Published:Updated:

வேலூர் நிலவரம் என்ன?

குமுறி அழும் துரைமுருகன்... மோடி புராணம் பாடும் ஏ.சி.எஸ்...

பிரீமியம் ஸ்டோரி

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு, துரைமுருகன் மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோரின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள்... என வேலூரில் திரும்பிய பக்கமெல்லாம் கட்சித் தலைவர்களின் தலைதான் தென்படுகிறது.

தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தைவிட பரபரப்பாகவும் படபடப்பாகவும் இருப்பது, அவரின் தந்தை துரைமுருகன்தான். மகனின் வெற்றிக்காக ஓடியாடி வேலை செய்கிறார். ‘‘வேலூர் கோட்டை, எப்போதும் தி.மு.க-வின் வெற்றிக் கோட்டை. கடந்த முறை சூழ்ச்சியால் தி.மு.க-வின் வெற்றி தள்ளிப்போனது. இந்த முறை எங்களின் வெற்றியைத் தட்டிப் பறித்துவிட முடியாது. வேலூரிலும் வெற்றிக் கதிரொளி வீசும்’’ என்று மு.க.ஸ்டாலினும் நம்பிக்கையாக இருக்கிறார்.

வேலூர் நிலவரம் என்ன?

தி.மு.க-வின் வியூகத்தை முறியடிக்க, தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர் களாக 209 பேரை வேலூரில் களமிறக்கி யிருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வதற்காக பி.ஜே.பி-யினரை விலக்கிவைக்கும்படி, அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் புதிய நிதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திடம் அ.தி.மு.க தலைமை அறிவுறுத்தியது என்கிறார்கள். எனினும், மத்திய மந்திரி கனவில் இருக்கும் ஏ.சி.எஸ், அதைப் பொருட்படுத்தவில்லை. பிரசார இடங்களில் மோடி புராணத்தை மறக்காமல் பாடுகிறார்.

இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் வன்னியர் மற்றும் முதலியார் சமூகத்தினர்தான். துரைமுருகன், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

ஏ.சி.சண்முகம், முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். தங்கள் சமூக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தங்களுக்குக் கிடைத்துவிட வேண்டும் என்று இரண்டு தரப்புகளும் தீவிரமாகச் செயல்படுகின்றன. இரு தரப்பினரும் தங்கள் சமூகத்தினரிடம், ‘‘நாமெல்லாம் சொந்தக்காரங்க. மறக்காம ஓட்டு போடுங்க’’ என்று உறவாடுகிறார்கள்.

‘‘தேர்தல் வெற்றிக்காக, என் ஒரே மகனை லாரி ஏற்றிக் கொல்லப் பார்த்தார்கள். அந்தத் துரோகி யாரென்று எனக்குத் தெரியும். என் வீட்டில் பணத்தைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, வருமானவரித் துறையை அனுப்பியது யார், எங்கள் வீட்டு வேலைக்காரனுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தது யார்... என்பதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால், பெயரைக் கூறமாட்டேன்’’ என்று துரைமுருகன் மேடைக்கு மேடை குமுறிக் குமுறி அழுகிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘‘தேர்தல் வந்துவிட்டாலே, துரைமுருகன் நடிப்பில் சிவாஜியையே மிஞ்சிவிடுகிறார். வாக்குப்பதிவுக்கு ஓரிரு நாள்கள் முன்பு, நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் அவர் அட்மிட்டானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்று ஏ.சி.சண்முகம் கிண்டலடிக்கிறார். ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் இருவரும் பாதுகாப்புக்காக பெளன்ஸர்கள் புடைசூழச் சுற்றுவதால், கூட்டணிக் கட்சியினரே அவர்களை நெருங்க முடியாமல் எரிச்சலடைகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சர்கள் கட்டுப்பாடற்ற முறையில் பேசிவருவதும் பொதுமக்களை எரிச்சலடைய வைக்கிறது. அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் பேசுகையில், ‘‘ஒரு சட்டைக்கு மறு சட்டை இல்லாத துரைமுருகனுக்கு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்தான் சட்டை, பேன்ட், ஷூ, வாட்ச் வாங்கிக் கொடுத்தார். அத்துடன் துரைமுருகன் மற்றும் முரசொலி மாறனுக்கு, கல்லூரியில் படிக்கப் பணமும் கொடுத்தார். நன்றி மறந்த துரைமுருகன், கருணாநிதியோடு சேர்ந்துகொண்டு சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தினார். அந்தத் துரோகிக்கு, உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். பொய், பித்தலாட்டம் செய்வதில், கருணாநிதியையே ஸ்டாலின் மிஞ்சி விட்டார்’’ என்றார்.

வேலூர் நிலவரம் என்ன?

அ.தி.மு.க-வினர் அடிமட்டம் வரை இறங்கி விமர்சித்தாலும், தி.மு.க-வினர் அமைதியாகவே இருக்கிறார்கள். இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் துரைமுருகனிடம் தொடர்ந்து கேட்டபோதெல்லாம், ‘‘மற்றவர்களைப் பற்றி நாங்கள் பேச மாட்டோம். நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். எங்களுக்குக் கவலையில்லை’’ என்றார் வழக்கமான பாணியில்.

சட்டமன்ற இடைத்தேர்தலில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது, தி.மு.க-வுக்குப் பலமான விஷயமாகச் சொல்லப் படுகிறது. குறிப்பிட்ட ஒரு சமூக இயக்கத்துக்கான தலைவராக மட்டுமே ஏ.சி.சண்முகம் பார்க்கப் படுவதாலும், பி.ஜே.பி மீதான சிறுபான்மையினரின் வெறுப்பும் பா.ம.க மீதான பட்டியலின மக்களின் விரோதமும் அ.தி.மு.க கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்குத் தடைக்கற்களாக உள்ளன. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் என்ற அடிப்படையில், அந்தத் தடைக்கற்களை உடைத்து, வெற்றிவாகை சூட அ.தி.மு.க தரப்பு போராடுகிறது. இதுவே, தி.மு.க தரப்பினரை உற்சாகம்கொள்ள வைத்துள்ளது.

இரண்டு தரப்பிலும் பணம் ஏகத்துக்கும் வாரி இறைக்கப்படுவதால், வேலூர் தொகுதியில் அனல் குறைந்தபாடில்லை!

நட்சத்திர ஹோட்டல் விருந்து!

அ.தி.மு.க-வின் தேர்தல் பொறுப்பாளர்களுக்கு, ஏ.சி.சண்முகத்தின் பென்ஸ் பார்க் நட்சத்திர ஹோட்டலில் தினமும் அறுசுவை விருந்து பரிமாறப்படுகிறது. தனித்தனியாகக் கவனிப்புகளும் நடக்கின்றன. இந்த நிகழ்வுகளில் பி.ஜே.பி-யினர் கலந்துகொள்வதில்லை. சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்று அ.தி.மு.க-வினரே முத்திரை குத்தியதால் கோபமடைந்த பி.ஜே.பி-யினர், ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய முன்வரவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு