கர்நாடகத் தேர்தல்... காங்கிரஸுக்குச் சாதகமாகும் தேர்தல் களம் - முறியடிக்க உருவக்கப்படும் ‘மோடி அலை!’

ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய கல்யாண கர்நாடகத்திலோ, ஜனார்த்தன ரெட்டி புதுக்கட்சி தொடங்கியிருக்கிறார். பெங்களூரு பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.
தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவில், இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இது தொடர்பான கருத்துக்கணிப்புகள் மற்றும் உளவுத்துறை ரிப்போர்ட்டுகளில், ‘காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டிருப்பது பா.ஜ.க மேலிடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
108 - 114 இடங்கள் வரையில் காங்கிரஸும், 24 – 30 இடங்கள் வரையில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் வெற்றிபெறும் என `Indian Political Surveys and Strategies (IPSS) Team’, ஹைதராபாத்திலுள்ள SAS Group-உடன் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பா.ஜ.க வெறும் 65 - 76 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் எனவும் அந்தக் கணிப்பு கூறுகிறது.

இதற்கிடையே முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும், எடியூரப்பாவுக்கும் நடக்கும் ‘கோல்ட் வார்’ முற்றிவருவது பா.ஜ.க மேலிடத்துக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி நம்மிடம் பேசிய கர்நாடக அரசியல் நோக்கர்கள், ‘‘ஊழல் புகார், வாக்காளர் தகவல் திருட்டு, மதம் சார்ந்த பிரச்னைகள், பட்டியலின மக்களுக்கு எதிரான பிரச்னைகள் உள்ளிட்டவை பா.ஜ.க அரசின் பெயரைக் கெடுத்திருக்கின்றன என்பதைத்தான் கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. பா.ஜ.க-வின் கோட்டையான கடலோர கர்நாடகத்தில் இஸ்லாமியர், பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளும் கொலைகளும் பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையை உருவாக்கியிருக்கின்றன.
ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய கல்யாண கர்நாடகத்திலோ, ஜனார்த்தன ரெட்டி புதுக்கட்சி தொடங்கியிருக்கிறார். பெங்களூரு பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. கோலார் சுற்றுப்பகுதியை மீண்டும் ஜனதா தளம் கைப்பற்றிவருகிறது. வடக்கு கர்நாடகமான பெலகாவியில் மட்டும் ஓரளவுக்கு பா.ஜ.க-வுக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், மொத்தமுள்ள 31 மாவட்டங்களில் மீண்டும் ‘மோடி அலை’யை உருவாக்கும் திட்டத்தோடு களமிறங்கியிருக்கிறது பா.ஜ.க. கர்நாடக பா.ஜ.க அரசின் சாதனைகளைவிட, மோடியின் புகழைத்தான் அதிகம் பாடுகிறார்கள். தவிர, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அரசு விழா, கட்சி நிகழ்ச்சிகள் என அடிக்கடி கர்நாடகாவில் முகம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். சிறுபான்மையினரின் கோபத்தை மட்டுப்படுத்தும் வேலைகளும் நடக்கின்றன. காங்கிரஸ் கட்சி 70 – 80% தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பின்னரே, சூழலுக்கேற்றாற்போல் தங்களது வாக்குறுதிகளை வெளியிட பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. அதனால்தான் இன்றுவரை தேர்தல் அறிக்கையை பா.ஜ.க வெளியிடவில்லை’’ என்றனர் விரிவாக.
தேர்தல் அறிக்கையில் என்ன இருந்தால் என்ன, கர்நாடக மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதானே முக்கியம்?