Published:Updated:

25 யானைச் சடலங்கள்... 70 யானைத் தந்தங்கள்!

யானைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
யானைகள்

ஓசூர் வனக்கோட்டத்தில் தொடரும் வேட்டை

தமிழக வனங்களில் நடக்கும் யானை வேட்டை பற்றிய தகவல்கள் நம்மை அதிரவைக்கின்றன. `யானைகளை வேட்டையாடும் கும்பல்களைப் பிடித்து, இதற்கு முடிவு கட்டாவிட்டால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும்’ என்று கவலை தெரிவிக்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.

மதுரை வனக்கோட்டத்தின் வனவேட்டை குற்ற விவரங்கள் பற்றி, ‘கட்டுக்கடங்காத காட்டுயிர் வேட்டை... அதிரவைக்கும் அஜி பிரைட் நெட்வொர்க்!’ என்ற தலைப்பில் 12.1.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் எழுதியிருந்தோம். அந்த வரிசையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஓசூர் வனக்கோட்டத்தில் 2010 முதல் 2019-ம் ஆண்டு வரையிலுமான வேட்டை, திருட்டு, கடத்தல் போன்ற வழக்கு விவரங்கள், கைப்பற்றப்பட்ட வனவிலங்குகளின் உடல் பாகங்கள் போன்றவற்றை ஆர்.டி.ஐ மூலம் கேட்டிருந்தோம். கிடைத்த தகவல்கள் அனைத்தும் `திடுக்’ ரகம்!

ஓசூரில் கடந்த 10 ஆண்டுகளில் 25 இறந்த யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால், கைப்பற்றப்பட்ட தந்தங்களின் எண்ணிக்கை 70. எனவே, ``கண்டெடுக்கப்பட்ட சடலங்களைவிட அதிகமான யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம்’’ என்கிறார்கள் வன உயிரின ஆர்வலர்கள். இதுபோக, மான் கொம்புகள் 20, நாட்டு வெடிகுண்டுகள் 20, துப்பாக்கிகள் 14 உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன (பார்க்க... இன்ஃபோ). இவை 2010 முதல் 2019-ம் ஆண்டு வரை கைப்பற்றப்பட்டவை. ஆனால், ‘‘கைப்பற்றப்படாத பொருள்கள், கைது செய்யப்படாத வேட்டைக்காரர்கள் எண்ணிக்கை பதிவிலுள்ள கணக்கைவிட மூன்று மடங்கு இருக்கும்’’ என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

தேன்கனிக்கோட்டை, அஞ்சட்டி, ஜவளகிரி, உரிகம், தென் ராயக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளை உள்ளடக்கியது, ஓசூர் வனக்கோட்டம். இந்தப் பகுதிகள் அனைத்தும் கர்நாடக வனப்பகுதிக்கு அருகிலேயே அமைந்துள்ளன. அரிய வகை உயிரினங்கள் வாழும் பல்லுயிர் வளம் நிறைந்த பகுதி இது. ஓசூர் வனக்கோட்டத்திலுள்ள மொத்த காப்புக்காடுகளின் எண்ணிக்கை 123. அவற்றின் பரப்பளவு 1,42,200 ஹெக்டேர். இதில் காவிரி வன உயிரின சரணாலயத்தில் மட்டுமே 24 காப்புக்காடுகள் உள்ளன. இதன் மொத்தப் பரப்பளவு 50,433 ஹெக்டேர். இவ்வளவு பிரமாண்டமான பரப்பளவு கொண்ட வனப்பகுதியைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டுள்ள மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 317. வனக்காவலர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மற்றும் வனவர்கள்தான் காடுகளைப் பாதுகாக்க இரவு பகல் பாராமல் நேரடியாகக் களத்தில் நிற்கின்றனர். வேட்டை மற்றும் விலங்குக் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் அவர்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

யானைகள்
யானைகள்

‘‘ஓசூர் வனப்பகுதியில் மொத்தம் 88 வனவர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் வெறும் 17 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 71 காலி பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால்தான் காட்டுயிர்களை வேட்டையாடுவது அதிக அளவில் நடக்கிறது’’ என்ற குற்றச்சாட்டு உள்ளது.

‘‘வேட்டையாடும் குற்றவாளிகள் கர்நாடக எல்லைக்கு உட்பட்ட காடு வழியாக தமிழக எல்லைக்குள் நுழைகின்றனர். வந்த வழியாகவே தப்பியும்விடுகின்றனர். தமிழக வனத்துறை, தன்னிடமிருக்கும் சொற்ப பணியாளர்களைக் கொண்டு கர்நாடக எல்லைப் பகுதிகளை முழுமையாகக் கண்காணிக்க முடியாமல் திணறி வருகிறது. கர்நாடக வனப்பகுதிப் பணியாளர்கள் இந்த வேட்டை கும்பலுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது. இங்கு வேட்டையாடப்படும் காட்டுயிர்களின் பொருள்கள் கர்நாடகா வழியாக, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன’’ என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.

ஓசூர் வனக்கோட்ட அலுவலர் பிரபுவிடம் இது குறித்துக் கேட்டோம். ‘‘ஓசூர் வனக்கோட்டத்தில் தொடர் வேட்டை ஆட்கள் யாருமில்லை. அவ்வப்போது வன உயிரின வேட்டை ஆட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வேட்டையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநில எல்லைகளில் வனச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன தணிக்கை நடத்தப்படுகிறது. 60 வேட்டைத் தடுப்பு காவலர்கள், 10 அதிவிரைவு மீட்புக்குழு காவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் காப்புக்காட்டில் இரவு பகலாக தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.

ஓசூர் வனக்கோட்டத்தில் கைப்பற்றப்பட்டவை!
ஓசூர் வனக்கோட்டத்தில் கைப்பற்றப்பட்டவை!

வேட்டையாடப்படும் வன உயிரினப் பொருள்கள் பெங்களூரு வழியாக, சர்வதேச அளவில் கொண்டுசெல்வதாகக் கூறப்படுவதற்கு ஆதாரம் எதுவுமில்லை. காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது. வேட்டையாடுதல் நடைபெறுவதற்கு காலி பணியிடங்களை முக்கிய காரணமாக கருத இயலாது. வேட்டையாட்களுக்கு துறைப் பணியாளர்கள் எவரும் துணை போவதில்லை’’ என்றார்.

தமிழக வனத்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுத்து காலி பணியிடங்களை நிரப்புவதோடு, தமிழகக் காடுகளில் நடக்கும் வேட்டைக் குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்!

‘‘கோவையில் மட்டுமல்ல... ஓசூரிலும் விசாரணை தேவை!’’

கோவை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 14 யானைகள் மர்மமான முறையில் இறந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலரான சேகர் குமார் நீரஜ் தலைமையில், இயற்கை ஆர்வலர்களை உள்ளடக்கிய விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. ‘இந்தக் குழு ஆறு மாதங்களில் யானைகள் இறப்புக்கான உண்மைக் காரணங்களைக் கண்டறிந்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘இந்தக் குழு ஓசூர் வனக்கோட்ட யானைகள் இறப்பு சம்பவங்களிலும் கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும்’ என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மூன்று மாதங்களில் 13 யானைகள்... இது கோவை சோகம்

சம்பவம் 1:

கோவை மாவட்டம், ஜம்புகண்டி அருகே வாயில் காயத்துடன் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று சுற்றி வந்தது. சாப்பிட முடியாமல் தவித்துவந்த யானை இரண்டு நாள்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

சம்பவம் 2:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே, தேக்கம்பட்டிப் பகுதியில் காதில் ரத்தம் வடிந்த நிலையில் ஒரு பெண் யானை மரணம் அடைந்திருந்தது. விசாரணையில், அந்த யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இப்படி, கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 13 யானைகள் உயிரிழந்துள்ளன. குறுகியகாலத்தில் யானைகளின் அடுத்தடுத்த மரணங்கள் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளன. சூழலியல் செயற்பாட்டாளர் மோகன்ராஜ், ‘‘மூன்று மாதங்களில் 13 யானைகள் இறப்பு என்பது சாதாரண எண்ணிக்கை இல்லை. உணவுக்காக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு யானைகள் செல்வது வழக்கம். அப்போது, அவற்றின் வழித்தடத்தில் இடையூறு இல்லாவிட்டால், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கோவையில் இடையூறுகள் இருப்பதுதான் பிரச்னைக்கு முக்கிய காரணம். ‘காடுகளில் யானைக்குத் தண்ணீர் வைக்கிறோம்; உணவு உற்பத்தி செய்ய காடு வளர்க்கிறோம்; வெளியில் வரும் யானைகளை விரட்ட தனிப்படை அமைத்துள்ளோம்; யானையைப் பிடித்து வேறு காட்டில் விடுகிறோம்...’ என்று வனத்துறை எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில்தான் முடிந்துள்ளன.

யானைகளால் சேதமடையும் விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க காலதாமதம் ஆகிறது. பல இடங்களில் உரிய தொகை கிடைப்பதில்லை. இந்தப் பிரச்னையை வனத்துறை சரியாகக் கையாளவில்லை. இதுவும் பிரச்னைக்கு முக்கியக் காரணம். யானைகள் வழித்தடத்தை மீட்காமல், இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. அதைச் சரிசெய்யவில்லையென்றால் பிரச்னை மேலும் அதிகரிக்கும்’’ என்று எச்சரித்தார்.

25 யானைச் சடலங்கள்... 70 யானைத் தந்தங்கள்!

‘‘கோவையில் மின்வேலிகள், ரயில், அவுட்டுக்காய் அபாய வரிசையில் துப்பாக்கிச்சூட்டில் யானை இறப்பது என்பது பிரச்னை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டது என்பதற்கான எச்சரிக்கை மணி. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் தொடங்கி 2020, பிப்ரவரி மாதம் வரை கோவையில் ஒரு யானைதான் இறந்துள்ளதாக வனத்துறை கூறுகிறது. அதேநேரத்தில், ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரை 13 யானைகள் உயிரிழந்துள்ளன. அதில் சிறுமுகை வனச்சரகத்தில் மட்டும் எட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

மேட்டுப்பாளையம், சிறுமுகை சுற்றுவட்டாரங்களில் மலைகளை ஒட்டியுள்ள தோட்டங்களில், யானைகளை விரட்ட சிலர் கள்ளத் துப்பாக்கியுடன் வலம்வருகின்றனர். சிலர் யானைகள் தண்ணீர் குடிக்கும் நீர்நிலைகளில் விஷம் கலக்கின்றனர். ஆனால், யானைகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. பல இடங்களில் யானை இறந்து, உடல் அழுகிய பிறகே பிரேத பரிசோதனை செய்கின்றனர். அதனால், யானை இறப்புக்கான காரணத்தைக் கண்டறிவதிலும் சிக்கல் உள்ளது’’ என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

யானைகள் ஆராய்ச்சியாளர் ஸ்ரீதர், ‘‘இந்தியாவில் 22 மாநிலங்களில் யானைகள் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் 6-14 சதவிகித யானைகள் இயற்கையாக இறப்பது சாதாரணம்தான். ஆனால், மின்வேலி, விஷம், துப்பாக்கிச்சூடு ஆகியவை மூலம் யானைகள் இறப்பது சாதாரணமல்ல. யானைகளின் பிரேத பரிசோதனை முடிவுகளை பொதுவெளியில் வெளியிடுவதன் மூலம், பொதுமக்களிடமும் அதுகுறித்து விழிப்புணர்வு கொடுக்க முடியும்” என்றார்.

கோவை மண்டல தலைமை உதவி வனப்பாதுகாவலர் தெபசிஸ் ஜனா, ‘‘கோவையில் கடந்த ஆறு மாதங்களில் 14 யானைகள் உயிரிழந்துள்ளன. இவற்றில் ஒன்று மட்டுமே இயற்கைக்கு மாறான மரணம். மற்ற யானைகளின் மரணம் இயற்கையானதுதான். வறட்சி, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் யானை உயிரிழப்பு தொடர்கிறது. இது இயல்பானதுதான். ஆனால், 10 நாள்களில் 12 யானைகள் இறந்துவிட்டதாகச் சமூக வலைதளங்களில் சொல்லப்படும் தகவல்களில் உண்மை இல்லை. கோவையில் யானைகள் இறப்பைக் குறைத்து, அதன் வாழ்விடத்தை மேம்படுத்த யானை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளோம்’’ என்றார்.