Published:Updated:

நாங்குநேரியில் 66.35%, விக்கிரவாண்டியில் 84.36! - இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அப்டேட்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த 3 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முத்தமிழ்ச்செல்வன், தி.மு.க சார்பில் புகழேந்தி உட்பட 12 பேர் களம் கண்டனர். மொத்தமுள்ள 275 வாக்குச்சாவடிகளுக்கு 344 வாக்குப்பதிவு மற்றும் 344 வாக்கு எண்ணும் இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் கண்டறியும் 358 வி.வி.பேட் இயந்திரங்களும் நேற்று காவல்துறையின் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. உரிய ஆவணங்களின்றி பணம், பரிசுப்பொருள்கள் கொண்டுசென்றதாக ரூ.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல்விதிகள் மீறியதாக 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

வாக்களிக்கும் மக்கள்
வாக்களிக்கும் மக்கள்

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 12.84 சதவிகிதம், 11 மணி நிலவரப்படி 32.54 சதவிகிதம், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 54.17 சதவிகிதம், மாலை 3 மணி நிலவரப்படி 65.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன, மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இறுதியாக 84.36 சதவிகித வாக்குகள் பதிவாகின.

தி.மு.க vs பா.ம.க மோதலாக மாறியிருக்கிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம்!

காமராஜர் நகர்:

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த வைத்திலிங்கம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் இடைத்தேர்தலை சந்தித்தது இந்தத் தொகுதி. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் உட்பட 9 போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப் பதிவுகள் தொடங்கிவிட்டாலும் தொடர்ச்சியான மழை காரணமாக வாக்காளர்கள் குறைவாகவே வருகை தந்தனர். பிறகு காலை 9 மணிக்கு 9.66 சதவிகிதம், 11 மணிக்கு 28.17 சதவிகிதம், 1 மணிக்கு 42.71 சதவிகிதம், 3 மணிக்கு 56.16 சதவிகிதம், மாலை 5 மணிக்கு 66.95 சதவிகிதம் என படிப்படியாக அதிகரித்தது. இறுதியாக 69.44 சதவிகித வாக்குகள் பதிவானது. இது கடந்த தேர்தலில் பதிவான வாக்குகளைவிட 7.85% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன்
அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன்
நாங்குநேரி... உற்சாகத்தில் கதராடைகள்! - விக்கிரவாண்டி... துள்ளிக்குதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!

நாங்குநேரி:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க சார்பாக ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியின் ராஜ்நாராயணன், பனங்காட்டுப் படை கட்சியின் ஹரிநாடார் மற்றும் இதர வேட்பாளர்கள் என மொத்தம் 23 பேர் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.

73 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகளை உள்ளடக்கிய நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் 2,57,418 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 299 பூத்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 23.89 சதவிகிதம், மாலை 5 மணி நிலவரப்படி 62.32 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. மாலை வாக்குப்பதிவு முடிந்தநிலையில் இறுதியாக 66.35 சதவிகித வாக்குகள் பதிவாகின.