நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

எலான் மஸ்க்கின் ஹைப்பர் லூப்... வெற்றி காணுமா? - அசத்தல் அதிநவீன தொழில்நுட்பம்

எலான் மஸ்க்
பிரீமியம் ஸ்டோரி
News
எலான் மஸ்க்

எலான் மஸ்க் கண்டுபிடித்துத் தந்துள்ள ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் வெற்றி பெறுமா என்பது மிக முக்கியமான கேள்வி ஆகும்!

திநவீன தொழில்நுட்பங்களை மனித இனத்துக்கு அறிமுகப்படுத்துவதில் எலான் மஸ்க்குக்கு எப்போதுமே தனியாத ஆர்வம் உண்டு. உலகளவில் அரசாங்கங்கள் மட்டுமே விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பிவரும் வேளையில், தனிமனிதராக அந்தக் காரியத்தைச் செய்து வியக்க வைக்க எலான் மஸ்க், தற்போது ஹைப்பர் லூப் என்கிற அதிநவீன போக்குவரத்து வழிமுறைகளின் கண்டுபிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த‌ ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை விர்ஜின் ஹைப்பர் லூப் நிறுவனம் முதல் முறையாக மனிதர்களை வைத்து வெற்றிகரமாக சோதனை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
எலான் மஸ்க்கின் ஹைப்பர் லூப்... வெற்றி காணுமா? - அசத்தல் அதிநவீன தொழில்நுட்பம்

ஹைப்பர் லூப் தொழில்நுட்பம்...

காற்று அழுத்தம் குறைக்கப்பட்ட குழாய்களில் காந்தத்தின் விசை கொண்டு ஒரு கேப்ஸூலை வேகமாக இயக்க வைப்பதே ஹைப்பர் லூப் தொழில்நுட்பம். ஒரு குழாய்க்குள் ஒரு கேப்ஸுலை நுழைக்கப் பார்த்தால், அவற்றுக்கு இடையே இருக்கும் உராய்வால் கேப்ஸூல் வேகமாகச் செல்ல முடியாது. இந்தச் சவாலை சமாளிக்க எலான் மஸ்க் ஒரு யோசனையை வெளியிட்டார். அதன்படி, அந்தக் குழாயின் தொடக்கத்தில் ஒரு மின் விசிறி கொண்டு, காற்றை வேகமாக அழுத்தத்துடன் அனுப்ப வேண்டும். இதனால் குழாயில் ஒரு காற்று மண்டலம் உருவாகி உராய்வு குறையும். பயணம் செய்யும் குழாயின் முழு நீள‌த்துக்கு பேட்ட‌ரி கொண்டு இந்த அழுத்தமான காற்றைக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் அதிவேகமாக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்ல முடியும்.

ஹைப்பர் லூப் பற்றி எலான் மஸ்க் முதன்முதலில் 2013-ல் தன் கருத்துகளை வெளியிட்டார். அமெரிக்காவில் தங்களுக்கு இடையே அதிக போக்குவரத்து உள்ள இரு நகரங்கள் கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ ‍மற்றும் லாஸ் ஏஞ்சலிஸ். இந்த இரு நகரங்களுக்கு இடையே மிகவும் வேகமாகச் சென்று வர ஒரு போக்குவரத்து பயன்முறை பற்றி யோசித்தபோது உருவானதே ஹைப்பர் லூப்.

அதிகம் செலவு பிடிக்கும் புல்லட் ரயில்...

கலிஃபோர்னியாவில் புல்லட் ரயில் பரிந்துரை செய்யப்பட்டபோது எலான் மஸ்க் மிகவும் வருத்தப்பட்டார். தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் அமெரிக்காவில் இப்படி ஒரு முடிவா என்று தன் கட்டுரையில் எழுதினார். அவர் கணக்கின்படி, ஒரு கிலோ மீட்டருக்கு மிக அதிக முதலீடு தேவைப்படும் ஒரு போக்குவரத்து வழிமுறைதான் புல்லட் ரயில். 1,500 கிலோ மீட்டருக்குக் குறைவாக இடைவெளி உள்ள, அதிக போக்குவரத்து உள்ள‌ இரு நகரங்களுக்கு இடையே சென்று வர ஹைப்பர் லூப் மிகச் சிறந்தது என்பது அவர் கருத்து.

எலான் மஸ்க்கின் ஹைப்பர் லூப்... வெற்றி காணுமா? - அசத்தல் அதிநவீன தொழில்நுட்பம்

ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தில் காப்ஸூல் மற்றும் காற்றை உருவாக்கும் மோட்டாருக்கு ஆகும் செலவைவிட, குழாய் செய்ய ஆகும் செலவுதான் ரயில் போல, இதற்கு தரையில் டிராக் போட அவசியம் இல்லை. பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை தோண்டி அல்லது நிலத்தின் மேல் பில்லர் கட்டி, அதன்மேல் குழாய்களைப் பதிக்கலாம்.

அவர் எழுதிய கட்டுரையில் ஹைப்பர் லூப்புக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் விளக்கினார். காப்ஸூல் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும், அவற்றில் எத்தனை பயணிகள் செல்லலாம், எத்தனை நிமிட இடைவெளி விட்டுச் செல்ல வேண்டும், என்ன வேகம் வரை செல்லலாம் போன்ற அனைத்துத் தகவல்களையும் கணித்து வெளியிட்டார்.

ஹைப்பர் லூப்பும் பாதுகாப்பும்

விமானத்துக்கு நிகரான‌ வேகத்தில் செல்லக் கூடிய ஹைப்பர் லூப்பில் பாதுகாப்பு பற்றி பல கேள்விகளுக்குப் பதில் இல்லை. மணிக்கு 760 மைல்கள் வரை வேகமாக‌ச் செல்லக்கூடிய இந்தக் கருவியில் போக்குவரத்து ச‌ம்பந்தமான ஆப‌த்துகள் பல மடங்கு அதிகரிக்கின்றன. பயணம் செய்யும்போது பூகம்பம் ஏற்பட்டால் என்ன ஆகும், பயணம் செய்யும் குழாய் உடைந்தால் என்ன ஆகும், பல மைல்க‌ளுக்கு குறைந்த காற்று அழுத்தத்தை உருவாக்க முடியுமா, வளைவுகளில் திரும்புவது சுலபமல்லவே, இதற்கு என்ன தீர்வு என்கிற கேள்விகளுக்கு இப்போது பதில் இல்லை.

Dr.ஷங்கர் வேணுகோபால், எஸ்.ராமச்சந்திரன்
Dr.ஷங்கர் வேணுகோபால், எஸ்.ராமச்சந்திரன்

சமீபத்தில் மனிதர்களைக் கொண்டு முதல் முறையாக நடந்த ஹைப்பர் லூப் சோதனை, அரை கிலோ மீட்டர் டிராக்கில் நடத்தப்பட்டது. லாஸ் வேகாஸ் நகரத்திலிருந்து அரை மணி நேரம் சென்றால் உள்ள ஒரு பாலைவனத்தில் இந்த டிராக் உள்ளது. 3.3 மீட்டர் விட்டம் கொண்ட இந்தக் குழாயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடிந்தது. இந்தச் சோதனையில் பயன்படுத்தப்பட்ட காப்ஸூல் விர்ஜின் ஹைப்பர் லூப்பின் ஒரிஜினல் திட்டத்துடன் ஒப்பிடும்போது மிகச் சிறிதே. 23 பயணிகள் வரை செல்லக்கூடிய காப்ஸூலே எலான் முதலில் தீட்டிய திட்டம்.

விர்ஜின் ஹைப்பர் லூப் நிறுவனத்தின் தலைவர்கள் இருவர் இதில் பங்கேற்றனர். தலைமைத் தொழில்நுட்ப அதுகாரி (CTO) ஜோஷ் சோதனை நடக்கும்முன், இந்த அனுபவம் விமானத்தில் ப‌றப்பது போல இருக்கும் என்று கூறினார்.

எவ்வளவுதான் வேகமாகவும் பத்திரமாகவும், வசதியாகவும் இருந்தாலும் ஹைப்பர் லூப் அமைக்கத் தேவையான முதலீடு எவ்வளவு என்பதை வைத்தே பல்வேறு நாடுகள் இந்தப் போக்குவரத்து முறையை ஏற்றுக்கொள்ளுமா, இல்லையா என்பதை முடிவு செய்யும். அதுவரை ஹைப்பர் லூப் தொழில்நுப்டம் பற்றி கேட்கவும் படிக்கவும் சுவாரஸ்யமான தலைப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!