Published:Updated:

‘ஆவி உடை; பின்னோக்கிய நடை; வயது 2 லட்சம் !’ - முதல் நாளிலே கலகலத்த வேலூர் வேட்புமனுத் தாக்கல்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

வேலூர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆவி உடை, பின்னோக்கிய நடையுடன் இரண்டு லட்சம் வயது என்று கூறிக்கொண்டு வந்த வேட்பாளர்களால் கலெக்டர் அலுவலகம் கலகலத்து போனது.

ஆவி உடை, பின்னோக்கிய நடையுடன் வந்த ‘மனிதன்’.
ஆவி உடை, பின்னோக்கிய நடையுடன் வந்த ‘மனிதன்’. ( ச.வெங்கடேசன் )

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனுக்கள் கலெக்டர் அலுவலகத்தில் பெறப்படுகின்றன. முதல் நாளான 11-ம் தேதி மொத்தம் 8 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இவர்களில் ஏ.சி.சண்முகத்தைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் விதவிதமான வேடங்களில் நையாண்டித்தனத்துடன் மனுத் தாக்கல் செய்யவந்திருந்தனர். 

வேலூர் ஆட்சியர் அலுவலகம்
வேலூர் ஆட்சியர் அலுவலகம்
ச.வெங்கடேசன்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அவர்கள் வந்திருந்தனர். கலெக்டர் அலுவலகத்துக்குள் ஒருவர் இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு பின்னோக்கியே வேகவேகமாக நடந்துவந்தார். அவர் அணிந்திருந்த உடை ‘திகில்’ திரைப்படங்களில் ‘ஆவிகள்’ அணிவதைப் போல் இருந்தது.

போலீஸார் மிரண்டுபோயினர். அவரைத் தடுத்துநிறுத்தி விசாரித்தனர். அதற்கு அவர், ‘‘என்னுடைய பெயர் ‘மனிதன்’. வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அக்ராகரம் கிராமத்தைச் சேர்ந்தவன். கடந்த 38 ஆண்டுகளாகப் பின்னோக்கிதான் நடக்கிறேன். உலக அமைதிக்காக 16 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்தேன்.

ஆவி உடை, பின்னோக்கிய நடையுடன் வந்த ‘மனிதன்’.
ஆவி உடை, பின்னோக்கிய நடையுடன் வந்த ‘மனிதன்’.
ச.வெங்கடேசன்

பிரதமர் பதவிக்காக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில்தான் மீண்டும் பேசத்தொடங்கினேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வயது 2,16,668 ஆகிறது. நான் பிரதமர் ஆன பிறகுதான் முன்னோக்கி நடப்பேன். இப்போது, நான் வேலூர் தேர்தலில் போட்டியிடுகிறேன். நிச்சயம் வெற்றிபெறுவேன்’’ என்றார்.

அடுத்து முறுக்கு மீசையுடன் வந்தார் ‘தேர்தல் மன்னன்’. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த பத்மராஜன் என்ற அவர், ‘‘நான் பஞ்சர் ஒட்டும் தொழில் செய்கிறேன். என்னை எல்லோரும் ‘தேர்தல் மன்னன்’ என்றுதான் அழைப்பார்கள். 32 ஆண்டுகளாகத் தேர்தல் அரசியலைச் சந்திக்கிறேன். 

  ‘தேர்தல் மன்னன்’ 
 பத்மராஜன்
‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன்
ச.வெங்கடேசன்

வார்டு கவுன்சிலர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிவரை அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளேன். இதோடு 204-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்கிறேன். நிச்சயம் தோல்வியடைவேன். அதில் வருத்தமில்லை’’ என்றார்.

இதேபோல், கோவையைச் சேர்ந்த நூர்முகம்மது மற்றும் அக்னி ராமச்சந்திரன் என்ற இருவரும் 33 -வது முறையாகத் தேர்தலை சந்திக்க வேட்புமனு தாக்கல் செய்தனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதியான ரமேஷ், ‘அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி’ சார்பில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகக் காந்தி வேடத்தில் வந்திருந்தார். 

காந்தி வேடத்தில் வந்த ரமேஷ்.
காந்தி வேடத்தில் வந்த ரமேஷ்.
ச.வெங்கடேசன்

அவர், தமிழ் மொழியில்தான் வேட்புமனு வேண்டும் என்று அடம்பிடித்ததால் அதிகாரிகள் கடுப்பாகினர். இதனால், வேட்புமனுத் தாக்கலின் முதல் நாளிலே கலெக்டர் அலுவலகம் கலகலத்தது!