Published:Updated:

`அவர் நிறைய ஊழல் பண்ணிட்டாரு..!' -திருப்பூரில் வேட்பாளருக்கு எதிராகக் களமிறங்கிய மனைவி, தம்பி

தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் உறவினர்கள் எனச் சொல்லப்படுகிறது.

ஊராட்சித்தலைவர் பதவிக்காக போட்டியிடும் ஒரே குடும்பத்தினர்
ஊராட்சித்தலைவர் பதவிக்காக போட்டியிடும் ஒரே குடும்பத்தினர்

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்டு 24 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. அதில் ஒன்று சடையபாளையம் கிராம ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்டு 22 கிராமங்களும் சுமார் 7,500 வாக்காளர்களும் உள்ளனர். இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்காக மொத்தம் 10 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில் 4 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட, மொத்தம் 6 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். இந்த 6 பேரில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஆச்சர்யம். வீடு வீடாகச் சென்று இவர்கள் மூவரும் வாக்கு கேட்க, யாருக்கு வாக்களிப்பது எனக் குழம்பிப் போய் உள்ளனர் வாக்காளர்கள்.

பெரியசாமி
பெரியசாமி

சடையபாளத்தைச் சேர்ந்த பெரியசாமி (53), அவருடைய மனைவி லட்சுமி (49), பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன் (46) என மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கணவன் - மனைவி, அண்ணன் - தம்பி ஆகியோருக்கு இடையிலான குடும்பப் பிரச்னைகளின் காரணமாக, மூவரும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். இதில், பெரியசாமி ஏற்கெனவே இந்த ஊராட்சியின் தலைவராக இருந்திருக்கிறார். ஈஸ்வரனோ தி.மு.க-வில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளராக இருக்கிறார். தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் உறவினர்கள் எனச் சொல்லப்படுகிறது.

`ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் போட்டியிடுவது ஏன்?’ என பெரியசாமியிடம் கேட்டோம். ``சடையபாளையம் ஊராட்சி மன்றத் தேர்தலில் கடந்த முறை 352 ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்சேன். என் மனைவியையும் ஒருமுறை தேர்தலில் நிற்கவைத்து வெற்றிபெற வைத்தேன். என்னை எதிர்த்து 100 பேர் நின்றாலும் இந்தமுறை நான்தான் தலைவராகப் போகிறேன். அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பேன். இரவு 12 மணிக்கு ஒரு பிரச்னை என யாராவது வந்து நின்றால், முதல் ஆளாகப் போய் நிற்பேன். என் குடும்பத்தைக் கெடுத்த என் தம்பி, எனக்கு எதிராக தேர்தலில் நின்று வேலை பார்த்துக்கிட்டு இருக்கான். போன தடவையே என்னை எதிர்த்து போட்டியிட்டு தோத்துப் போனவன்” என்றார் கொதிப்புடன்.

அவரோட மனைவியே அவரை எதிர்த்து போட்டி போடுறாங்கன்னா, அவரோட நிலைமையை புரிஞ்சுக்குங்க.
ஈஸ்வரன்

பெரியசாமியின் தம்பி ஈஸ்வரனோ, ``எங்க அண்ணன் கடந்த முறை ஊராட்சி செயலாளரோட சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிச்சது மக்களுக்கு நல்லா தெரியும். வீட்டு வரி ரசீது கொடுக்காதது என நிறைய ஊழல் பண்ணியிருக்கிறாரு. மக்களைத் தரமில்லாம பேசுறதுன்னு அவரோட செயல்பாட்டுக்கு கடும் அதிருப்தி இருக்கு. அவரோட மனைவியே அவரை எதிர்த்து போட்டி போடுறாங்கன்னா, அவரோட நிலைமையை புரிஞ்சுக்குங்க. எனக்கு மக்களிடம் நிறைய வரவேற்பு இருக்கு. ஜெயிப்பது உறுதி” என்றார்.

பெரியசாமியின் மகன் சிலம்பரசனிடம் பேசினோம். `நானும் வேட்பு மனுத்தாக்கல் செஞ்சிருந்தேன். கடைசியில வாபஸ் வாங்கிட்டேன். ஜனநாயக நாட்டில் யார் வேணும்னா போட்டியிடலாம்ங்கிற அடிப்படையில்தான் எங்க அம்மா தேர்தலில் போட்டியிடுறாங்க” என்றார்.