தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது காட்பாடி வீடு அமைந்திருக்கும் வேலூர் மாநகராட்சி 9-வார்டு மையத்தில் குடும்பத்துடன் சென்று வாக்கினைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘``பொதுவாகவே, தமிழகம் முழுவதும் தி.மு.க-வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அந்த பிரகாரத்தை எப்படியாவது மங்க வைக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் சில இடங்களில் கலாட்டா செய்கிறார்கள். ‘தோல்வி உறுதி’ என தெரிந்தப் பிறகு கோயம்புத்தூர், வேலூரில் கலாட்டா செய்ய முற்பட்டிருக்கிறார்கள். அவையெல்லாம் அவர்களுக்கான தோல்வியின் அறிகுறிகள்தான். ஆகையால், மேயர் பதவி, நகராட்சிக்குரிய பதவி, டவுன் பஞ்சாயத்து பதவிகளை தி.மு.க கைப்பற்றும் என்பதில் திடமான நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது விஷமதனமானது. இருக்கின்ற அணையே பலமாக இருக்கிறது என்று தெரிவித்தப் பிறகும் ‘அணை கட்டுவோம்’ என்று சொல்வது அரசியல் சட்டத்தை மதிக்க மாட்டோம்; உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்க மாட்டோம் என்பதைக் காட்டுகிறது. அதிலும், ஆளுநர் வாயிலாக ஆளுங்கட்சி சொல்வது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. அவர்கள் எப்படி உறுதியாக இருக்கிறார்களே, அதை விட ஆயிரம் மடங்கு தமிழக அரசு அணை கட்ட விடாமல் தடுப்போம் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்’’ என்றவரிடம்,
‘‘இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாக சர்ச்சை எழுந்திருக்கிறதே?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த துரைமுருகன், ‘‘இஸ்லாமியர் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவே இல்லை. யாரோ சிலப் பேர் பொய்ச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். நான் எந்த இடத்திலும் இஸ்லாமியர், இந்துவைப் பற்றி பேசவில்லை. நீங்கள் செய்தால்தான் நாங்கள் செய்வோம் என்று பொதுவாக மேடைகளில் பேசினேன். அப்படி சொல்வதுதான் ஆளுங்கட்சியின் வாடிக்கை’’ என்றார்.