அரசியல்
அலசல்
Published:Updated:

உள்ளாட்சியா... ஜமீன் ஆட்சியா? - கவனம் ஈர்த்த கடம்பூர் பேரூராட்சி தேர்தல்!

தேர்தல் பிரசாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
தேர்தல் பிரசாரம்

உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை செயல்படுத்த ஆரம்பித்த காலத்திலிருந்தே கடம்பூர் பேரூராட்சி, கடம்பூர் ஜமீன் குடும்பத்து வாரிசுகளின் வசம்தான் இருந்துவருகிறது

கிராம ஊராட்சிகளைப்போலவே, சில பேரூராட்சித் தேர்தல்களிலும் அரசியல் கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு தனிநபர், சாதி செல்வாக்கு கோலோச்சுவது வழக்கம்தான். தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சியில் தேர்தலையே ரத்துசெய்யும் அளவுக்கு ஜமீன் குடும்பத்தின் ஆதிக்கம் இருந்தது. அங்கு மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலிலும் மறுபடியும் ஜமீன் குடும்பமே கோலோச்சி, அரசியல் கட்சிகளுக்கு `பெப்பே’ காட்டியிருக்கிறது!

தேர்தல் அறிவிப்பும் ரத்தும்!

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சியில் கடம்பூர் ஜமீனைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து பதவிகளில் இருந்துவருகிறார்கள். மொத்தம் 12 வார்டுகளைக்கொண்ட கடம்பூர் பேரூராட்சிக்கு கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் தி.மு.க-வே வெற்றிபெற வேண்டும் என திட்டம் தீட்டிய மாவட்ட அமைச்சர் கீதா ஜீவன், ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த நாகராஜாவின் மகன் விஸ்வநாத் ராஜா உள்ளிட்ட 12 பேர்கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். ஆனால், ஜமீன் குடும்பத்துக்கு உள்ளேயே விஸ்வநாத் ராஜாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. “உங்க அப்பா நாகராஜாவும், அம்மா ராஜேஸ் வரியும் பதவியில் இருக்கட்டும். நீ தேர்தலில் நின்றால், நாங்களும் போட்டி போடுவோம்” என ஜமீன் உறவுகள் சொல்ல, தேர்தலில் போட்டியிடும் முடிவைக் கைவிட்டார் விஸ்வநாத் ராஜா. இது கீதா ஜீவனுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

உள்ளாட்சியா... ஜமீன் ஆட்சியா? - கவனம் ஈர்த்த கடம்பூர் பேரூராட்சி தேர்தல்!

உடனே வேறு 10 தி.மு.க வேட்பாளர்களை (12 வார்டுகளில் கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., காங்கிரஸுக்கு தலா ஒரு சீட்) அறிவித்தார் கீதா ஜீவன். அதன்படி 1-வது 2-வது மற்றும் 11-வது வார்டுகளில் தி.மு.க சார்பில் ஜெயராஜ், சண்முகலெட்சுமி, சின்னத்துரை ஆகியோரும், அ.தி.மு.க ஆதரவாளர்களான நாகராஜா, ராஜேஸ்வரி, சிவகுமார் ஆகியோர் சுயேச்சையாகவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். எதிர்பாராத திருப்பமாக தி.மு.க-வைச் சேர்ந்த மூன்று வேட்பாளர் களின் வேட்புமனுக்களில் முன்மொழிந்து கையெழுத்து போட்டவர்களே, அது தங்கள் கையெழுத்து இல்லை என்று தேர்தல் நடத்தும் அலுவலரான சுரேஷ்குமாரிடம் புகார் அளித்தார்கள். அந்த மூன்று தி.மு.க-வினரின் வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே, ஜமீன் குடும்ப ஆதரவோடு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் மூவரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூன்று வார்டுகள் தவிர்த்து மீதமுள்ள 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதனால் ஜமீன் குடும்ப ஆதரவாளர்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றமான சூழல் நிலவியதால், மாவட்ட நிர்வாகத்தின் பாரிந்துரையின் பேரில் அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம்.

உள்ளாட்சியா... ஜமீன் ஆட்சியா? - கவனம் ஈர்த்த கடம்பூர் பேரூராட்சி தேர்தல்!

மறு தேர்தல்... மீண்டும் ஜமீன் குடும்பம்!

இதையடுத்து அந்த மூன்று வேட்பாளர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிவில், “அந்த மூன்று வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி, அந்த மூன்று சுயேச்சை வேட்பாளர்களுக்கும் வெற்றிச் சான்றிதழ் வழங்கிய தேர்தல் அலுவலர்கள், கடந்த 29.9.2022 அன்று மீதி 9 வார்டுகளுக்கான தேர்தலை நடத்தினர். வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று, கடந்த தேர்தலில் தி.மு.க-வுக்கு தண்ணி காட்டிய நாகாராஜாவிடமே பேச்சுவார்த்தை நடத்தியது கீதா ஜீவன் தரப்பு. இதைத் தொடர்ந்து அவர் உள்ளிட்ட வெற்றிபெற்ற மூன்று பேரும் தி.மு.க-வில் சேர்க்கப்பட்டார்கள்.

தேர்தல் நிலவரம் குறித்து உள்ளூர்காரர்களிடம் பேசினோம். “உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை செயல்படுத்த ஆரம்பித்த காலத்திலிருந்தே கடம்பூர் பேரூராட்சி, கடம்பூர் ஜமீன் குடும்பத்து வாரிசுகளின் வசம்தான் இருந்துவருகிறது. அ.ம.மு.க-வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், கயத்தார் யூனியன் சேர்மனுமான கடம்பூர் மூத்த ஜமீன் மாணிக்கராஜாவின் கைதான் இங்கே ஓங்கியிருக்கிறது. ராஜா, யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் எந்தப் பதவிக்கும் வர முடியும். ஊரக உள்ளாட்சித் தேர்தலில்கூட கயத்தார் யூனியனிலுள்ள 16 வார்டுகளில் 10-ல் அ.ம.மு.க-தான் வென்றது. தென் மாவட்டத்தில் அ.ம.மு.க கைப்பற்றிய ஒரே யூனியன் கயத்தார்தான்.

மாணிக்கராஜா
மாணிக்கராஜா

இவ்வளவு ஏன்... முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் சொந்த ஊரான சிதம்பரபுரம் வார்டிலும்கூட அ.ம.மு.க-வே வென்றது. ‘அமைச்சராகவும், வடக்கு மாவட்டச் செயலாளராவும் இருந்தும்கூட உங்க வார்டுலயே நம்ம கட்சியை ஜெயிக்கவெக்க முடியலையா?’ என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் கடம்பூர் ராஜூவிடம் அப்போதே சீறினார்கள். மாணிக்கராஜா அ.ம.மு.க பிரமுகராக இருந்தாலும், ஜமீனைவிட்டுப் பதவி போய்விடக் கூடாது என தன் தம்பி குடும்பத்தை மறைமுகமாக ஆதரிக்கிறார். தி.மு.க ஏழு வார்டுகளிலும், காங்கிரஸ், ம.தி.மு.க தலா ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன. ஆனால், பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க ஒரு வார்டில்கூட போட்டியிடவில்லை. போட்டியில் பங்கேற்காமல் அ.தி.மு.க-வை வெறும் பார்வையாளராக உட்காரவைத்திருக்கிறார் அ.ம.மு.க-வின் மாணிக்கராஜா.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

இப்போது போட்டியின்றி தேர்வாகியிருக்கும் நாகராஜா, மாணிக்கராஜாவின் உடன்பிறந்த தம்பி. ராஜேஸ்வரி, நாகராஜாவின் மனைவி. இவர்கள் இருவரும்தான் மாறி மாறி பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவராக பதவியில் இருந்தார்கள். இந்த முறையும் அவர்களே தி.மு.க சார்பில் அதே பதவிக்கு வருவார்கள். வெற்றி உறுதியென்று தெரிந்தும்கூட எம்.பி., கனிமொழியும், அமைச்சர் கீதா ஜீவனும் மூன்று மாதங்களாக கடம்பூர் பேரூராட்சியையே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும் இங்கே தி.மு.க வென்றதாகச் சொல்ல முடியாது. ஜமீன் குடும்பத்தின் வெற்றியாகவே உள்ளூர் மக்கள் பார்ப்பார்கள்” என்றனர்.

ஜனநாயக ஆட்சியிலும், ஜமீன்கள் தங்கள் சிம்மாசனத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அரசியல் கட்சிகளும் அதற்குத் துணைபோவதை என்னவென்று சொல்ல?!