Published:Updated:

அதிமுக: கே.வி.ராமலிங்கம், தென்னரசு... எடப்பாடி தரப்பு வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?!

கே.வி.ராமலிங்கம் - எடப்பாடி - தென்னரசு

ஈரோடு கிழக்குத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ரேஸில் முன்னணியில் இருப்பது யார்... கள நிலவரம் என்ன...?

Published:Updated:

அதிமுக: கே.வி.ராமலிங்கம், தென்னரசு... எடப்பாடி தரப்பு வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?!

ஈரோடு கிழக்குத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ரேஸில் முன்னணியில் இருப்பது யார்... கள நிலவரம் என்ன...?

கே.வி.ராமலிங்கம் - எடப்பாடி - தென்னரசு

2011-ம் ஆண்டுக்கு முன்புவரை பிரிக்கப்படாத ஈரோடு தொகுதியாக இருந்த நிலையில், 2011-ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு ஈரோடு கிழக்கு, மேற்கு என இரண்டு தொகுதியாகப் பிரிக்கப்பட்டன.

2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க, தே.மு.தி.க கூட்டணி அமைத்து போட்டியிட, இந்தத் தொகுதி தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் களமிறங்கினார். தொகுதி பிரிக்கப்பட்ட பின் நடைபெற்ற அந்த முதல் தேர்தலில் சந்திரகுமார், தற்போதைய அமைச்சரான தி.மு.க வேட்பாளர் சு.முத்துசாமியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தென்னரசு
தென்னரசு

தே.மு.தி.க-வின் சட்டப்பேரவை கொறடாவாக இருந்த வி.சி.சந்திரகுமார், 2016-ல் தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க மறுத்த தே.மு.தி.கவை எதிர்த்து கட்சியிலிருந்து வெளியேறி மக்கள் தே.மு.தி.க என்ற கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். பின்னர், அவர் தி.மு.க-வில் இணைந்ததையடுத்து இதே தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களமிறக்கி விடப்பட்டார்.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, சந்திரகுமாரை வென்று எம்.எல்.ஏ ஆனார். 2021 தேர்தலில் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு, போட்டியாளராக களமிறங்கிய திருமகன் ஈ.வெ.ரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் த.மா.கா வேட்பாளர் யுவராஜாவுக்கு எதிராக வெற்றியைப் பதிவுசெய்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற மூன்று தேர்தலில் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இரண்டு முறையும், தி.மு.க கூட்டணி ஒருமுறையும் வென்றிருக்கின்றன. இந்த நிலையில், இந்தத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் களம் இறங்கும் வேட்பாளர்களின் பெயரை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது.

கே.வி.ராமலிங்கம்
கே.வி.ராமலிங்கம்

ஒற்றைத் தலைமை விவகாரத்தால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க தனது பலத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இரட்டை இலைச் சின்னம் கிடைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், வழக்கமான தேர்தலாக இல்லாமல் சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் அ.தி.மு.கவுக்கு ஏற்படலாம் என்ற நிலையும் இருக்கிறது. அதனால் தொகுதி முழுக்க ஏற்கெனவே நன்கு அறிமுகமான நபரை நிறுத்தினால் மக்களை எளிதில் அணுக முடியும். இதன் மூலம் இரட்டை சிலைச் சின்னத்துக்கு வாக்கு கேட்க முடியாவிட்டாலும், சுயேச்சை சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல முடியும் என்று அ.தி.மு.க கருதுகிறது.

26-ம் தேதி ஈரோட்டில் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதில் பெரும்பாலான நிர்வாகிகளும் இதையேதான் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினராம்.

ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

ஏற்கெனவே அ.தி.மு.க சார்பில் அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நந்தம் விஸ்வநாதன், பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்து, பூத் முகவர்களை நியமனம் செய்வது, ஒவ்வொரு வீதியிலும் அ.தி.மு.க-வின் வாக்காளர்களை வகைப்படுத்தி தருவது போன்ற பணிகளைத் தொடங்கிவிட்டனர். இதுவரை ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட 50க்கும் மேற்பட்டோா் விருப்ப மனு அளித்திருக்கின்றனர். அவர்களிடம் கடந்த இரண்டு நாள்களாக  எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்திவருகிறார்.

அதிமுக: கே.வி.ராமலிங்கம், தென்னரசு... எடப்பாடி தரப்பு வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?!

ஒருபுறம் நேர்காணல் நடத்தியும், மற்றொரு புறம் இத்தொகுதியில் போட்டியிட தற்போதைய மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு ஆகியோருக்கு வாய்ப்பளித்தால் வெற்றி பெற இயலுமா என்றும் நிர்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டார். அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் கே.வி.ராமலிங்கத்துக்கு வாய்ப்பளிக்க ஆதரவு தெரிவித்தனர் என்ற தகவலும் வெளியானது.

இந்தத் தொகுதியில், ஆளுங்கட்சியின் அதிகார பலத்துடன் வலம் வரும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை, வீழ்த்தி வெற்றி பெற முடியுமா என்று கே.வி.ராமலிங்கம் யோசிப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். கட்சிக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்பை உறுதிபடுத்த முடியாத சூழலில் களமிறங்குவதால் சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிடும் நிலை ஏற்படலாம். பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில் மிகக் குறுகிய காலத்துக்குள் மக்கள் மத்தியில் சின்னத்தைக் கொண்டுசெல்ல முடியுமா என்ற கேள்வியும் இருக்கிறது. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளராக கே.வி.ராமலிங்கம் இருந்தாலும், அவர் இதுவரை ஈரோடு மேற்குத் தொகுதியில்தான் போட்டியிட்டிருக்கிறார். மேற்குத் தொகுதியில் அதிக அளவில் கிராமங்கள் இருப்பதாலும், அவர் சார்ந்த சமூகத்தினரின் வாக்குகளின் சதவிகிதம் அதிகமாக இருப்பதாலும் தொடர்ந்து அந்தத் தொகுதியில் நன்கு பரிட்சயமானவராக இருக்கிறார்.

மண்டப கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
மண்டப கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

ஏற்கெனவே 2001-ல் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய கே.எஸ்.தென்னரசு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் என்.கே.கே.பெரியசாமியை 24,440 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதியாகப் பிரிக்கப்பட்ட பிறகு 2016 தேர்தலிலும் வெற்றி பெற்றவர் என்பதால் தொகுதி மக்களிடையே நன்கு பரிட்சயமானவர். எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தால், இரட்டை இலைச் சின்னம் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க வேட்பாளராக அவரை முன்னிலைப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெற்று விடலாம் என்று எடப்பாடி அணியினர் திட்டமிடுகின்றனர். எனவே, கே.வி.ராமலிங்கத்தை விட தென்னரசுக்கு வாய்ப்பளிக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக அ.தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேசமயம் பகுதிச் செயலாளராக உள்ள பெரியார் நகர் மனோகரனும், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்தான். மனோகரன் ஏற்கெனவே, ஈரோடு நகராட்சியாக இருந்தபோது அ.தி.மு.க-வின் நகரச் செயலாளராக இருந்தவர். இவரும் போட்டியிட வாய்ப்பு கேட்டிருக்கிற நிலையில் அவரின் பெயரும், மாணவரணி மாவட்ட இணைச் செயலாளராக இருக்கிற நந்தகோபால் பெயரும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். இவர்களில் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பவர்கள் குறித்து அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம், `கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிற எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து, இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு வரும் 30-ம் தேதி விசாரணைக்காக வரும். இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
ஒருவேளை இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கே.ஏ.தென்னரசுக்கு வாய்ப்பு கொடுக்க கட்சி மேலிடம் திட்டமிட்டிருக்கிறது. தொகுதியில் நன்கு அறிமுகமானவர் என்பதுடன், இரட்டை இலைச் சின்னம் இல்லாவிட்டாலும் ஏற்கெனவே அந்தச் சின்னத்தில் போட்டியிட்டவர் என்பதால் அவருக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் கூடுதல் வாக்குகளைப் பெற முடியும். அதேசமயம் பெரியார் நகர் மனோகரன், நந்தகோபால் ஆகியோர் ஒதுங்கிக்கொண்டனர்.

அதிமுக: கே.வி.ராமலிங்கம், தென்னரசு... எடப்பாடி தரப்பு வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?!
PremKumar SK

சுமார் 50 பேர் விருப்ப மனுத்தாக்கல் செய்திருக்கிற நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக நிறுத்தக்கூடிய வேட்பாளர் என்பதால், மக்களிடம் நன்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்பதையே கட்சி மேலிடம் கருதுகிறது. எனவே, தென்னரசுவை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒருவேளை அவருக்கு வாய்ப்பில்லை என்றால் கே.வி.ராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்படக்கூடும். வேட்புமனுத் தாக்கல் 31-ம் தேதி முதல் தொடங்குவதால் இன்னும் ஓரிரு நாள்களுக்குள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.