அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

யானையை புதைத்த விவசாயி! - ‘தோண்டி’ எடுத்த வனத்துறை

இறந்த யானை
பிரீமியம் ஸ்டோரி
News
இறந்த யானை

இரண்டு மண்வெட்டி, ஒரு கடப்பாரையை எடுத்துவந்த மூவரும், யானையின் சடலத்துக்கு அருகிலேயே ஏழு அடி ஆழம், ஏழு அடி அகலத்துக்குக் குழி தோண்டியுள்ளனர்.

மின்வேலியில் சிக்கி இறந்துபோன யானையை, இரவோடு இரவாக குழிதோண்டிப் புதைத்துவிட்ட அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரியில் அரங்கேறியிருக்கிறது!

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகேயுள்ள, கடூர் கிராமத்தையொட்டிய காப்புக்காடு பகுதியில் அக்குபாய் கொட்டாய் பகுதி இருக்கிறது. இந்த ஊரைச் சேர்ந்த விவசாயி எல்லப்பன், தனது நிலத்தில் நெல் பயிரிட்டு, வனவிலங்குகளால் சேதம் ஏற்படுவதைத் தடுக்க, சட்ட விரோதமாக மின்வேலி அமைத்திருக்கிறார்.

யானையை புதைத்த விவசாயி! - ‘தோண்டி’ எடுத்த வனத்துறை

கடந்த 14-11-2022 அன்று எல்லப்பனின் விளைநிலத்துக்கு வந்த காட்டு யானைக்கூட்டம் மின்வேலியைக் கடக்க முயன்றபோது, குட்டியானை ஒன்று மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தது. அது ஐந்து வயதான ஆண் குட்டி. இதையடுத்து வனத்துறையிடமிருந்து தப்பிப்பதற்காக, மண்ணில் குழி தோண்டி யானையைப் புதைத்துள்ளனர் எல்லப்பனும் அவருடைய மகன்களும்.

‘யானையை எப்படி குழிதோண்டிப் புதைத்தார்கள்?’ என்ற அதிர்ச்சிக் கேள்வியை வனத்துறையினரிடம் கேட்டபோது, ‘‘14-ம் தேதி காலை 5 மணிக்கு வழக்கம்போல நெல் வயலுக்குச் சென்ற எல்லப்பன், வேலியில் சிக்கி குட்டியானை இறந்து கிடந்ததைப் பார்த்திருக்கிறார். சட்டவிரோதமாக வேலி அமைத்திருந்ததால் அச்சமடைந்த அவர், தன் மகன்கள் முனிராஜ், சுப்ரமணி ஆகியோரைச் சம்பவ இடத்துக்கு வரச்சொல்லி, யானை உடல்மீது இலை, செடி, மரக்கட்டைகளைப் போட்டு மூடி மறைத்துள்ளனர்.

யானையை புதைத்த விவசாயி! - ‘தோண்டி’ எடுத்த வனத்துறை

பின்னர் 15-ம் தேதி இரவு 10 மணிக்கு இரண்டு மண்வெட்டி, ஒரு கடப்பாரையை எடுத்துவந்த மூவரும், யானையின் சடலத்துக்கு அருகிலேயே ஏழு அடி ஆழம், ஏழு அடி அகலத்துக்குக் குழி தோண்டியுள்ளனர். 16-ம் தேதி அதிகாலை, உழவுக்குப் பயன்படுத்தும் தங்களுடைய இரண்டு மாடுகளை ஓட்டி வந்து, யானையின் உடலில் கயிறுகளைக் கட்டி, மாடுகளின் உதவியுடன் குழிக்குள் தள்ளிவிட்டு, மண் போட்டு மூடியுள்ளனர். வீட்டுக்குச் சென்ற பிறகு பயத்தில் முனிராஜ் சாத்தனக்கல் கிராமத்துக்குச் சென்றுவிட்டார். சுப்ரமணி கிராமத்திலுள்ள கிரஷரிலும், எல்லப்பன் நண்பர்கள் வீட்டிலும் பதுங்கிக்கொண்டனர். ஆனாலும் மூவரையும் கொத்தாகத் தூக்கிவிட்டோம்’’ என்றனர்.

சம்பவத்தை விசாரித்த ராயக்கோட்டை வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி நம்மிடம், ‘‘விவசாயத்துக்குப் பயன்படுத்துகிற ‘த்ரீபேஸ் பவர் லைன்’ எடுத்து மின்வேலி அமைத்திருக்கிறார் எல்லப்பன். அதனால்தான் யானை இறந்திருக்கிறது. யானையைக் குழி தோண்டிப் புதைத்த விவகாரம் ஒரு இன்ஃபார்மர் மூலமாகத்தான் தெரியவந்தது. ஆனாலும் எல்லப்பனிடம் ‘யானையோட உடல் எங்கே?’ என்று கேட்டபோது, ‘யானை என்ன தின்னுற பொருளா சார்... மறைக்கிறதுக்கு... யானையெல்லாம் எனக்குத் தெரியாது’ என்று ஒரேயடியாக மறுத்தார். தீவிர விசாரணைக்குப் பின்னரே குற்றத்தை ஒப்புக்கொண்டார்’’ என்றார்.