Published:Updated:

நாங்குநேரி இடைத்தேர்தல்... கடும் போட்டியில் அ.தி.மு.க., காங்கிரஸ்!

Nanguneri board
Nanguneri board ( L.Rajendran )

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றியைக் கைப்பற்ற ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வும் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸும் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன. இருதரப்பினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான ஹெச்.வசந்தகுமார், குமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனால் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது.

`நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு  ஆதரவு கேட்ட ஏழு அமைச்சர்கள்!’ - கைவிரித்த ஜான் பாண்டியன்
1952 முதல் நடைபெற்ற தேர்தல்களில் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஆறு முறையும் அ.தி.மு.க ஐந்து முறையும் வெற்றியைக் கைப்பற்றி இருக்கின்றன.
நாங்குநேரி தொகுதி புள்ளிவிவரம்

நாங்குநேரி தொகுதியைப் பொறுத்தவரையிலும், 1952 முதல் 2016 வரை 15 தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. அதில், காங்கிரஸ் ஆறு முறையும் அ.தி.மு.க ஐந்து முறையும் வெற்றிபெற்றுள்ளன. தி.மு.க இரண்டு முறையும், ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒருமுறையும் வெற்றிபெற்றிருக்கின்றன. கடந்த மூன்று தேர்தல்களில் தொடர்ச்சியாக வெளியூர் வேட்பாளர்களே வெற்றியைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.

நாங்குநேரி தொகுதியில் 2,57,140 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய இந்தத் தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்காக நாங்குநேரியில் சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் 20 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பெயரளவுக்குக்கூடத் தொழிற்சாலைகள் வரவில்லை.

`அவர் இறக்குமதி வேட்பாளர்; இவர் `மேட் இன் நாங்குநேரி'!'- காங்கிரஸ் வேட்பாளரைக் கலாய்த்த ஜெயக்குமார்!
நாங்குநேரி ஊர் பெயர்ப் பலகை
நாங்குநேரி ஊர் பெயர்ப் பலகை
எல்.ராஜேந்திரன்

நாங்குநேரி பேருந்து நிலையத்தில் எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. நான்கு வழிச்சாலையில் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் ஊருக்குள் வருவதில்லை. நாங்குநேரி வழியாக 24 ரயில்கள் கடந்துசெல்கின்றன. ஆனால், ஆறு ரயில்கள் மட்டுமே நாங்குநேரியில் நின்று செல்கின்றன. வேலைவாய்ப்புக்கு வழியில்லாததால் இந்தப் பகுதி மக்கள் வெளிமாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் வேலைதேடிச் செல்லும் நிலையே உள்ளது.

தொகுதிக்குள் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் நிலவுகிறது. தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்புத் திட்டம் ஆமை வேகத்தில் செல்வதால் இப்பகுதி மக்களுக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. நாங்குநேரி தொகுதிக்குள் மட்டும் சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 50 லட்சம் வாழை பயிரிடப்படுகிறது. அவற்றைப் பாதுகாத்து வைக்கும் மையம் மற்றும் மதிப்புக்கூட்டும் பொருள்கள் செய்யும் தொழிற்சாலைகள் தேவை என்பது தொகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு.

அ.தி.மு.க வேட்பாளருக்கு முதல்வர் பிரசாரம்
அ.தி.மு.க வேட்பாளருக்கு முதல்வர் பிரசாரம்
எல்.ராஜேந்திரன்

தொகுதி மக்களின் இத்தகைய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அ.தி.மு.க வேட்பாளராக நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோருக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் வேட்பாளராக ராஜ்நாராயணன், பனங்காட்டுப்படை வேட்பாளராக ஹரிநாடார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இது தவிர, பேராயர் காட்ப்ரே நோபுள், பெண் வேட்பாளரான லிடியா உட்பட மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருந்த ஹெச்.வசந்தகுமார் இந்தத் தொகுதி மக்களிடம் நல்ல தொடர்பில் இருந்தார். தனது சொந்த நிதியில் குழந்தைகளுக்கு டியூசன் சென்டர், குளங்களைச் சீரமைத்தல் போன்ற பணிகளைச் செய்தார். அதன்மூலம் தனக்கு வெற்றி கிடைக்கும் எனக் காங்கிரஸின் ரூபி மனோகரன் நம்புகிறார். கூட்டணிக் கட்சியான தி.மு.க-வினர் தேர்தல் பொறுப்பாளர் ஐ.பெரியசாமி தலைமையில் தீவிரமாக வாக்கு சேகரிக்கிறார்கள். ஸ்டாலின் பிரசாரமும் இந்தத் தொகுதியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக காங்கிரஸார் நம்புகிறார்கள்.

ஸ்டாலினுடன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்
ஸ்டாலினுடன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்
எல்.ராஜேந்திரன்

இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரி தொகுதியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் 15 அமைச்சர்கள் முகாமிட்டுத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வுக்காக எம்.எல்.ஏ-க்கள்., எம்.பி-க்கள் எனப் பெரும்படையே களமிறக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதி முழுவதும் வலம் வந்து பிரசாரம் செய்திருக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க வேட்பாளருக்காகப் பிரசாரம் செய்துள்ளார்.

இந்தத் தொகுதியில் இருக்கும் நாடார் வாக்குகளைக் குறிவைத்து, ராக்கெட்ராஜாவின் பனங்காட்டுப்படை சார்பாக ஹரிநாடார் களமிறங்கியுள்ளார். அதைச் சமாளிக்கும் வகையில், மறைந்த கராத்தே செல்வின் மனைவியான வயோலா செல்வின் நிர்வாகியாக இருக்கும் காமராஜர் ஆதித்தனார் கழகத்தைக் களத்தில் இறக்கியிருக்கிறது, காங்கிரஸ் கட்சி.

`2,56,414 வாக்காளர்கள்; 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!' - நாங்குநேரி இடைத்தேர்தல் அப்டேட்
இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளருக்குப் புதிய தமிழகம் ஆதரவு கிடையாது. எங்கள் கட்சியின் கொடியை யாரும் பயன்படுத்தக் கூடாது.
டாக்டர்.கிருஷ்ணசாமி

இதனிடையே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த டாக்டர்.கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கவில்லை. அத்துடன், ஆதி திராவிடர் பட்டியல் இனத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேற்றப்படாததால் அந்தச் சமூகத்தினர் ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் உள்ளனர்.

இதை எல்லாம் சமாளிக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். சிறுபான்மையினர் வாக்குகளைக் குறிவைத்து சி.எஸ்.ஐ தேவாலயத்தின் பேராயரை ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சி.எஸ்.ஐ திருமண்டல லே செயலாளரான வேதநாயகத்தைச் சந்தித்துப் பேசினார்.

சைவ வேளாளர் சங்கத்தினருடன் முதல்வர்
சைவ வேளாளர் சங்கத்தினருடன் முதல்வர்

நாங்குநேரி தொகுதியில் பரவலாக இருக்கும் சைவ வேளாளர் சமுதாயத்தின் வாக்குகளை ஒட்டுமொத்தமாகக் கவரும் வகையில், அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் புளியரை ராஜா மற்றும் நிர்வாகிகளை முதல்வர் எடப்பாடி சந்தித்துப் பேசினார். அப்போது இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு