திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 59 வார்டுகளில் வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் திருச்சி மாநகராட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதே அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான அன்பழகன்தான் மேயர் எனப் பரவலாகப் பேசப்பட்டது. அதேபோல, தி.மு.க தலைமை வெளியிட்ட மேயர் வேட்பாளர் பட்டியலிலும் அன்பழகன் பெயரே இடம்பெற்றது. மார்ச் 2-ம் தேதி திருச்சி மாநகராட்சியில் வெற்றிபெற்ற 65 வார்டு கவுன்சிலர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நிலையில், இன்று காலை மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க கவுன்சிலர்கள் மூன்ரு பேரும் தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணித்ததாலும், வேறு யாரும் மேயர் தேர்தலில் போட்டியிடாத காரணத்தாலும் தி.மு.க மேயர் வேட்பாளரான அன்பழகன் போட்டியின்றி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து மேயர் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ-க்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கலெக்டர் சிவராசு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை அன்பழகனுக்கு அமைச்சர் கே.என்.நேரு வழங்கியதோடு, மேயர் அங்கியையும் அன்பழகனுக்கு அணிவித்து அழகுபார்த்தார். இதில் நெகிழ்ந்துபோன மேயர் அன்பழகன், கே.என்.நேருவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என கே.என்.நேரு, மேயர் அன்பழகனைக் கலாய்க்க, மேடையில் இருந்தவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். மேலும், 'சீக்கிரம் படி... படி' என மைக்கை ஆன் செய்து கொடுத்து மேயருக்கான பதவிப் பிரமாணத்தை அன்பழகனை வாசிக்கச் சொன்னார் கே.என்.நேரு. அப்போது `முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர், நகராட்சித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிய உறுதி கூறுகிறேன்' என மேயராக அன்பழகன் பதவியேற்றுக்கொண்டார்.