Published:Updated:

வெற்றி முகத்தில் திரௌபதி முர்மு..?

திரௌபதி முர்மு, மோடி
பிரீமியம் ஸ்டோரி
திரௌபதி முர்மு, மோடி

பழங்குடிச் சமூகத்திலிருந்து அரசியல் தலைவராக உருவான முர்மு, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தவர்

வெற்றி முகத்தில் திரௌபதி முர்மு..?

பழங்குடிச் சமூகத்திலிருந்து அரசியல் தலைவராக உருவான முர்மு, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தவர்

Published:Updated:
திரௌபதி முர்மு, மோடி
பிரீமியம் ஸ்டோரி
திரௌபதி முர்மு, மோடி

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிகரான பரபரப்பை ஏற்படுத்திய குடியரசுத் தலைவர் தேர்தல் இப்போது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கிறது?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைவதால், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. 233 மாநிலங்களவை உறுப்பினர்கள், 543 மக்களவை உறுப்பினர்கள் என 776 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 4,033 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்து, குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள்.

வெற்றி முகத்தில் திரௌபதி முர்மு..?

பா.ஜ.க-வின் முயற்சி

அடுத்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில் ஆளும் தரப்பும், எதிர்த் தரப்பும் தங்கள் பலத்தைக் காட்டுவற்கான ஒரு வாய்ப்பாக குடியரசுத் தலைவர் தேர்தலைப் பார்க்கின்றன. சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் பலம் சற்று சரிந்ததால், குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றிபெறக் கூடுதல் வாக்குகள் தேவைப்படும் நிலை ஏற்பட்டது. பா.ஜ.க அணியின் ஒட்டுமொத்த வாக்குகளைக் காட்டிலும், பா.ஜ.க அணியில் இல்லாத மற்ற அனைத்துக் கட்சிகளின் வாக்குகளே அதிகம் என்கிற நிலைமை இருந்தது.

ஆகவே, தங்கள் வேட்பாளரின் வெற்றியை உறுதிசெய்ய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற பா.ஜ.க முயன்றது. பா.ஜ.க கூட்டணியில் இல்லையென்றாலும், மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற அணுகுமுறையை இந்தக் கட்சிகள் கொண்டிருக்கின்றன. இதை, பா.ஜ.க தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. மகாராஷ்டிர மாநில அரசியல் குழப்பமும் பா.ஜ.க-வுக்குக் கைகொடுக்கலாம்.

பழங்குடியின வேட்பாளர்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வெங்கைய நாயுடு, நிதிஷ் குமார், ராஜ்நாத் சிங் எனப் பலரின் பெயர்கள் அடிபட்டாலும், திரௌபதி முர்முவின் பெயர் அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் சர்ப்ரைஸ்தான். பழங்குடிச் சமூகத்திலிருந்து அரசியல் தலைவராக உருவான முர்மு, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தவர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இவரது பெயர் அடிபட்டது. 2017-ல் உத்தரப்பிரதேசத்திலிருந்து தலித் ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக என்ன கணக்குடன் பா.ஜ.க தேர்வுசெய்ததோ, அதே கணக்குடன்தான் ஒடிசாவைச் சேர்ந்த ஒரு பழங்குடி இனத்தவரை இன்று குடியரசுத் தலைவர் வேட்பாளராக பா.ஜ.க கொண்டுவந்திருக்கிறது. இது, பா.ஜ.க-வின் திறமையான காய்நகர்த்தல் என்று பார்க்கப்படுகிறது.

ஒடிசா சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘ஒடிசாவின் புதல்வி’க்கு ஏகோபித்த ஆதரவை வழங்க வேண்டுமென்று முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஐக்கிய ஜனதா தளமும் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டது. மேலும், பழங்குடி ஒருவரை நிறுத்தியதன் மூலமாக, முர்முவை ஆதரிக்கவேண்டிய நெருக்கடி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், ‘ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தபோது பழங்குடியினருக்கு எதிரான நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு அனுமதி கொடுத்தவர் திரௌபதி’ என்பது போன்ற குற்றச்சாட்டுகளை வி.சி.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

யஷ்வந்த் சின்ஹாவுக்கு கிடைத்த கெளரவம்!

எதிரணியில் இருக்கும் கட்சிகளுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்கிற ஒற்றைப்புள்ளியில் அவை ஒன்று சேர்ந்திருக்கின்றன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் தேர்தலில் போட்டியிட முன்வராத நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை தங்கள் பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் தேர்வுசெய்தன. ‘பா.ஜ.க-காரர்’ என்கிற பழைய வரலாறு யஷ்வந்த் சின்ஹாவுக்கு இருந்தாலும், இடதுசாரிகளும் அவரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, மத்தியில் மோடி – அமித் ஷா கூட்டணியின் கை ஓங்கிய பிறகு பா.ஜ.க-வில் ஓரங்கட்டப்பட்டார். அதன் பிறகு, மோடி அரசைத் தொடர்ச்சியாக விமர்சித்துவந்த அவர், திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், காங்கிரஸ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கட்சிகளின் ஆதரவுபெற்ற குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்கிற கௌரவத்தைத் தனது அரசியல் வாழ்க்கையில் அவர் அடைந்திருக்கிறார்.

வெற்றி முகத்தில் திரௌபதி முர்மு..?

வெற்றிமுகத்தில் திரெளபதி!

அ.தி.மு.க-வுக்கு 66 எம்.எல்.ஏ-க்களும், ஐந்து எம்.பி-க்களும் இருக்கிறார்கள். பா.ம.க-வுக்கு ஐந்து எம்.எல்.ஏ-க்களும், ஒரு எம்.பி-யும் இருக்கிறார்கள். இவர்கள் தவிர, ஜி.கே.வாசன் இருக்கிறார். இவர்களின் ஆதரவு பா.ஜ.க வேட்பாளருக்குத்தான். இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுபெற்ற யஷ்வந்த் சின்ஹாவுக்கே அதிக வாக்குகள் கிடைக்கும்.

எப்படிப் பார்த்தாலும் திரௌபதி முர்முவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. `பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர்’ என்ற பெருமையும், `இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர்’ என்கிற பெருமையும் முர்முவுக்கு காத்திருக்கின்றன!