Published:Updated:

வேலுார் ரிசல்ட்...விரைவில் மோதல்! ஆளும்கட்சி கூட்டணியின் ‘சீன்’ என்ன?

எடப்பாடியுடன் ஏ.சி.சண்முகம்
எடப்பாடியுடன் ஏ.சி.சண்முகம்

வேலூர் தேர்தல் முடிவு இப்படியானால் இப்படித்தான் பரஸ்பர குற்றச்சாட்டுகள் கிளம்பும் என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயமாகவே இருந்தது. இப்போது அதுவே நடந்தும்விட்டது.

ரொம்பவே எதிர்பார்த்த வேலூர் ரிசல்ட்டும் வந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் தி.மு.கவுக்குக் கிடைத்த வெற்றியை ஒப்பிடுகையில், வேலூரில் வெறும் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. ஆனாலும் தேர்தல் நிறுத்தம், ஆளும்கட்சியின் அசுரபலம், ஐ.டி.ரெய்டு, தேர்தல் கமிஷன் கெடுபிடிகள், உடன்பிறப்புகளின் உள்ளடி வேலைகள் எனப் பலவற்றையும் தாண்டி இந்த வெற்றியைப் பெற்றிருப்பதில், கதிர் ஆனந்த் கம்பீரமாய்த் தெரிகிறார்.

துரைமுருகன் வீடு
துரைமுருகன் வீடு

இதே தொகுதியில் கடந்த ஏப்ரலில் தேர்தல் நடந்திருந்தால் இன்னும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் வெற்றிபெற்றிருப்பார் என்பது நிச்சயம். இப்போது வாக்கு வித்தியாசம் இவ்வளவு குறைந்ததற்கு என்ன காரணமென்பதை தி.மு.க தலைமை ஆய்வுசெய்ய வேண்டியது கட்டாயம். உதயநிதிக்கு முன்னுரிமை, கனிமொழி புறக்கணிப்பு, கூட்டணிக் கட்சித் தலைவர்களை மதிக்காதது எனப் பல காரணங்களை இதற்கு அடுக்குகிறார்கள். வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குள் தி.மு.க தலைமை மாற்றிக்கொள்ள வேண்டியது என்று நிறைய விஷயங்களை மூத்த உடன்பிறப்புகளே பட்டியலிடுகிறார்கள். இனி, அது ஸ்டாலின் பாடு!.

ஸ்டாலின், கதிர் ஆனந்த்
ஸ்டாலின், கதிர் ஆனந்த்

குறைந்தவாக்குகள் வித்தியாசம்தான் என்றாலும் ஆளும்கட்சிக்குதான் இது பலமான அடி. முதல்வர் உட்பட அத்தனை அமைச்சர்களும் வேலூரில் முகாமிட்டும், வாக்குக்கு 800 ரூபாய் வீதமாக வாரிக்கொடுத்தும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது, ஆளும்கட்சி. இரட்டை இலை மீதிருந்த ஈர்ப்பு, டி.டி.வி.தினகரன் கட்சி, மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாதது எனப் பலவிதமான சாதக அம்சங்கள் இருந்தும் அ.தி.மு.க-வால் ஜெயிக்க முடியவில்லை என்பது சாதாரணமாகத் தட்டிக்கழித்துவிடுகிற விஷயமில்லை.

கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது, பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க ஆகிய ஆளும்கட்சிகள் மீதான அதிருப்தியைக் காரணமாகக் காட்டமுடிந்தது. அப்போதாவது, காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டுமென்று நினைத்து தமிழக வாக்காளர்கள் வாக்களித்ததாகக் கருதமுடியும். ஆனால், இப்போது வேலூருக்குத் தனியாகத் தேர்தல் நடந்திருக்கிறது. மோடிதான் இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பிரதமர் என்பது திட்டவட்டமாகத் தெரிந்த நிலையிலும் பி.ஜே.பி கூட்டணிக் கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்டாலினுடன் உதயநிதி
ஸ்டாலினுடன் உதயநிதி

நம் தொகுதிக்கு ஆளும்கட்சி எம்.பி இருந்தால் எவ்வளவு பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்துகொள்ள முடியாத அளவிற்கு தமிழக வாக்காளர்கள் கல்வியறிவோ, அரசியல் அறிவோ இல்லாதவர்களில்லை. அதையும் தாண்டி எதிர்க்கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள் என்றால், அதற்குப் பின் இருக்கிற காரணிகளை அலசி ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம், ஆளும்கட்சிகள் இரண்டுக்கும் இருக்கின்றன. அதை அவர்கள் இனியாவது செய்வார்களா, தவறுகளைத் திருத்திக்கொள்வார்களா என்பதில்தான் அந்தக் கட்சியின் நிகழ்காலமும் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

வேலூர் தொகுதியில் தள்ளிவைக்கப்பட்ட தேர்தல்தான் என்றாலும் இடைத்தேர்தலுக்குரிய கவனிப்பில்தான் அந்தத் தொகுதி இருந்தது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக அரசுத் துறைகள் சார்பில் அவசரஅவசரமாக வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசுக் கல்லூரி, ஜி.எஸ்.டி குறைப்பு என வாக்குறுதிகள் அள்ளித் தரப்பட்டன. அமைச்சர்கள் ஆளுக்கொரு பகுதியாகப் பிரித்துக்கொண்டு அதிதீவிரமாகக் களப்பணி செய்தார்கள். காசை இறைத்தார்கள். ஆனால் களத்தில் அ.தி.மு.க மட்டுமே ஒண்டிக்கட்டையாகத் தெரிந்தது. ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், தமிழிசை செளந்தரராஜன் எனக் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் யாருமே தொகுதிக்குள் எட்டிப்பார்க்கவேயில்லை.

எடப்பாடியுடன் ஏ.சி.சண்முகம்
எடப்பாடியுடன் ஏ.சி.சண்முகம்

தனிக்கட்சி நடத்துபவர் என்றாலும் அ.தி.மு.க சின்னத்தில் நின்றதால் அக்கட்சியின் வேட்பாளராக அறியப்பட்ட ஏ.சி.சண்முகம், இரட்டை இலைச் சின்னத்தைப் பற்றிப் பேசியதைவிட பி.ஜே.பியின் பெருமைகளைத்தான் அதிகம் பேசினார். ஆனால், அந்தக் கட்சியின் பெரிய தலைவர்கள் யாருமே தொகுதிக்குப் பிரசாரத்துக்கு வரவேயில்லை.

இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்க வேண்டுமென்றே பி.ஜே.பி தலைவர்கள் யாரையும் அ.தி.மு.க சார்பில் பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை என்று ஒரு காரணத்தைச் சொன்னார்கள், அ.தி.மு.க நிர்வாகிகள். நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கும் பி.ஜே.பி-யுடனான கூட்டணிதான் காரணமென்றும் பகிரங்கமாகவே பேசினார்கள். அதனால், ஏ.சி.சண்முகம் பி.ஜே.பி-யைக் கொண்டாடியதை அவர்களால் ஏற்கமுடியவில்லை.

ஒருவேளை ஏ.சி.சண்முகம் ஜெயித்துவிட்டால், அ.தி.மு.க தலைவர்களைவிட பி.ஜே.பி தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகிவிடுவார், தன்னுடைய செல்வம் மற்றும் செல்வாக்கைக் காண்பித்து மத்திய அமைச்சர் பதவியையும் வாங்கிவிடுவார் என்றும் அ.தி.மு.க-வுக்குள் பேச்சு உலவியது. இதுவே ஒரு தரப்பு, அ.தி.மு.க-வினரை ஏ.சி.சண்முகத்துக்கு எதிராகத் திருப்பிவிட்டதையும் மறுக்கமுடியாது.

இஸ்லாமியர்கள் வாக்குகளை எப்படியாவது வாங்க வேண்டுமென்பதற்காகவே நிறையவே மெனக்கெட்டது, அ.தி.மு.க தலைமை. இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளுக்கென பல்வேறு சிறப்பு வாக்குறுதிகளை எடுத்து வீசினார், எடப்பாடி பழனிசாமி. தேர்தலுக்கு முந்தைய நாள் வரையிலும் இஸ்லாமியர்களின் வாக்குகள், அப்படியே தி.மு.க-விற்குப் போக வாய்ப்பில்லை, நிச்சயமாக ஆளும்கட்சிக்கும் கணிசமாக வாக்குகள் கிடைக்குமென்றே நம்பப்பட்டது.

அதற்கான சூழலும் அப்போது இருந்தது. ஆனால் தேர்தல் நாளன்று காலையில்தான், காஷ்மீர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக அறிவித்தார், அமித் ஷா. அது காலை நேரத்திலேயே காட்டுத்தீயாகப் பரவியது.

காலையிலிருந்து மதியம் 1.00 மணி வரையிலும் மொத்தமாகவே 30 சதவிகித வாக்குகள்கூடப் பதிவாகாமல் இருந்தது. ஆனால் காஷ்மீர் மசோதா விவகாரம் தெரியவந்ததும் மதியத்துக்கு மேல் இஸ்லாமியர்கள் பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வாக்குச்சாவடிகளை நோக்கிக் குவிய ஆரம்பித்தனர். மதியம் 1 மணியிலிருந்து வாக்குப்பதிவு முடியும் வரையிலான நான்கே மணி நேரத்தில் 43 சதவிகித வாக்குகள் பதிவாகின. அப்போதே வேலூர் தேர்தல் ரிசல்ட் இப்படித்தான் இருக்குமென்பது தெரிந்துவிட்டது.

எடப்பாடியுடன் ஓ.பி.எஸ்.
எடப்பாடியுடன் ஓ.பி.எஸ்.

ஆளும்கட்சியைப் பொறுத்தவரையில், இந்தத் தோல்வி மிக முக்கியமான திருப்பமாக இருக்குமென்பதை எதிர்காலத்தில்தான் அவர்களால் உணரமுடியுமென்று தோன்றுகிறது. இந்தத் தொகுதியிலும் தோல்வியடைந்ததற்குத் தேர்தல் நாளன்று காஷ்மீர் விவகாரத்தை அறிவித்ததுதான் காரணமென்று அ.தி.மு.க நிர்வாகிகள் அடித்துச் சொல்கிறார்கள். இல்லாவிடில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது ஜெயித்திருக்க முடியுமென்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

ஆனால், இந்தத் தொகுதியில் தங்களுடைய வேட்பாளரும் நிற்கவில்லை, தங்களை பிரசாரத்துக்கும் அழைக்கவில்லை என்கிற வகையில் இந்தத் தோல்வியை பி.ஜே.பி தலைவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை. பணபலமும், சமுதாய வாக்குகள் பலமும் இருக்கும் ஒரு வேட்பாளரை நிறுத்தியும், அதிலும் ஒரேயொரு தொகுதியில் மட்டும் தேர்தல் நடக்கும் நிலையிலும் இப்படித் தோற்றிருப்பதை அ.தி.மு.க அரசின் மீதான மக்களின் அதிருப்தியாகத்தான் தமிழக பி.ஜே.பி தலைவர்கள் கருதுகிறார்கள்.

அமித் ஷாவுடன் ஓ.பி.எஸ்.
அமித் ஷாவுடன் ஓ.பி.எஸ்.

இதே நிலை நீடிக்கும்பட்சத்தில், வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்துத் தோல்வியைச் சந்திக்கவே நேரிடும் என்று பி.ஜே.பி தலைவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்த தமிழக பி.ஜே.பி தலைவர்கள் பலரும் இதை வலியுறுத்தியுள்ளனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவர், ‘‘தமிழகத்தில் இனியும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதில் எந்தப் பலனும் இல்லை. அப்படி வைத்துக்கொண்டால், அவர்களின் ஊழலுக்கு நாமும் சார்ந்துபோவதாகவே மக்கள் நினைப்பார்கள். நாம் ஊழலுக்கு எதிரானவர்கள் என்பதை மக்களிடம் சொல்ல வேண்டுமென்றால், முதலில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறுவதோடு, அ.தி.மு.க ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜே.பி.நட்டாவிடம் விளக்கினோம்.

மோடியுடன் அமித் ஷா, ஜே.பி.நட்டா
மோடியுடன் அமித் ஷா, ஜே.பி.நட்டா

அதற்கு அவர் பொறுமை காக்குமாறு அறிவுறுத்தினார். வேலூர் தேர்தல் முடிவுக்காகத்தான் பி.ஜே.பி தலைமையும் காத்துக்கொண்டிருந்தது. இப்போது தோல்வி என்று தெரிந்துவிட்டதால், இனிமேல் அ.தி.மு.க-வுடனான கூட்டணியை பி.ஜே.பி விரைவிலேயே முறித்துக்கொள்ளும். அதன்பின் அ.தி.மு.க ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் பற்றிய விசாரணைகள் சூடுபிடிக்கும்.

தவறுசெய்த அமைச்சர்கள்மீது கடும் நடவடிக்கைகள் பாயும். அத்தகைய நடவடிக்கைகளால் சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குள் பி.ஜே.பி-யின் செல்வாக்கு உயரும். அதனால் அந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க இல்லாத சில கட்சிகளுடன் கூட்டணிவைத்து தேர்தலைச் சந்திப்போம். கண்டிப்பாகக் கணிசமான வாக்குகளைப் பெறுவோம். நிச்சயமாக ஓரிரு இடங்களில் ஜெயித்து சட்டமன்றத்தில் கால்பதிப்போம்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அ.தி.மு.க தேர்தல் பிரிவு நிர்வாகி ஒருவரிடம் பேசினோம், ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் அடைந்த படுதோல்விக்கு பி.ஜே.பி மீதான மக்களின் வெறுப்பே முழுமுதல் காரணம். வேலூரில் தேர்தல் நடந்தநாளில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்பின்பே, இந்தத் தேர்தலில் வாக்களிக்கவே வேண்டாமென்று நினைத்திருந்த இஸ்லாமிய மக்களும் ஒருங்கிணைந்து வந்து தி.மு.க-வுக்கு வாக்களித்து எங்களைத் தோற்கடித்துள்ளனர். இல்லாவிட்டால் நாங்கள் நிச்சயம் ஜெயித்திருப்போம். இப்போது நாங்கள் அடைந்த தோல்விக்கும் பி.ஜே.பிதான் காரணம்!’’ என்றார்.

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

வேலூர் தேர்தல் முடிவு இப்படியானால், இப்படித்தான் பரஸ்பர குற்றச்சாட்டுகள் கிளம்பும் என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயமாகவே இருந்தது. இப்போது அதுவே நடந்தும்விட்டது. இந்த உரசல் எப்போது மோதலாக வெடித்து கூட்டணி உடையும், அடுத்து தமிழக அரசியலில் என்னென்ன திருப்பங்கள் நடக்கும் என்பதுதான் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான எதிர்பார்ப்பாக இருக்கிறது. அப்படி நிகழ்ந்தால், வேலூர் தேர்தல் முடிவு, தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாகப் பதிவிடப்படும்.

அடுத்த கட்டுரைக்கு