Published:Updated:

`275 வாக்குச்சாவடி மையங்கள்; தேர்தல் பணியில் 1,333 பேர்!' - பரபரக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், உடனே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

Villupuram collector Subramaniyan
Villupuram collector Subramaniyan ( T. Silambarasan )

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ -வாக இருந்த தி.மு.க-வின் ராதாமணி, உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். அதனால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல், அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

Election department of india
Election department of india
Vikatan

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், “விக்கிரவாண்டி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 23-ம் தேதி தொடங்குகிறது. 30-ம் தேதி வரை வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள், அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்படும்.

வாக்குப் பதிவு அக்டோபர் 21-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதியும் நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இன்று முதல், மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை 1,11,607 ஆண் வாக்காளர்கள், 1,11,546 பெண் வாக்காளர்கள், 25 திருநங்கைகள் என மொத்தம் 2,23,178 பேர் உள்ளனர். தொகுதியில் 139 இடங்களில் 275 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Vikkiravandi Ex MLA
Vikkiravandi Ex MLA
T. Silambarasan

இதில், கடந்த மக்களவைத் தேர்தலின்போது கண்டறியப்பட்ட, மிகவும் பதற்றமான 24 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளைக் கண்காணிப்பதற்காக மாவட்டம் முழுவதும் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் 3 இடங்களில் பறக்கும்படை, 3 இடங்களில் நிலையான கண்காணிப்புக் குழு என மொத்தம் 9 பறக்கும்படை, 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8 மணி நேர ஷிஃப்ட் முறையில் இவர்கள் பணியாற்றுவார்கள். மாவட்டம் முழுவதும் 39 பறக்கும்படை, 39 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 275 வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேவையான 658 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 544 கன்ட்ரோல் யூனிட்ஸ், 528 விவிபேட் இயந்திரம் முதல்கட்ட பரிசோதனை முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 1,333 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்” என்றார்.