Published:Updated:

விக்கிரவாண்டி: ஒரே ஒரு வேட்புமனு மட்டுமே தாக்கல்; ரௌடி கைப்பிள்ளை மீதான அச்சம்தான் காரணமா?!

விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம்

விக்கிரவாண்டி பேரூராட்சியின் 7-வது வார்டில் ஒரு மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்தப் பகுதி பிரபல ரௌடியின் மீதான அச்சமே காரணம் எனக் கூறப்படுகிறது.

Published:Updated:

விக்கிரவாண்டி: ஒரே ஒரு வேட்புமனு மட்டுமே தாக்கல்; ரௌடி கைப்பிள்ளை மீதான அச்சம்தான் காரணமா?!

விக்கிரவாண்டி பேரூராட்சியின் 7-வது வார்டில் ஒரு மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்தப் பகுதி பிரபல ரௌடியின் மீதான அச்சமே காரணம் எனக் கூறப்படுகிறது.

விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம்

தமிழகத்தில் நகர்ப்புற அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இன்று மாலை 5 மணி அளவில் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்களில் ஒன்றாக இருக்கிறது விக்கிரவாண்டி. இங்கு மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 7-வது வார்டுக்கான (பெண் பொது) வேட்புமனுத் தாக்கலை இன்று மாலை 3.30 மணி வரையில் எந்த ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் செய்யவில்லை.

வேட்புமனு தாக்கல் செய்த இளம்பெண்
வேட்புமனு தாக்கல் செய்த இளம்பெண்

இதற்கு காரணமாக, காவல்துறையால் தேடப்படும் பிரபல குற்றவாளி கைப்பிள்ளை (எ) வரதராஜின் பின்னணி இருப்பதாகக் கூறப்படுகிறது. விக்கிரவாண்டி வானியர் தெருவைச் சேர்ந்த வரதராஜின் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என 19 வழக்குகள் வரை இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. விழுப்புரம், விக்கிரவாண்டி, வளவனூர், திண்டிவனம் போன்ற காவல் நிலையங்களில் இவர் மீது இந்த வழக்குகள் இருக்கின்றதாம். விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் தாலுகா காவல்நிலையங்களில் உள்ள வெவ்வேறு வழக்குகளில் இவர் தேடப்பட்டு வருவதாகவும், இவர் மீது சரித்திர பதிவேடு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இவர் தன் மனைவியை 7-வது வார்டில் வேட்பாளராக நிறுத்துவதற்கு முயற்சிகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், வரதராஜ் மீதுள்ள அச்சத்தால்அரசியல் கட்சியினர் முதற்கொண்டு வேறு யாரும் இந்த வார்டில் போட்டியிட முன்வரவில்லையாம். இவர் மனையின் மீதும் குற்ற வழக்குகள் இருக்கிறதாம். அதனால் கணவன் மனைவி இருவருமே தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே, யார் இந்த வார்டில் வேட்புமனுத் தாக்கல் செய்ய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இன்று மாலை வரை இருந்து வந்தது. பிரச்னைகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

போலீஸ் பாதுகாப்பு
போலீஸ் பாதுகாப்பு

சுமார் 3.30 மணியளவில், விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த இளம் பெண் ஆனந்தி என்பவர், 7-வது வார்டில் தி.மு.க சார்பாக வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், தி.மு.க தலைமை வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இந்த 7-வது வார்டு இடம் பெறாமலே இருந்தது. தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கும் இந்த இளம் பெண், வரதராஜ் மனைவியின் தங்கைதான் எனக் கூறப்படுகிறது. வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், வேட்புமனு பரிசீலனை முடிவில் வரதராஜின் உறவினரான அந்தப் பெண், போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.