Published:Updated:

`விபத்தால் வந்தவர் விரைவாகப் போய்விடுவார்'- விக்கிரவாண்டியில் கடுகடுத்த கனிமொழி எம்.பி!

``மோடிதான் தற்போது தமிழ் நாட்டின் ஆட்சித் தலைவராக இருக்கிறார்” என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் விமர்சித்திருக்கிறார் தி.மு.க எம்.பி கனிமொழி

கனிமொழி
கனிமொழி ( தே.சிலம்பரசன் )

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் புகழேந்திக்கு ஆதரவாக நேற்றும் இன்றும் வாக்குகள் சேகரித்து வருகிறார் கனிமொழி எம்.பி. விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியப் பகுதியில் நேற்று இரவு பேசிய அவர், ``தமிழகத்தில் தற்போது நடக்கும் அரசு முறையாக நடக்கிறதா என்று மக்கள் கொடுக்கும் தேர்ச்சி அறிக்கைதான் இந்த இடைத்தேர்தல். ஜெயலலிதா இருந்தவரை எந்த அமைச்சரையும் பேச விடவில்லை. ஏனென்றால் அவர்கள் பேசுவது யாருக்கும் புரிவதில்லை. உங்களுக்கு மோடி வேண்டுமா? இல்லை இந்த லேடி வேண்டுமா? என்று கேட்டு தேர்தலை சந்தித்தவர் ஜெயலலிதா. ஆனால், அவரின் வழிவந்த அமைச்சர்கள் இப்போது மோடிதான் எங்கள் டாடி என்று கூறி வருகின்றனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
தே.சிலம்பரசன்

அரசாங்கத்தில் எங்கு திரும்பினாலும் ஊழலாக இருக்கும்போது எப்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வந்து தொழிற்சாலையை துவக்குவார்கள். இந்த ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இரண்டு முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள், யாராவது முதலீடு செய்தார்களா ? முதலீட்டாளர்களை அழைக்க முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றார். முதலீடு பெற்று வந்தாரா என்று கேட்டால் மவுனம் சாதிக்கின்றனர்.

தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது வெளிநாடு செல்லவில்லை. ஆனால், தமிழ்நாட்டுக்கு தேடிவந்து முதலீடு செய்து தொழிற்சாலைகளை துவக்கினார்கள் முதலீட்டாளர்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்தும், நீட் தேர்வு பிரச்னையும் புயலாக வீசியபோதெல்லாம், போதுமான நிதி வராததைப் பற்றி மத்திய அரசிடம் வாய் திறக்காத தமிழக அரசு, தற்போது சீன பிரதமரும், மோடியும் வருவதற்கு பேனர் வைக்க நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்று வருகின்றனர். ஏனென்றால் மோடிதான் தமிழ்நாட்டின் தற்போதை ஆட்சித் தலைவராக இருக்கிறார்.

உங்களுக்கு மோடி வேண்டுமா? இல்லை இந்த லேடி வேண்டுமா? என்று கேட்டு தேர்தலை சந்தித்தவர் ஜெயலலிதா. ஆனால் அவரின் வழி வந்த அமைச்சர்கள் இப்போது மோடிதான் எங்கள் டாடி என்று கூறி வருகின்றனர். - கனிமொழி எம்.பி

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எந்த நிதியையும் தரமாட்டார்கள். ஆனால், அதே மத்திய அரசு கிராமப்புற மேம்பாட்டிற்கென்று கொடுத்த நிதி 3,677 கோடி ரூபாயைப் பயன்படுத்தாமல் அப்படியே மோடி என்ற டாடிக்கு திருப்பி அனுப்புகிறது இந்த தமிழக அரசு. நீட் தேர்வு வந்தால் மருத்துவக்கல்வி மேம்படும் என்றார்கள் தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால், தகுதியில்லாத மாணவர்கள் நீட் தேர்வில் டூப் போட்டு ஏஜென்ட் மூலம் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கின்றனர்.

இந்தியா முழவதிலுமே நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. அங்கெல்லாம் முறைகேடுகள் குறித்து விளக்கம் கேட்காத மத்திய அரசு, தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து கேட்டுக் கொண்டிருக்கிறது. அதுகுறித்து மத்திய அரசை எதிர்த்து எந்தக் கேள்வியையும் கேட்க தைரியம் இல்லாத கேடு கெட்ட ஆட்சி தற்போது நடக்கிறது.

அரசாங்கத்தில் எங்கு திரும்பினாலும் ஊழலாக இருக்கும்போது எப்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வந்து தொழிற்சாலையை துவக்குவார்கள் ? - கனிமொழி எம்.பி

தி.மு.க ஆட்சியில் கொடுத்த கலைஞர் டிவி இன்றுவரை வீட்டில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் கொடுத்த மிக்சி, கிரைண்டர் பழுதாகி ஓரங்கட்டப்பட்டுள்ளது. அதுபோலதான் தேர்தலில் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளும் 10 நாள்களுக்கு மேல் இருக்கப்போவதில்லை. எதிர்பாராத ஒரு பெரும் விபத்தில் முதல்வராகிவிட்டர் எடப்பாடி பழனிசாமி. விபத்தால் வந்தவர் விரைவாகப் போய்விடுவார். அவர் ஆட்சியிலிருந்து வீட்டுக்குப் போக அச்சாரமாக அமைந்திருக்கிறது இந்தத் தேர்தல். அதனால் இந்த ஆட்சிக்கு நீங்கள் சரியான பாடம் புகட்டி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் புகழேந்திக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்” என்றார்.