Election bannerElection banner
Published:Updated:

வேலுமணி ஸ்கெட்ச்.. கோவை மீண்டும் அதிமுக வசமானது எப்படி?

எடப்பாடி பழனிசாமி - வேலுமணி
எடப்பாடி பழனிசாமி - வேலுமணி

அ.தி.மு.க அளவுக்கு கள பலத்திலோ, பண பலத்திலோ தி.மு.க-வால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவர்களது உள்கட்சி பூசல் பிரச்னையும் கடைசிவரை தலைவலியாக இருந்தது. இதை சரியாக கணித்து வேலுமணி அமைத்த வியூகம் அ.தி.மு.க-வுக்கு கைகொடுத்துவிட்டது.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் சட்டசபை தேர்தலை இரண்டு கழகங்களும் சந்தித்து முடித்துள்ளன. திமுக 180-200 தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 150-160 தொகுதிகளில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. படுதோல்வி சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுவான எதிர்க்கட்சி என்ற வெற்றிகரமான தோல்வியை நோக்கி அதிமுக நகர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு கொங்கு மண்டலம் தான் காரணம். கடந்த சில சட்டசபை தேர்தல்களை போல இந்தத் சட்டசபை தேர்தலும் கொங்கு மண்டலம் அதிமுகவுக்கு கை கொடுத்துள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் க்ளீன் ஸ்வீப் ஆனபிறகு அ.தி.மு.க சுதாரித்துவிட்டது. அந்தத் தேர்தலில் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் தி.மு.க முன்னிலை பெற்றது. பா.ஜ.க கூட்டணி, பணம் சரியாக சென்று சேராதது என அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன.

கோவை
கோவை

கொங்கு தங்களின் கோட்டை என்பதாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பல்வேறு முக்கிய அமைச்சர்கள் இருப்பதால் அது அ.தி.மு.கவினருக்கு கவுரவ பிரச்னையானது.

இந்த தேர்தலில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு வேலுமணி தான் பொறுப்பாளர். அவர் கைகாட்டுபவர்கள்தான் வேட்பாளர். தனது பகுதியில் கூட்டணி கட்சிகளுக்கு சீட் இல்லை என கறாராக இருந்தார். இது பல்வேறு விவாதங்களை கிளப்பின. அதற்கெல்லாம் வேலுமணி அசரவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் பணம் சென்று சேர தனி நெட்வொர்க் அமைத்தனர் என்றெல்லாம் கூறப்பட்டது. குறைந்தபட்சம் ரூ.1000-ரூ.5000 வரை பணத்தை வாரி இறைத்தார் என்ற தகவலும் வந்தது.

தேர்தல் அறிக்கையை மட்டுமே பிரசார களத்திலும், சமூகவலைதளங்களிலும் அதிமுக தேர்தல் அறிக்கை தான் அவர்களின் ஒரே வியூகம். அதேநேரத்தில், கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தி.மு.கவை தாக்கவும் தவறவில்லை.

வேலுமணி - கார்த்திகேய சிவசேனாபதி
வேலுமணி - கார்த்திகேய சிவசேனாபதி

அ.தி.மு.க அளவுக்கு கள பலத்திலோ, பண பலத்திலோ தி.மு.க-வால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவர்களது உள்கட்சி பூசல் பிரச்னையும் கடைசிவரை தலைவலியாக இருந்தது. இதை சரியாக கணித்து வேலுமணி அமைத்த வியூகம் அ.தி.மு.க-வுக்கு கைகொடுத்துவிட்டது. மாலை 5 மணி நிலவரப்படி கோவையில் உள்ள 10 தொகுதிகளில் கோவை தெற்கு, கிணத்துக்கடவு தொகுதிளை தவிர மற்ற 8 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது. அங்கெல்லாம் அ.தி.மு.கவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு