ஏழைகளுக்கும் கிராமங்களுக்கும் சேவை கிடைக்காது! - புதிய மின்சாரச் சட்டம் வரமா, சாபமா?

தொலைத் தொடர்புத்துறையில் தனியாரை அனுமதித்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைப் பலவீனப்படுத்தி விட்டார்கள்.
நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசு தீவிரம் காட்டிவரும் மசோதாக்களில் ஒன்று, மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2021. மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க வழிவகுக்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இனி தனியார் நிறுவனங்களிடமிருந்து நுகர்வோர் நேரடியாக மின்சாரம் வாங்கும் சூழல் ஏற்படும் என்கிறார்கள். இது சாதகமா, பாதகமா?
மின் கட்டண உயர்வு தொடர்பாக பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார். மின் கட்டண உயர்வு பற்றி தமிழக அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், அன்புமணியின் அறிக்கை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. “மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருப்பதால், மின்சார சட்டத் திருத்த மசோதாவைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல், எதிர்காலத்தில் மின்கட்டணம் உயரப்போவதை மட்டுமே சூசகமாகக் குறிப்பிட்டிருக்கிறது பா.ம.க” என்கிறார்கள் இது பற்றிப் பேசும் அரசியல் விமர்சகர்கள். எதிர்க்கட்சிகள் அனைத்துமே இந்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். கேரள சட்டமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தொடர்ந்து இந்த மசோதாவை எதிர்த்துவருகிறார். வெறும் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்கின்றனவா என்று பார்த்தால், இந்தியாவில் ஒட்டுமொத்த மின்துறைத் தொழிலாளர் சங்கங்களுமே இதைக் கடுமையாக எதிர்க்கின்றன.

“ஏன் இவ்வளவு எதிர்ப்பு?” என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரனிடம் கேட்டோம். “நம் நாட்டில் அரசு நிறுவனங்கள்தான் மின் விநியோகம் செய்துவருகின்றன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மின் விநியோகம் அதானி, ரிலையன்ஸ், டாடா போன்ற தனியார் நிறுவனங்களின் கைகளுக்கு போய்விடும். அவர்களிடமிருந்துதான் மக்கள் மின்சாரத்தை வாங்கவேண்டிய சூழல் உருவாகும்.
தொலைத் தொடர்புத்துறையில் தனியாரை அனுமதித்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைப் பலவீனப்படுத்தி விட்டார்கள். ஆரம்பத்தில் குறைந்த கட்டணத்தில் சேவை அளித்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இப்போது அவர்கள் வைத்ததுதான் கட்டணம் என்றாகிவிட்டது. அதைப்போல, மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், மின் கட்டணமும் உயரும். அதே சமயம் சிலர், ‘மின் விநியோகத்தில் தனியாரை அனுமதித்தால் நிறுவனங்களுக்கிடையே போட்டி அதிகரித்து, நுகர்வோருக்குச் சிறப்பான சேவை கிடைக்கும்’ என்று வாதிடுகிறார்கள். அது உண்மையல்ல... தனியார் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே குறிவைத்துச் செயல்படும். அதனால் பெருநகரங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அதிக மின்நுகர்வு மற்றும் லாபம் கிடைக்கக்கூடிய இடங்களில் மட்டுமே தனியார் நிறுவனங்கள் கவனம் செலுத்தும். ஏழைகள் வசிக்கும் பகுதிகளையும், கிராமப்புறங்களையும் அவர்கள் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள்” என்றார் எச்சரிக்கும் தொனியில்.
நம்மிடம் பேசிய மின்வாரிய அதிகாரிகள் சிலரோ, “மின் விநியோகம் தனியார்மயம் ஆக்கப்பட்டால், கிராமப்புறங்களின் மின் விநியோகம் செய்யும் பொறுப்பை மட்டுமே மின் வாரியத்திடம் கொடுப்பார்கள். லாபம் கிடைக்கும் பகுதிகளைத் தனியார் நிறுவனம் எடுத்துக்கொண்டால், மின் வாரியங்களுக்கு பொருளாதாரரீதியில் பலத்த நஷ்டம் ஏற்படும். ஏற்கெனவே மின் வாரியம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் சூழலில், கிராமப்புறங்களில் மின்வாரியத்தால் சரிவர சேவை வழங்க முடியாது. இதனால், கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவதுடன், விசைத்தறி மற்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கும் ஆபத்து ஏற்படும்” என்றார்கள்.
இது பற்றிப் பேசிய அரசியல் பார்வையாளர்களோ, “கூட்டாட்சியை பாதிக்கக்கூடிய வகையிலான அம்சங்கள் இந்த மசோதாவில் இருக்கின்றன. புதிய சட்டத்தின்படி ‘மின் ஒப்பந்த ஒழுங்குமுறை ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். அதிகாரம் மிகுந்த இந்த ஆணையத்தால், மாநில மின் ஒழுங்குமுறை ஆணையம் தனது அதிகாரத்தை இழந்துவிடும் அபாயமும் உள்ளது. மின் கொள்முதலில் தொடங்கி மின் கட்டணம் நிர்ணயம் வரை மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படும்” என்றார்கள்.

ஆனால் மேற்கண்ட விமர்சனங்களை மொத்தமாக நிராகரிக்கிறார் பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர். “வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக்கொண்ட புதிய மின்சார சட்டத் திருத்த மசோதா வரவேற்கத்தக்கது. தனியார் நிறுவனமா, அரசு நிறுவனமா என்பது முக்கியமல்ல... நீடித்த, பற்றாக்குறை இல்லாத மின்சார உற்பத்தியையும், சிறப்பான மின் விநியோகத்தையும் யார் தருகிறார்களோ அவர்கள் அந்தத் துறையில் பங்குபெறுவதில் என்ன தவறு இருக்கிறது? துரதிர்ஷ்டவசமாக, அரசியல் காரணங்களால் நமது மின்வாரியம் ஏகப்பட்ட இழப்புகளைச் சந்தித்துவருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனில் ஏன் தத்தளிக்கிறது என்பதற்கான காரணங்களை ஆராய்ந்தால் உண்மை புரியும். வணிகத்தில் போட்டிச் சூழலை உருவாக்கவில்லை என்றால், தமிழ்நாடு மின்வாரியம் இன்னும் மோசமான நிலையைச் சந்திக்க நேரிடும். மின்சாரத்துக்கு மானியம் கொடுக்க மாநில அரசு விரும்பினால், அதைப் பயனாளிகளுக்கு நேரடியாகப் பணமாக வழங்கலாம். புதிய மின்சாரச் சட்டத்தால் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் உற்பத்தியும் அதிகரிக்கும்” என்கிறார் ஷியாம் சேகர்.
ஏற்கெனவே கொரோனா கொடுத்த பொருளாதார துயரங்களிலிருந்தே இன்னும் மீளவில்லை சாமானிய மக்கள். அவர்கள் தலையில் மேன்மேலும் சுமையைச் சுமத்துவது மத்திய அரசுக்கு அழகல்ல!