Published:Updated:

‘‘இது இனவாதிக்கான போட்டி!”

இலங்கை அதிபர் தேர்தல்... ஜெயிக்கப்போவது யாரு?

பிரீமியம் ஸ்டோரி

இந்த இதழ் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும்போது, இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும். நவம்பர் 16-ம் தேதி நடக்கும் வாக்குப்பதிவின் முடிவுகள், 18-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன.

35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சிக் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும், இலங்கை ஐக்கிய தேசிய முன்னணி கட்சிக் கூட்டணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையேதான் பலத்த போட்டி. இலங்கையின் இடதுசாரி இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அனுரா குமார திசாநாயக்க தனித்து நிற்பதால், வாக்குகள் பிரிந்து கடும் போட்டி நிலவும் வாய்ப்பிருக்கிறது. இது வெற்றியின் திசையையும் மாற்றலாம்.

நம் ஊரில் தேர்தலுக்குத் தேர்தல் கட்சிகள் மாறி மாறி கூட்டணி அமைத்துக்கொள்வது போலவே, இலங்கையிலும் நடைபெறுகின்றன. கடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்‌சேவை வீழ்த்த தனித்துப் போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனா, இப்போது ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயவுக்கு ஆதரவு அளிக்கிறார். 2004-ம் ஆண்டு தேர்தலில் ரணிலை நீக்கி மகிந்த ராஜபக்‌சேவை பிரதமராக்கிய அப்போதைய அதிபர் சந்திரிகா, இப்போது கோத்தபயவை வீழ்த்த ரணிலின் கூட்டணி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்திருக்கிறார்.

Gotabhaya Rajapaksa
Gotabhaya Rajapaksa

2015-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மகிந்த ராஜபக்‌சே `இலங்கை பொதுஜன முன்னணி’ என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் சிறிது காலம் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்த ராஜபக்‌சேவுக்கு பெரும் ஊக்கமளித்தவை, அந்தக் கட்சிக்குச் சாதகமாக அமைந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்தான். சரிவில் இருந்த ராஜபக்‌சேவுக்கு இது பெரும் எழுச்சியாகப் பார்க்கப்பட்டது. மறுபுறம் ஆரம்பம் முதலே பொருந்தாக் கூட்டணியாக நிலவிவந்த ரணில் - மைத்திரி தற்காலிகக் கூட்டு, கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. ரணிலை நீக்கிவிட்டு பெரும்பான்மை இல்லாத ராஜபக்‌சேவை பிரதமராக நியமித்தது, நாடாளுமன்றத்தை முடக்கியது... என இலங்கையை அரசியல் நெருக்கடிக்கு உள்ளாக்கினார் சிறிசேனா. உச்ச நீதிமன்றம் தலையிட்டு சிக்கலைத் தீர்த்துவைக்க, ரணில் மீண்டும் பிரதமர் ஆனார்.

தேன்கூட்டில் எறிந்த கல்லாக இலங்கையில் வந்து விழுந்தது ஈஸ்டர் குண்டுவெடிப்புச் சம்பவம். போர் கண்ட பூமியில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொள்ளுமோ என அனைத்து தரப்புகளும் அஞ்சத் தொடங்கின. அதிபர் தேர்தலைத் தள்ளிவைப்பதற்கான சதி நடந்ததாகவும் சர்ச்சைகள் கிளம்பின. போர்க்குற்றம் சுமத்தப்பட்டிருந்த சவேந்திர சில்வாவை கடந்த ஆகஸ்ட் மாதம் ராணுவத் தளபதியாக நியமித்தார் சிறிசேனா. போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகியும் காணாமல் போனவர்களின் நிலை பற்றி எந்தத் தகவலும் இல்லை. போர்க்குற்றம் தொடர்பான விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. போர்க்குற்ற விசாரணைக்கு ஐ.நா-வில் மேலும் கால அவகாசம் கேட்டுக் கொண்டிருக்கிறது இலங்கை. இப்படியான சூழலில்தான், அதிபர் தேர்தலை இலங்கை சந்திக்கிறது.

Sajith Premadasa
Sajith Premadasa

இரு தரப்பின் தேர்தல் பிரசாரம், தமிழர் பிரச்னைகளுக் கான தீர்வு, தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு ஆகியவை குறித்து இலங்கை எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான நிலாந்தனிடம் கேட்டோம். ‘‘2015 தேர்தல் சூழ்நிலை வேறு. அப்போது ரணில் போன்ற மிதவாதிகளுக்கு ஆதரவான நேர்மறையான அலை வீசியது. மக்கள் மத்தியிலும் மாற்றத்துக்கான தேவை இருந்தது. ராஜபக்‌சேவுக்கு எதிரான வலுவான அணியும் களத்தில் இருந்தது. ஆனால் ஈஸ்டர் தாக்குதல், கூட்டணிப் பிளவு போன்ற சம்பவங்களுக்குப் பிறகு நிலைமை மாறியிருக்கிறது. தற்போதைய தேர்தல், யார் மிகப்பெரிய சிங்களப் பேரினவாதி என்பதற்கானதே. அந்த அளவு கோலில் சஜித்தைக் காட்டிலும் ராஜபக்‌சே சற்று முன்னிலை வகிப்பார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியைவைத்தே ராஜபக்‌சே இலங்கையில் வாழ்நாள் முழுவதும் அரசியல் செய்யலாம். ஒரு சிங்களப் பேரினவாதிக்கான சாதனையாக யுத்த வெற்றியைவிட வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே, பெரும்பான்மை சிங்கள வாக்குகளைப் பெறுவது, சஜித்துக்கு கடும் சவாலாகவே இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேர்தல் பிரசாரத்தில் சிங்களப் பெரும்பான்மை வாதத்தை கோத்தபய ராஜபக்‌சே தரப்பு மிகத் தீவிரமாக முன்னெடுத்தது. போர்க்குற்ற விசாரணையில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என, தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்தனர். மறுபுறம், மிதவாதத் தரப்பாகப் பார்க்கப்படும் சஜித் பிரேமதாசா, தமிழர் பிரச்னையில் மௌனம் காக்கும் அதே வேளையில் சிங்கள வாக்குகளைக் கவரவும் முயன்றார்.

Nilanthan
Nilanthan

சிறிதுகாலம் முன்பு வரை தமிழர்களின் நிலைப்பாடு என்ன எனத் தெரியாமலேயே இருந்தது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சஜித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்க் கட்சிகளின் சஜித் ஆதரவைவைத்தே சிங்கள வாக்குகளை மடைமாற்றும் முயற்சியிலும் இறங்கியிருந்தார் ராஜபக்சே. முஸ்லிம் மற்றும் தமிழர்களின் வாக்குகளும் சிதறிப்போக வாய்ப்புகள் உள்ளன. தமிழர்களின் வாக்கு முழுவதுமாகச் சிதறாமல் சஜித்துக்கு விழுந்தால், போட்டி சற்று கடுமையாக இருக்க வாய்ப்புண்டு. தமிழர்களின் வாக்கு என்பதும் ராஜபக்‌சே எதிர்ப்பு வாக்காகவே இன்று வரை பார்க்கப்படுகிறது. சஜித் தரப்பும், ‘தமிழர் வாக்குகள் தங்குதடையின்றி நமக்குக் கிடைத்துவிடும்’ என்றே நினைக்கிறது.

இனப்பிரச்னைக்கான தீர்வு, யாருடைய தேர்தல் அறிக்கையிலும் இல்லை. அதற்கு மாற்றாக பொருளாதாரத் தீர்வைத்தான் முன்வைக்கின்றனர். தமிழர்களின் அரசியல் பலவீனமாக இருப்பதே அதற்குக் காரணம். வெற்றியைத் தீர்மானிப்பதில் தமிழர்களின் வாக்கு முதன்மையானது. தமிழர்கள் தங்களுக்கென தனி வேட்பாளரை நிறுத்தியிருந்தால், அவர் வெற்றி பெறுவது சாத்தியமில்லைதான். ஆனாலும், சிங்களத் தரப்பிடம் தங்களது கோரிக்கைகளுக்காக பேரம் பேசுவதற்கு அது சிறந்த கருவியாக இருந்திருக்கும். அவ்வாறு துணிந்து அரசியல் செய்ய எந்த ஒரு தமிழ்க் கட்சியும் முன்வரவில்லை” என்றவர், பிற நாடுகளின் நிலைப்பாட்டையும் பகிர்ந்துகொண்டார்.

தற்போதைய தேர்தல், யார் மிகப்பெரிய சிங்களப் பேரினவாதி என்பதற்கானதே. அந்த அளவுகோலில் சஜித்தைக் காட்டிலும் ராஜபக்‌சே சற்று முன்னிலை வகிப்பார்.

“சுப்பிரமணியன் சுவாமி, ‘இந்தியாவும் ரா அமைப்பும் தற்போதைய தேர்தலில் தலையிடாமல் இருப்பது வரவேற்கத்தக்கது’ எனக் கூறியிருக்கிறார். வடக்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் ஆதரவு ஏதாவது ஒரு தரப்புக்கு இல்லாமல் இருக்காது. ராஜபக்‌சேவின் சீன நெருக்கம் உலகறிந்தது. தற்போது இலங்கையின் அடையாளமே சீனமயமாகிவருகிறது. அதை இந்தியாவும் விரும்பாது. இந்தத் தேர்தல், எதிர்காலங்களின் பிராந்திய அரசியலையும் தீர்மானிக்கவல்லது. சில கருத்துக்கணிப்புகள் கோத்தபய ராஜபக்‌சே முன்னிலை வகிப்பதாகத் தெரிவித்தாலும், களநிலவரங்களின்படி போட்டி கடுமையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது” என்றார் நிலாந்தன்.

மகுடம் சூடப்போவது யாரோ?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு