Election bannerElection banner
Published:Updated:

காலை பிரசாரம், மாலை தேர்தலிலிருந்து விலகல் - மன்சூர் அலிகான் முடிவுக்குக் காரணம் என்ன?

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். மாலை தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தி.மு.க-வில் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி களம்காண்கின்றனர். இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி, தமிழ்த் தேசிய புலிகள் கட்சியைத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூரில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகதான், வேலுமணி தரப்பில் மன்சூர் அலிகானைக் களமிறக்கியிருப்பதாக தி.மு.க-வினர் குற்றம்சாட்டினர். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியிலும், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு ஶ்ரீநிதி என்ற பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மாற்றப்பட்டு ஷாஜஹான் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

''நாம் தமிழரோடு சேர்ந்து 'தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க'வை வேரறுப்போம்!'' - மன்சூர் அலிகான் சூளுரை

``வேட்பாளரை மாற்றி அறிவித்ததன் மூலம் நீங்கள் விலை போய்விட்டீர்களா கமல்?” என்று சிவசேனாபதி கேள்வி எழுப்பியிருந்தார். தொண்டாமுத்தூரில் போட்டியிட மன்சூர் அலிகான் ஐந்து ஸ்வீட் பாக்ஸ்கள் வரை கேட்டதாகவும், வேட்புமனுத் தாக்கல் செய்தாலும், மன்சூரின் பிரசார வாகனத்துக்கு அனுமதி வழங்க தாமதம் காட்டிவந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

ஆனாலும், கோவை பேரூர் மற்றும் உக்கடம் மீன்மார்க்கெட் பகுதிகளில் மன்சூர், மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டுவந்தார். இந்தநிலையில், திடீரென்று மன்சூர் அலிகான் தேர்தலிலிருந்து விலகுவதாகவும், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லை என்றும் அறிவித்துள்ளார்.

இது குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்டிருக்கும் ஆடியோவில், ``நான் இந்தத் தேர்தல்ல போட்டியிட வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். எனக்கு மனசு ரொம்ப சங்கடமா இருந்துச்சு. தமிழ்த் தேசிய புலிகள் கட்சி தொடங்கினப்புறம், ஏதாவது ஒரு தொகுதியில நிக்கணும்னு அங்க (தொண்டாமுத்தூர்) போனேன். வேட்புமனுத் தாக்கல் செஞ்சு ஒப்புதலும் வாங்கியாச்சு. ஆனா, தொகுதியில எங்க போனாலும், `பாய் எவ்ளோ பணம் வாங்கினீங்க?’னு எல்லாருமே கேக்கறாங்க.

கமல் கட்சியிலயும் பாயத்தான் நிறுத்திருக்காங்க. `பாய் ஓட்டைப் பிரிக்கத்தானே நிக்கிறீங்க?’னு கேட்கறாங்க. எஸ்.பி.வேலுமணி நிறைய செஞ்சிருக்கார். தொகுதிக்குள்ள அவருக்கு நல்ல பேர் இருக்கற மாதிரி இருக்கு. மத்தபடி என்ன ஏதுனு தெரியலை.

எனக்கு என்ன பண்றதுனு தெரியலை. சும்மா அரசியல்ல போய் நின்னோம், அவரைத் திட்டினோம்கிற மாதிரி இதுவரை நான் இல்லை. மூணு பொண்ணுகளைவெச்சுக்கிட்டு எனக்கே கஷ்டமா இருக்கு. நாளைக்குக் கெட்ட பெயரோட போகக் கூடாது. திண்டுக்கல்ல நின்னப்பகூட கட்சியிலருந்து நான் காசு வாங்கலை. என் கைக்காசை போட்டுத்தான் நின்னேன். மக்களை அடமானம் வைக்கறதுல எனக்கு உடன்பாடு இல்லை. காவல்துறைகிட்ட அனுமதி வாங்கப் போனா, `அ.தி.மு.க-காரங்க லிஸ்ட் தருவாங்கல்ல... அவங்ககிட்ட வாங்கிக்கோங்க’னு சொல்றாங்க.

ஒண்ணுமே புரியலை. பத்துல எட்டுப் பேர் ஒரு மாதிரி பார்க்கறாங்க. எனக்குச் சங்கடமா இருக்கு. அதனால, இந்தத் தேர்தல் வேணாம்னு முடிவு பண்ணி சென்னைக்குக் கிளம்பிட்டேன். மக்கள் நல்லவங்களை தேர்ந்தெடுப்பாங்க. ஒரு சில இடங்கள்ல பிரசாரம் மட்டும் பண்ணுவேன். நான் தொண்டாமுத்தூர்ல போட்டியிடவில்லை” என்று கூறியுள்ளார்.

மன்சூர் அலிகான் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்கள், ``நீங்கள் வேட்புமனுவை வாபஸ் வாங்காமல் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறீர்களா?” எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், ``உங்க வாய்ல வசம்புவெச்சு தேய்க்க... வாபஸ் வாங்கவா இவ்ளோ தூரம் வந்து மாப்பிள்ளை மாதிரி சட்டை போட்டுக்கிட்டு வந்திருக்கேன்?” என்று தனது பாணியில் பதிலளித்துவிட்டுச் சென்றார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

திடீரென்று அவர் தேர்தலிலிருந்து விலகியதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருக்கிறது என்று கூறுகின்றனர். மன்சூர் தொடர்ந்து மீடியா லைம்லைட்டில் இருப்பதால், சிறுபான்மை வாக்குகள் பிரிந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்று அ.தி.மு.க மற்றும் தி.மு.க என இரண்டு தரப்பிலும் அழுத்தம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவாகப் பேச மன்சூர் அலிகான் தரப்பினரை தொடர்புகொண்டோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு