Published:Updated:

மாவட்ட பொறுப்பாளர் vs மாநகர பொறுப்பாளர் vs முன்னாள் எம்.எல்.ஏ! -திருப்பூர் மேயர் ரேஸில் யார் யார்?

திருப்பூர் மேயர் ரேஸ்

50 ஆயிரம் கோடி அளவிற்கு ஜவுளி பிசினஸ் நடந்துவரும் திருப்பூர் மாநகராட்சிப் பகுதி முழுக்க சீர்கெட்டுக் கிடக்கிறது. சாலை, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும்.

மாவட்ட பொறுப்பாளர் vs மாநகர பொறுப்பாளர் vs முன்னாள் எம்.எல்.ஏ! -திருப்பூர் மேயர் ரேஸில் யார் யார்?

50 ஆயிரம் கோடி அளவிற்கு ஜவுளி பிசினஸ் நடந்துவரும் திருப்பூர் மாநகராட்சிப் பகுதி முழுக்க சீர்கெட்டுக் கிடக்கிறது. சாலை, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும்.

Published:Updated:
திருப்பூர் மேயர் ரேஸ்

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக-வின் கோட்டையாக இருந்தது திருப்பூர். 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே தி.மு.க., வெற்றி பெற்றது. இன்னும் சொல்லப் போனால் 2021 சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் மாநகரில் உள்ள 60 வார்டுகளில் சுமார் 10 வார்டுகளில் மட்டுமே தி.மு.க., அ.தி.மு.க.,வை விட அதிக வாக்குகளைப் பெற்றது. கட்சி ரீதியாகவே திருப்பூரில் தி.மு.க.,வுக்கு அடிப்படையான கட்டமைப்புகள் இல்லாத நிலை. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கையில் திருப்பூரில் தி.மு.க.,வின் வெற்றி எந்தளவிற்கு இருக்கும்?’.... என எழுந்த சந்தேகங்களுக்கெல்லாம் சம்மட்டி அடியாய் திருப்பூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

திருப்பூர்
திருப்பூர்

குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க., - 24, இந்திய கம்யூனிஸ்ட் - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1, காங்கிரஸ் - 2, ம.தி.மு.க., - 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1 என தி.மு.க., கூட்டணி மொத்தம் 37 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அ.தி.மு.க., கூட்டணி 19 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 60 வார்டுகளிலிலும் தனித்து நின்ற பா.ஜ.க., 2 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

அ.தி.மு.க., சார்பில் சீட் கிடைக்காததால் வார்டு எண் 10-ல் சுயேச்சையாகப் போட்டியிட்ட பிரேமலதாவும், தி.மு.க., சார்பில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேலம்மாளும் வெற்றி பெற்றிருக்கின்றனர். பெரும் பரபரப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே தி.மு.க., கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் கரன்சி கொட்டும் டாலர் சிட்டியான திருப்பூரின் மேயர் பதவி தி.மு.க.,வுக்கு கிடைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருப்பூர்
திருப்பூர்

2008-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு திருப்பூர் மாநகராட்சியானது. தொடர்ந்து அப்போது நகர்மன்றத் தலைவராக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த செல்வராஜ் முதல் மேயராகப் பதவி வகித்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகரட்சிக்கு 2011-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று, விசாலாட்சி திருப்பூர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை திருப்பூர் மாநகராட்சியை தி.மு.க., கைப்பற்றியிருக்கிறது. திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவி பொது ஒதுக்கீடு செய்யப்பட்டிப்பதால், தி.மு.க.,வில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் யார் திருப்பூரின் மேயர் நாற்காலியில் அமரப் போகிறார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே மேயர் ரேஸில் யார் யாரெல்லாம் தீவிரமாக இருக்கிறார்கள்?... யாருக்கு மேயராகும் வாய்ப்பு இருக்கிறது!... என களத்தில் இறங்கி விசாரித்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

49-வது வார்டில் வெற்றி பெற்ற தினேஷ்குமார், 41-வது வார்டில் வெற்றி பெற்ற இல.பத்மநாபன், 46-வது வார்டில் வெற்றி பெற்ற கோவிந்தசாமி ஆகிய மூவர் தான் மேயர் நாற்காலியைப் பிடிக்கும் முனைப்பில் தீவிரமாக இருக்கின்றனர். இவர்கள் மூவரில் ஒருவருக்குத் தான் திருப்பூர் மேயராகும் வாய்ப்பும் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்த உடன் பிறப்புகள்.

இல.பத்மநாபன்
இல.பத்மநாபன்

இல.பத்மநாபன்:

இல.பத்மநாபன் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக இருக்கிறார். மாநகராட்சித் தேர்தலில் 41-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகியிருக்கிறார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தீவிரமான ஆதரவாளர். அமைச்சர் சாமிநாதனின் நிழலானவர். எப்படியாவது அமைச்சர் சாமிநாதன் மூலமாக மேயர் பதவியைப் பிடித்திட காய் நகர்த்தி வருகிறார்.

ஆனால், திருப்பூர் மேயராக பத்மநாபன் வருவதை உடன்பிறப்புகளே ரசிக்கவில்லை என்கிறார்கள். திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளில் 50 வார்டுகள் திருப்பூர் மாநகரப் பகுதிக்குள் தான் வருகின்றன. மீதமுள்ள 10 வார்டுகள் மட்டும் தான் இல.பத்மநாபன் மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் பல்லடம் தொகுதிக்குள் வருகிறது. வெறும் 10 வார்டு கவுன்சிலர்கள் இருக்கும் பகுதியில் இருந்து வரும் இல.பத்மநாபனுக்கு மேயர் வாய்ப்பு கொடுப்பதை விட, 50 வார்டுகள் உள்ள மாநகர் பகுதியில் இருந்து கவுன்சிலரான ஒருவருக்கு தான் மேயர் வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்கும் என்கின்றனர்களாம்.

மேலும், அமைச்சர் சாமிநாதனுடைய ஆதரவாளரான பத்மநாபனுக்கு மேயர் பதவி கொடுத்தால், அது ஏற்கனவே அமைச்சர் சாமிநாதனுக்கும் எம்.எல்.ஏ செல்வராஜிக்கும் நடக்கும் உட்கட்சி மோதலில் கூடுதல் சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். இதற்கிடையே செல்வராஜை ஓரம்கட்ட இல.பத்மநாபனை மேயராக்க வேண்டுமென அமைச்சர் சாமிநாதன் தரப்பு தீவிரம் காட்டுகிறது.

தினேஷ்குமார்
தினேஷ்குமார்

தினேஷ்குமார்:

தினேஷ்குமார் திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க., பொறுப்பாளராக இருக்கிறார். மாநகராட்சித் தேர்தலில் 49-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகியுள்ளார். தே.மு.தி.மு.க.,விலிருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்த சில வருடங்களிலேயே உழைப்பால் கிடுகிடுவென உயர்ந்து கட்சியில் முக்கிய இடத்தைப் பிடித்தவர். 'இளைஞரான எனக்கு ஒரே ஒரு தடவை வாய்ப்பு கொடுத்துப் பாருங்க. திருப்பூர்ல தி.மு.க.,வோட பவர் என்னன்னு காட்டுறேன்' எனச் சொல்லி வருகிறார். திருப்பூர் அரசியலின் புள்ளிவிபரத்தை கையில் எடுத்துக்கொண்டு கட்சி தலைமையைச் சந்தித்த தினேஷ்குமார், மேயர் பதவிக்காக ஸ்மார்ட்டாக காய்நகர்த்தி வருகிறாராம்.

அமைச்சர் சாமிநாதன் மற்றும் எம்.எல்.ஏ செல்வராஜ் என இரண்டு கோஷ்டியிலும் சிக்காமல் பொதுவானவராக வலம் வருபவர். மேயர் பதவிக்கான ரேஸில் உள்ள இல.பத்மநாபன், கோவிந்தசாமி ஆகியோர் பெற்ற வெற்றியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் (2969 வாக்குகள்) வெற்றி பெற்று மேயர் பதவி கிடைக்குமென்ற பெரும் நம்பிக்கையில் இருக்கிறார்.

இதற்கிடையே திருப்பூரில் தங்களைத் தாண்டி வேறு யாரும் வளர்ந்துவிடக் கூடாது என எம்.எல்.ஏ செல்வராஜூம், அமைச்சர் சாமிநாதனும் கேங் வார் நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் தினேஷ்குமாருக்கு மேயர் பதவி கிடைப்பதற்கு நிச்சயமாக தடையாக இருப்பார்கள். இந்த அரசியலுக்கு இடையே தான், இளைஞரணி ரூட் மூலம் தினேஷ்குமாருக்கு மேயராகும் வாய்ப்பும் இருக்கிறதாம்

எம்.எல்.ஏ செல்வராஜ்
எம்.எல்.ஏ செல்வராஜ்

கோவிந்தசாமி:

கோவிந்தசாமி தொ.மு.சவின் மாநில நிர்வாகியாக இருக்கிறார். 46-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகியிருக்கிறார். 2006 தேர்தலில் சி.பி.எம் சார்பில் திருப்பூரில் எம்.எல்.ஏ ஆனவர். அதன்பிறகு சி.பி.எம் கட்சியிலிருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது 46-வது வார்டில் கவுன்சிலர் ஆகியிருக்கும் கோவிந்தசாமிக்கு, முதலில் தலைமை சீட்டே கொடுக்கவில்லை. இந்த 46-வது வார்டில் எம்.எல்.ஏ செல்வராஜின் மைத்துனர் ரவி தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதனையடுத்து தலைமையில் பேசி போராடி ரவியிடம் இருந்து வார்டை பறித்து தான் கோவிந்தசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ‘எம்.எல்.ஏ செல்வராஜ் மைத்துனருக்கு தலைமை அறிவித்த கவுன்சிலர் சீட்டையே, தலைமையிடம் பேசி எனக்குக் கேட்டு வாங்கினேன். அதே செல்வாக்கில் மேயர் பதவியையும் வாங்கிக் காட்டுகிறேன்!’ என நெருக்கமானவர்களிடம் சொல்லிவரும் கோவிந்தசாமி, ‘வயசாகிடுச்சி, எனக்கு கடைசியா ஒரு மேயர் வாய்ப்பு மட்டும் கொடுங்க!’ என தலைமையிடமும் மூச்சைப் போட்டு வருகிறாராம்.

அமைச்சர் சாமிநாதன்
அமைச்சர் சாமிநாதன்

டாலர் சிட்டியின் மேயர் யார்?

எம்.எல்.ஏ செல்வராஜின் சகாப்தத்தை இத்தோடு முடிக்க வேண்டுமென தன்னுடைய ஆதரவாளர் இல.பத்மநாபனை மேயராக்கத் துடிக்கும் அமைச்சர் சாமிநாதன் காய் நகர்த்தல் ஒருபக்கம். சி.பி.எம் கட்சியில் 2006-ல் எம்.எல்.ஏவாகி, தி.மு.க.,வில் இணைந்து 2011-ல் எம்.எல்.ஏ சீட் வாங்கி தோல்வியடைந்து ‘கடைசியாக மேயர் வாய்ப்பாவது கொடுங்கள்’ எனக் கேட்கும் கோவிந்தசாமியின் முயற்சி ஒருபக்கம். ‘அதிக வாக்குகள் வித்தியாசத்துல ஜெயிச்சிருக்கேன். இளைஞரான எனக்கு ஒரே ஒரு தடவை வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள்’ என நம்பிக்கையுடன் தலைமையிடம் பேசிவரும் தினேஷ்குமார் மற்றொருபுறம்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க வருடத்திற்கு 50 ஆயிரம் கோடி அளவிற்கு ஜவுளி பிசினஸ் நடந்துவரும் திருப்பூர் மாநகராட்சிப் பகுதி முழுக்க சீர்கெட்டுக் கிடக்கிறது. சாலை, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். அதனை தீவிரமாகக் கையிலெடுத்து துடிப்புடன் மக்கள் பிரச்னைகளுக்காக செயல்படக்கூடிய நபரை மேயர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதே சாமானியர்களின் கருத்தாக இருக்கிறது!