Published:Updated:

ஈரோடு கிழக்கு: வரிசைகட்டும் புகார்கள்; தடைகளைத் தாண்டி இடைத்தேர்தல் நடைபெறுமா?!

ஈரோடு கிழக்குத் தொகுதி - அரசியல் கட்சியினர்

ஈரோடு கிழக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு வேட்டி, சேலைகள், ஓட்டுக்கு 4,000 ரூபாய், குக்கர், கொலுசு உள்ளிட்ட பொருள்களை வழங்கியதாகப் புகார்கள் வரிசைகட்டுகின்றன.

Published:Updated:

ஈரோடு கிழக்கு: வரிசைகட்டும் புகார்கள்; தடைகளைத் தாண்டி இடைத்தேர்தல் நடைபெறுமா?!

ஈரோடு கிழக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு வேட்டி, சேலைகள், ஓட்டுக்கு 4,000 ரூபாய், குக்கர், கொலுசு உள்ளிட்ட பொருள்களை வழங்கியதாகப் புகார்கள் வரிசைகட்டுகின்றன.

ஈரோடு கிழக்குத் தொகுதி - அரசியல் கட்சியினர்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததால், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் 27-ம் தேதி அங்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. பிரசாரங்கள் படுஜோராக நடந்து வருகின்றன. அதே வேளையில், பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளும் வாக்காளர்களுக்குப் பரிசுகள், பணம் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, தேர்தல் தள்ளிப்போகும் எனப் பேச்சுக்களும் அடிப்பட்டன. ஆனால், `இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என எந்தப் புகாரும் வரவில்லை. எனவே, தேர்தல் நடக்கும்' என மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

திருமகன் ஈ.வெ.ரா
திருமகன் ஈ.வெ.ரா

தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள்!

ஈரோடு கிழக்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வின் தந்தையும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அளித்தது காங்கிரஸ் தலைமை. எனவே, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் இளங்கோவனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். அ.தி.மு.க சார்பாக தென்னரசு போட்டியிடுகிறார். அவரை அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ், பா.ஜ கட்சிகளின் நிர்வாகிகள் ஆதரித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். அதேபோல், நாம் தமிழர் சார்பாக மேனகா, தே.மு.தி.க சார்பாக ஆனந்த் என மொத்தமாக 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தொடர்ந்த புகார்கள்..!

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பரப்புரையைத் தொடங்கியதுபோல், பணப்புழக்கமும் ஈரோடு கிழக்கில் தொடங்கிவிட்டது. பிரதான கட்சிகளாக இருக்கும் அ.தி.மு.க., தி.மு.க என இரு பெரும் கட்சிகளும் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டுவருவதாகப் புகார்கள் குவிகின்றன. குறிப்பாக, கொங்கு பகுதியில் வலுமிகுந்து இருக்கும் அ.தி.மு.க-வை வீழ்த்த, தி.மு.க பல்வேறு வியூகங்களைக் கையாள்வதாகச் சொல்லப்பட்டது. திருமங்கலம் தேர்தல் வியூகம்போல், புது முறைகள் அங்கு பின்பற்றப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனவே, இவை அனைத்தையும் வெளிக்கொண்டு வருவதில், அ.தி.மு.க தீவிரமாகச் செயலாற்றியது.

ஈரோடு கிழக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு வேட்டி, சேலைகள், ஓட்டுக்கு 4,000 ரூபாய், குக்கர், கொலுசு உள்ளிட்ட பொருள்களை வழங்கியதாகப் புகார்கள் வரிசைகட்டுகின்றன.

வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கொலுசு
வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கொலுசு

இது மட்டுமல்லாமல், வீட்டுக்கு வீடு கோழிக்கறி, மளிகைச் சாமான்கள், அ.தி.மு.க பிரசாரத்துக்குப் போகாமல் இருக்க ஒரு நாளுக்கு ரூ.500 வழங்கப்பட்டு, மூன்று வேளையும் சாப்பாடு வழங்கி மக்களை பட்டிகளில் அடைத்துவைத்திருப்பதாக, தி.மு.க-மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், சத்யா நகர்ப் பகுதியில் இதுவரையிலும் கேள்விப்படாத வகையில், மக்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற சம்பவமும் நடந்தது. இது தொடர்பாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பாக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல், அ.தி.மு.க ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, சி.விஜயபாஸ்கர், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் தி.மு.க தேர்தல் விதிகளை மீறியதாகப் புகாரளிக்கப்பட்டது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இப்படியாக, தொடர்ந்து விதிமீறல் புகார்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் தள்ளிப்போகும் எனக் கூறப்பட்டது. ஆனால், இது குறித்து விளக்கமளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ``தற்போதுவரை முறையான ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 61.70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. முறைகேடுகள் எனப் பரவக்கூடிய காணொளிகளின் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுகிறது. எனவே, புகார் அளிப்போர் சி.விஜில் செயலி மூலம் புகாரளிக்கலாம். இதுவரை ஒரு புகார் மட்டுமே இதன் வாயிலாகப் பெறப்பட்டிருக்கிறது. ஈரோடு இடைத்தேர்தல் களத்தின் சட்டம் - ஒழுங்கு சீராகவே இருக்கிறது. இடைத்தேர்தல் குறித்து பல புகார்கள் வந்தாலும், தேர்தலை நிறுத்த வேண்டும் என யாரும் புகார் தெரிவிக்கவில்லை" என்றார்.

சத்யபிரதா சாகு
சத்யபிரதா சாகு

தள்ளுபடியான வழக்கு!

கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் ஈரோடு தேர்தலில் முறைகேடு நடப்பதைச் சுட்டிக்காட்டி, தேர்தலுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும், பணப் பட்டுவாடா நடைபெறாமல் இருப்பதைத் தடுக்க ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். ஆனால், நீதிபதிகள் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

ஈரோடு இடைத்தேர்தலுக்கு தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பணப் பட்டுவாடா நடைபெறுவதால் இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் தே.மு.தி.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தன் சார்பாக புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்!
சென்னை உயர் நீதிமன்றம்!

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனிடம் பேசினோம். அப்போது அவர், ``தமிழகத்தில் எப்போதெல்லாம் தேர்தல் நடக்கிறதோ, அப்போதெல்லாம் பணப் பட்டுவாடா என்பது வழக்கமானது. எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக் கட்சி தேர்தலில் வெல்வதைக் கெளரவப் பிரச்னையாகக் கருதுகிறது. எனவே, தி.மு.க அரசும் அப்படி நினைப்பதில் தவறில்லை. பொதுத்தேர்தலிலும்கூட கொங்கு மண்டலத்தில்தான் அதிக பணப்புழக்கம் இருந்தது. அது தடுத்து நிறுத்தப்பட்டதா... இதில் தி.மு.க வெற்றி பெறாமல் இருக்கவும், தேர்தலை நடத்தவிடாமல் செய்யவும் திட்டமிட்டு இந்தப் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. காசு கொடுத்து தேர்தல் நடத்துவதுதான் அரசியல் என்றாகிவிட்டது. எப்படி ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றியடைந்துவிடுவார் என்று தெரிந்ததும் தேர்தலை நிறுத்தினார்களோ... அதுபோல் தி.மு.க வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருக்கும் இந்தத் தேர்தலை நிறுத்த பா.ஜ.க முயற்சிகள் மேற்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்
மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்

இதற்கு முன்பும் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்திருக்கின்றன. எல்லா முறைகேடுகள் பற்றியும் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியும். இந்தத் தேர்தலின் தொடக்கத்திலேயே இது ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை நான் கணித்தேன். அது நிச்சயம் நடக்கும். தற்போது தபால் வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது. ஆனாலும், தேர்தல் தடை செய்யப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன" என்றார்.

`தேர்தலை ரத்துசெய்ய வேண்டும் என, எந்தப் புகாரும் வரவில்லை' எனத் தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருந்த நிலையில், தே.மு.தி.க சார்பாக, `தேர்தலை ரத்துசெய்ய வேண்டும்' எனப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.