சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள 49-வது வார்டில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பிந்தேஷ் என்பவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அதனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள் பலரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தி.மு.க-வினர் இந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை கைப்பற்றியுள்ளதாகவும், இதுகுறித்து தேர்தல் அலுவரிடம் புகார் தெரிவித்தும், எந்தநடவடிக்கையும் இல்லையென்றும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அதேபோல, சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள 39- வது வார்டில் அ.தி.மு.க, தி.மு.க-வினர் இடையே பூத் ஸ்லிப் கொடுக்கும்போது ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜு என்பவருக்கும், தி.மு.க-வைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே அந்த பகுதியில் பூத் சிலிப் கொடுக்கும்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், ஒரு கட்டத்தில் வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. ஒருவரை ஒருவர் கற்களைக் கொண்டு தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜு-வுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க உறுப்பினர் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.