் பட்டம் என உற்சாகத்தின் உச்சத்தில் திளைக்கிறார்.

ஆபரேஷன் உள்ளாட்சி! - தயாராகும் தமிழகக் கட்சிகள்

கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி. அமெரிக்கப் பயணம், இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் கிடைத்துள்ள வெற்றி, டாக்டர் பட்டம் என உற்சாகத்தின் உச்சத்தில் திளைக்கிறார்.

Published:Updated:
ஆபரேஷன் உள்ளாட்சி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபரேஷன் உள்ளாட்சி!

ன்னீரை மொத்தமாய் ஓரங்கட்டி தனிப்பெரும் தலைவனாக உருவெடுத்து இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்களே பேசத் தொடங்கியி ருக்கிறார்கள். அமைச்சர்களும் அவரைப் புகழ்வதைப் பார்த்தால் சீக்கிரமே கட்சியின் பொதுச்செயலாள ராகவும் எடப்பாடி பொறுப்பேற்றுவிடுவார் என்றுதான் தோன்றுகிறது.

ஒட்டுமொத்தமாய் சூழ்நிலை தனக்குச் சாதகமாய் இருப்பதாக நினைப்பதால் உள்ளாட்சித்தேர்தலை அவர் நடத்திவிடுவார் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவரும் அவரின் சகாக்களும் டிசம்பருக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஆலோசிக்கவும் செய்திருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆபரேஷன் உள்ளாட்சி! - தயாராகும் தமிழகக் கட்சிகள்

சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க-வின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், அதன் தலைமைக்கு இருக்கிறது. அது மட்டுமன்றி, கடந்த மூன்றாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளும் பதவியின்றி, சம்பாதிக்க வழியின்றி சலிப்புடன் இருக்கின்றனர். ‘‘நீங்க எல்லாம் சம்பாதிக்கிறீங்க. எங்களுக்கு என்ன செஞ்சீங்க?’’ என்று அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் பார்த்துக் கேள்வி எழுப்பவும் ஆரம்பித்துவிட்டனர்.

கடந்த மூன்றாண்டுகளில் பட்ஜெட்டில் தமிழக உள்ளாட்சித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் நடந்துள்ளன. இவற்றைத் தவிர்த்து, ஸ்மார்ட் சிட்டி, ஸ்வச் பாரத், அம்ருட், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என மத்திய அரசின் பல்வேறு திட்டங்களிலும் தமிழகத்துக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வேலை நடக்கிறது.

உரிய காலத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடந்திருந்தால் இந்தத் தொகையில் 1,31,794 உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் பங்கு போயிருக்கும். ஆனால் கமிஷன் கேட்பதற்கு ஆளில்லாததால் அத்தனையும் ஓரிடத்துக்கே போவதாகக் குமுறல்கள் கேட்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆபரேஷன் உள்ளாட்சி! - தயாராகும் தமிழகக் கட்சிகள்

அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் அதிகாரிகளின் ஆதிக்கமும் அதிகரித்திருக்கிறது. ஆனால் பணிகள் சரிவர நடப்பதில்லை. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களிலேயே உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள் கந்தலாகக் கிடக்கின்றன. கிராமத்துச்சாலைகளின் நிலை இன்னும் மோசம். பாதாளச் சாக்கடைப்பணிகள் படுமந்தமாக நடக்கின்றன. பாதிக்கும் மேலே தெருவிளக்குகள் எரிவதில்லை. குப்பைகள் குவிந்துகிடக்கின்றன. நகரங்கள் கொசுக்களின் உற்பத்தித் தொழிற்சாலைகளாகியிருக்கின்றன. டெங்கு, மர்மக்காய்ச்சல்கள் படையெடுக்கின்றன. குடிநீர் விநியோகத்தில் குளறுபடிகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்களின் அதிருப்தியும் அதிகரித்திருக்கிறது.

எல்லாவற்றையும்விட உள்ளாட்சித்தேர்தல் நடத்தினால்தான் முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்று மத்திய அரசும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. அதனால் உள்ளாட்சித்தேர்தலை இதற்கு மேலும் தள்ளிப்போட முடியாது என்ற சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது சீக்கிரமே உள்ளாட்சித்தேர்தலை நடத்திவிடுவார்கள் என்றுதான் தெரிகிறது.

நடத்தினால் என்னாகும்?

ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதில் பெரும் வெற்றியைப் பெறுவது அ.தி.மு.க தலைமைக்கு அவ்வளவு எளிதான காரியமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் பலமான கூட்டணியை அமைத்தும் பலமான அடி வாங்கியது அ.தி.மு.க. ஆனால் இடைத்தேர்தல்களில் பணத்தை வாரியிறைப்பதைப்போல, உள்ளாட்சித்தேர்தலிலும் பணத்தை இறைத்து, அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பெரும் வெற்றியைப் பெற்றுவிடலாம் என்றே அ.தி.மு.க தலைமை நினைக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக, கூட்டணிக்கட்சிகளுக்கும், கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளுக்கும் இடங்களை ஒதுக்கீடு செய்வது எடப்பாடிக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

ஆபரேஷன் உள்ளாட்சி! - தயாராகும் தமிழகக் கட்சிகள்

பா.ஜ.க தயவால்தான் அ.தி.மு.க ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் அ.தி.மு.க-வினரைவிடத் தமிழக பா.ஜ.க-வினர் மிகவும் உறுதியாக இருக்கின்றனர். நாடாளுமன்றம், சட்டமன்றம் என பா.ஜ.க-வுக்கென ஒரு பிரதிநிதிகூட இல்லாத ஒரே மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. அதனால் குறைந்தபட்சம் உள்ளாட்சிப் பிரதிநிதிகளையாவது உருவாக்க வேண்டுமென்று பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்திலுள்ள 15 மாநகராட்சிகளில் சென்னை, கோவை உட்பட மூன்று மேயர் பதவிகளை பா.ஜ.க கேட்குமென்கிறார்கள் அந்தக் கட்சியின் நிர்வாகிகள். ஆனால் திருப்பூர், நாகர்கோவில் ஆகிய இரண்டு இடங்களை மட்டுமே பா.ஜ.க-வுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக அ.தி.மு.க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

விக்கிரவாண்டியில் தங்களால்தான் அ.தி.மு.க வெற்றிபெற்றது என்று பா.ம.க-வினர் பகிரங்கமாகவே பறைசாற்றிக்கொண்டிருக்கின்றனர். அவர்களும் சென்னையையும் வேலூரையும் குறிவைத்துள்ளனர். ஆனால் தலைநகரம் என்பதால் சென்னையை அ.தி.மு.க விட்டுத்தர வாய்ப்பேயில்லை என்பதோடு சென்னை மேயர் சீட்டு, அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனுக்கு ஏற்கெனவே ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டதாம். சென்னையைத் தராதபட்சத்தில் சேலத்தை பா.ம.க கேட்கும். அது தன்னுடைய சொந்த ஊர் என்பதால் அங்கு தன் பலத்தைக் காண்பிக்க நினைப்பார் எடப்பாடி. இந்த இடங்களைத் தவிர்த்து பா.ம.க வேறு எங்கும் போட்டியிடமுடியாது என்பதால் இந்த இரண்டில் ஒன்றை அ.தி.மு.க விட்டுத்தர வேண்டிய கட்டாயமும் ஏற்படும்.

அடுத்ததாக மதுரை உள்ளிட்ட இரண்டு மேயர் சீட்டுகளையும் சில நகராட்சித்தலைவர் பதவிகளையும் தே.மு.தி.க கேட்கும். ‘நாங்களும் இருக்கோம்ல’ என்று தஞ்சாவூர் மாநகராட்சியைத் தமிழ் மாநில காங்கிரஸார் கேட்பார்கள். வேலூரை ஏ.சி.சண்முகம் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பெரிய கட்சிகளுக்குத் தலைக்கு இரண்டு, சிறிய கட்சிகளுக்கு ஆளுக்கு ஒன்று என்று கொடுத்தாலும் ஏழெட்டு மாநகராட்சிகளை அ.தி.மு.க விட்டுக்கொடுக்கவேண்டியிருக்கும். அதை அ.தி.மு.க நிர்வாகிகள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம். அவர்களைச் சரிக்கட்டுவது சாதாரண காரியமாய் இருக்காது. மேயர், நகராட்சித்தலைவர் சீட் ஒதுக்கீட்டை எப்படியோ முடித்தாலும் மாநகராட்சி, நகராட்சி வார்டுகளை இத்தனை கட்சிகளுக்குப் பகிர்ந்து கொடுப்பதற்குள் அ.தி.மு.க தலைமைக்குத் தாவு தீர்ந்துவிடும்.

ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுக்கு சீட்டும் கொடுத்து நோட்டும் கொடுத்து ‘சிறப்பான தோல்வியை’த் தழுவிய அனுபவம் அ.தி.மு.க-வுக்கு இருக்கிறது. அதனால் உள்ளாட்சித்தேர்தலில் சீட்டுகளை ஒதுக்குவதோடு ஒதுங்கிக்கொள்ளவே வாய்ப்பு அதிகம். இன்றைய சூழ்நிலையில் காசை இறக்காவிட்டால் கட்சிக்கொடி கட்டவே யாரும் தயாரில்லை என்பதால் களமிறங்கி வேலை பார்க்க எத்தனை பேர் வருவார்கள் என்பது கேள்விக்குறி. இது ஒருபுறமிருக்க, கட்சிக்குள்ளேயே இ.பி.எஸ், ஓ.பி.எஸ், அமைச்சர்கள், ஆதரவாளர்கள் என பல கோஷ்டிகளுக்கும் சரியான பங்கு தர வேண்டும். ஆகமொத்தத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்தாமலும் இருக்க முடியாது, நடத்தினாலும் சிக்கல் என்ற இக்கட்டான நிலையில்தான் இருக்கிறார் எடப்பாடி. இந்தத் தேர்தல் அவருக்குப் பெரும் கண்டம்தான்.

உடன்பிறப்புகளின் உரசல்!

அ.தி.மு.க நிலைமை இப்படியென்றால் தி.மு.க கூட்டணியிலும் பங்கு கேட்பதற்கு நிறையவே கட்சிகள் இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைத் தவிர வேறு எங்குமே பெரிய அளவில் ஜெயிக்கவில்லை என்பதால் ஸ்டாலினுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் கதர்ச்சட்டைக்காரர்களும், காம்ரேட்களும். அதனால் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டிய நிலையில்தான் தி.மு.க கூட்டணிக்கட்சிகள் இருக்கின்றன.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலைப்போல சீட்டுகளைக் கூட்டணிக்கட்சிகளுக்கு அள்ளிக்கொடுக் காமல் உள்ளாட்சித்தேர்தலில் கிள்ளிக்கொடுக்கும் மனநிலையில்தான் தி.மு.க தலைமை இருக்கிறது என்கிறார் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர். காங்கிரஸுக்கு இரண்டு மேயர் சீட், கம்யூனிஸ்ட்களுக்குத் தலா ஒன்று என்ற கணக்கில்தான் பங்கீடு இருக்கும், விடுதலைச்சிறுத்தைகளுக்கும், ம.தி.மு.க-வுக்கும் மேயர் சீட் கிடையாது என்றும் கூடுதல் தகவல் தந்தார்.

அதற்கும் மேல் சீட் கொடுத்தால் தி.மு.க-வுக்குள்ளேயே பெரும்புகைச்சல் கிளம்பும், அது தேர்தல் வெற்றியை பாதிக்குமென்பதைத் தி.மு.க தலைமையும் உணர்ந்திருக்கிறது. ஏனெனில், எட்டாண்டுகளாக எந்தப் பதவி சுகத்தையும் காணாமல் ‘காய்ந்து கிடக்கும்’ உடன்பிறப்புகள் எப்படியாவது உள்ளாட்சித்தேர்தலில் சீட் வாங்கி ஜெயித்தே ஆக வேண்டுமென்று வெறித்தனத்தோடு காத்திருக்கிறார்கள்.

நாகர்கோவில், கோவை, வேலூர் மாநகராட்சிகளில் இரண்டு இடங்களை காங்கிரஸ் கேட்கும் வாய்ப்புள்ளது. ஆனால் தி.மு.க தருவது சந்தேகம்தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கோவையை விட்டுத்தரலாம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் அல்லது ஆவடியைக் கேட்கும் என்கிறார்கள். மற்றபடி வார்டுகள் ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை 30 சதவிகித இடங்களைத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குகிற முடிவில் தி.மு.க இருப்பதாகத் தெரிகிறது.

தி.மு.க-வைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பதைவிட, உட்கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளைச் சமாளிப்பதுதான் பெரிய சவால். கட்சிக்குள் உதயநிதியின் கரம் ஓங்கியிருப்பதால் இளைஞரணியினர் அதிக அளவில் சீட் எதிர்பார்ப்பார்கள். கடும் அதிருப்தியில் இருக்கும் கனிமொழி, மகளிர் அணியை விட்டுக்கொடுக்க மாட்டார். துரைமுருகன்,கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொங்கலூர் பழனிசாமி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு எனப் பல்வேறு பெருந்தலைகளும் தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்குவதற்காக முட்டிமோதுவார்கள்.

அ.தி.மு.க-விலாவது சீட் கிடைக்காவிட்டால் வேலை பார்க்காமல் ஒதுங்கிவிடுவார்கள். ஆனால் தி.மு.க-வில் மட்டும்தான் வேறு யாருக்காவது சீட் கொடுத்தால் தேர்தல் வேலையும் பார்க்க மாட்டார்கள், சொந்தக்கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்க உள்ளடி வேலையும் பார்ப்பார்கள். 22 தொகுதிகள் இடைத்தேர்தலில்கூட சில தொகுதிகளில் தி.மு.க தோல்வியடைந்ததற்குத் தி.மு.க-வினர் செய்த உள்ளடி வேலைகள்தான் காரணமென்பது ஊரறிந்த ரகசியம். இது உள்ளாட்சித்தேர்தலில் நிறையவே நடக்கும். உள்ளாட்சித்தேர்தலில் கிடைக்கும் வெற்றிதான் அடுத்து வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கு மென்பதால் இந்தத்தேர்தல் ஸ்டாலினுக்கும் பெருஞ்சவால்தான்.

இருபெரும் கட்சிகளைத் தவிர்த்து, அ.ம.மு.க, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சியினரும் கணிசமான இடங்களைப் பிடிப்பதற்குத் தீவிர முயற்சிகளை எடுப்பார்கள். இந்தக் கட்சிகளுடைய வேட்பாளர்களின் செல்வம், செல்வாக்கைப் பொறுத்துப் பல இடங்களைக் கைப்பற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

வேலைவாய்ப்பின்மை, தொழில் வீழ்ச்சி, பொருளாதார நெருக்கடி, கட்டுக்கடங்காத லஞ்சம், ஓயாத ஊழல் என நொந்து வெந்து கிடக்கும் தமிழக மக்களும் உள்ளாட்சித்தேர்தலை ஒரு திருவிழாவைப் போலத்தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக் கிறார்கள். ஆனால் சொன்னபடி டிசம்பருக்குள் உள்ளாட்சித்தேர்தலை எடப்பாடி நடத்துவாரா என்பதுதான் சந்தேகமாய் இருக்கிறது.

எட்டுக் கட்டங்களாகத் தேர்தலை நடத்தப்போகிறார்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் படைகளைக் குவித்து, அதிகாரிகளை வைத்து ஆளும்கட்சிக்குச் சாதகமாகத் தேர்தலை நடத்தப்போகிறார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் ஒரு செய்தி கசிந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காக முதற்கட்டமாக 12,000த்துக்கும் அதிகமான கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்திவிட்டு, மற்ற தேர்தல்களைத் தள்ளிப்போட்டுவிடுவார்கள் என்றும் இன்னொரு தரப்பில் சொல்கிறார்கள்.

எல்லாம் எடப்பாடியாருக்கே வெளிச்சம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism