Published:Updated:

தேர்தல் நிதிப் பத்திரம்! முறைகேடுகளும் மௌனங்களும்... பதிலளிக்குமா மத்திய அரசு?

தேர்தல் நிதிப் பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே, அதைச் சுற்றி பல சர்ச்சைகள் நிலவிவந்தன. சமீபத்தில், ஆர்.டி.ஐ-ல் கிடைத்த தகவல்களின்மூலம் மேலும் பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பி.ஜே.பி
பி.ஜே.பி

மத்திய அரசு கொண்டுவந்த `தேர்தல் நிதிப் பத்திரத் திட்டம்’ ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைக்குள்ளானது. இந்தப் பத்திரத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் (எஸ்.பி.ஐ) இந்தியாவில் பெற்று அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக்கணக்கில் மட்டுமே பணம் வரவு வைக்கமுடியும். நன்கொடை அளிப்பவரின், பெறுபவரின் தகவல்கள் இதில் இடம்பெறாது. தேர்தல் நிதிப் பத்திரம்மூலம் வந்த நன்கொடை பற்றிய தகவல்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை. இதற்கேற்ப சட்டத்தைத் திருத்தியது மத்திய அரசு.

தேர்தல் நிதிப் பத்திரம்
தேர்தல் நிதிப் பத்திரம்

நன்கொடை கொடுப்பவர், வாங்கும்கட்சி எல்லாத் தகவல்களும் ரகசியமாயிருக்கும். தேவையென்றால், விசாரணை அமைப்புகள் மட்டுமே அதைப்பெறலாம். அனைத்து அரசியல் கட்சிகளுமே நன்கொடை பெறமுடியாது. கடைசியாக நடந்த சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் நன்கொடை பெறமுடியும். புதிய கட்சிகள், சிறிய கட்சிகள் நன்கொடை பெற முடியாது. `சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும்' என்கிற அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிராக இருப்பதாக, இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதன்மூலம் அனைவருக்கும் சமமான வாய்ப்பு, போட்டி என்பது இல்லாமல் போகும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு?

`தேர்தல் நிதிப்பத்திரம் வெளிப்படைத்தன்மைக்கு எதிராக உள்ளது' என சி.பி.எம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையை முடித்துள்ள உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி, இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில், `அரசியல் கட்சிகள் தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் பெற்றுள்ள நன்கொடை பற்றிய தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் மே 31-ம் தேதிக்குள் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
`அரசியல் கட்சிகளுக்கு யார் நன்கொடை அளிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்குக் கிடையாது’
மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால்

தேர்தல் நிதிப்பத்திரத்தை ஆதரித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடிய அரசு வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், `அரசியல் கட்சிகளுக்கு யார் நன்கொடை அளிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்குக் கிடையாது’ என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தேர்தல் ஆணையம், `நன்கொடை அளிப்போரின் விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்’ என வாதிட்டது. தேர்தல் நிதிப் பத்திரத்திட்டத்தில் அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இருந்த உரசல் இந்தச் சமயத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

இது தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ``தேர்தல் நிதிப் பத்திரத் திட்டம் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் இதை முழுமையாக எதிர்த்திருக்க வேண்டும். அரசியலில் செலவு செய்யப்படுகிற ஒரு ரூபாய்க்குக்கூட கணக்கு காட்டப்பட வேண்டும். தேர்தல் அரசியல் என்பது பொது நடவடிக்கை, தனிப்பட்ட வர்த்தகம் அல்ல" என்றார்.

எதிர்ப்பை மறைத்த மத்திய அரசு? 

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை, ரூ.6000 கோடிக்கும் மேலான மதிப்பில் தேர்தல் நிதிப்பத்திரம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. முதற்கட்ட விற்பனை விவரமே வெளிவந்துள்ளது. அதில் மட்டும் 95 சதவிகித பத்திரங்கள், பா.ஜ.க-வுக்குக் கிடைத்துள்ளன. இதற்காகவே பல்வேறு முறைகேடுகளைச் செய்து, இந்த நிதிப் பத்திரத் திட்டத்தை பா.ஜ.க அரசு அமல்படுத்தி இருப்பது ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர் லோகேஷ் பத்ரா வாங்கியுள்ள பல்வேறு தகவல்களால் அம்பலத்துக்கு வந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கடிதம்
தேர்தல் ஆணையத்தின் கடிதம்

தேர்தல் நிதிப் பத்திரத் திட்டத்துக்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து எதிர்ப்பு வந்ததா என நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்போதைய இணை நிதி அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், `எந்த எதிர்ப்பும் வரவில்லை’ என்று பதிலளித்தார். ஆனால் தேர்தல் ஆணையம், 26 மே, 2017 அன்று தேர்தல் நிதிப் பத்திர திட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென்று மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால், இந்த விஷயத்தையே நாடாளுமன்றத்தில் மறைத்துள்ளது மத்திய அரசு.

ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பு!

மத்திய அரசு 2017-ம் ஆண்டு கொண்டுவந்த நிதி மசோதா மூலம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வருமான வரிச் சட்டம், ரிசர்வ் வங்கிச் சட்டம், கம்பெனி சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொண்டது.

தேர்தல் நிதிப் பத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமானால், முதலில் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.

ரிசர்வ் வங்கி சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக கருத்து கேட்டு, மத்திய அரசு ஜனவரி 28, 2017 அன்று ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அதற்கு, ஜனவரி 30, 2017 அன்று பதிலளித்த ரிசர்வ் வங்கி, `பாண்டு அச்சிடும் பொறுப்பை மற்ற வங்கிகளிடம் வழங்குவது ரிசர்வ வங்கியின் அதிகாரத்தைக் குறைத்துவிடும். உண்மையில், நன்கொடை அளிப்பவரின் விவரங்கள் தெரியவராது என்பதால், இதில் வெளிப்படைத்தன்மையும் இருக்காது. அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதற்கு ஏற்கெனவே உள்ள செக், டிடி, டிஜிட்டல் வழிமுறைகள் போதுமானது. தேர்தல் நிதிப் பத்திரம் தவறான முன்னுதாரணமாக அமையும். இது, திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று எழுதியிருந்தது.

ஆர்.பி.ஐ கடிதம்
ஆர்.பி.ஐ கடிதம்

இதற்கு எதிர்வினையாற்றிய மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் ஆட்சேபனைகளைப் புறந்தள்ளியதோடு, ``தேர்தல் நிதிப் பத்திரத்தை ரிசர்வ் வங்கி சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தின் ஆட்சேபனைகள் நமக்கு காலம் கடந்து வந்துள்ளன. எனவே, நாம் இந்தத் திட்டத்தை மேற்கொண்டு தொடரலாம்” என நிதியமைச்சகம் மூலம் குறிப்பு அனுப்பியுள்ளது.

2017 ஜனவரி 31 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் அருண்ஜெட்லி தேர்தல் நிதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்தினார். ஜனவரி 28 (சனிக்கிழமை) அன்று ரிசர்வ் வங்கியின் கருத்து கேட்கப்பட்டது. ஜனவரி 29 (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள். அடுத்த வேலை நாளான ஜனவரி 30 திங்கள்கிழமையன்று, ரிசர்வ் வங்கி தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கருத்தைக்கேட்டறியும் முன்னரே, மத்திய அரசு பட்ஜெட்டைத் தயார் செய்துவிட்டது. பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் ரிசர்வ் வங்கியின் கருத்தை மத்திய அரசு கேட்டுள்ளது.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் அதிகாரம், அரசின் துணைச் செயலாளருக்கு போனது ஏன்?

தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்பு!

2017 நிதி மசோதா மூலம் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான மாற்றங்கள்:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்: - இதில் `தேர்தல் நிதிப் பத்திரம்’ மூலம் பெறப்படுகிற நன்கொடைகளின் தகவல்களைத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கவேண்டிய தேவையில்லை’ என மாற்றப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்பு: `இது வெளிப்படைத்தன்மையைப் பாதிக்கக்கூடிய பிற்போக்குத்தனமான நடவடிக்கை. இது, திரும்பப் பெறப்பட வேண்டும். இதன்மூலம் வெளிநாட்டு நிறுவனங்களிடம் நன்கொடை பெறுவது சாத்தியப்படும்’ என்றுள்ளது.

கம்பெனிச் சட்டம்: ``இதில், ஒரு நிறுவனம் பிந்தைய மூன்று நிதியாண்டுகளின் நிகர லாபத்தில் 7.5 சதவிகிதம் மட்டுமே அரசியல் நன்கொடையாக அளிக்க முடியும்” என்றிருந்த பிரிவு நீக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்பு: ``இது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே பல ஷெல் கம்பெனிகள் உருவாவதற்கு வழிவகுக்கும். மேலும், முந்தைய விதிமுறைகள் நம்பத்தகுந்த நிறுவனங்கள் மட்டுமே நிதியளிக்க முடியும் என்கிற கட்டுப்பாட்டை உறுதிசெய்தது. தற்போது, அது சமரசம் செய்யப்படும்” என்று எதிர்ப்புத் தெரிவித்தது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தின் கடிதம்
தேர்தல் ஆணையத்தின் கடிதம்

இந்த எதிர்ப்புகளுக்குப் பின், அப்போது பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க், தேர்தல் ஆணைய அதிகாரிகளையும் தேர்தல் ஆணையர்களையும் தனியாகச் சந்தித்து, தேர்தல் நிதிப் பத்திரம் தொடர்பாக விவாதித்துள்ளார். அப்போது, அவர்கள் தெரிவித்த ஆட்சேபனைகளையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை.

தேர்தல் நிதிப் பத்திரம் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் என வருடத்தில் நான்கு மாதங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும். ஆனால் மத்திய அரசு, கடந்த ஆண்டு மே மாதம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவும், டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவும் மேற்குறிப்பிட்ட அந்த நான்கு மாதங்களைத் தவிர்த்து, சட்டவிரோதமாகத் தேர்தல் நிதிப் பத்திரத்துக்கான விற்பனைக்கு அனுமதியளித்துள்ளது. இதற்கான உத்தரவு, பிரதமர் அலுவலகத்திலிருந்து நேரடியாக வந்துள்ளதும், விதிகளைத் தளர்த்தி நிதியமைச்சகம் சிறப்பு அனுமதி அளித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

நிதியமைச்சக குறிப்பு
நிதியமைச்சக குறிப்பு

இந்த முறைகேடுகள் பற்றி மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கிவருகின்றன. நிலுவையில் உள்ள வழக்கை உச்ச நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது. இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, தேர்தல் நிதிப் பத்திரத் திட்டத்தை செயல்படுத்த தடைவிதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. தடைவிதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தது.

உச்ச நீதிமன்றம் இதற்கு உத்தரவிடுமா அல்லது மத்திய அரசே மெளனம் கலைக்குமா... காத்திருப்போம்!