தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

புத்துயிர்ப்பு: பெண் கிருமி பெண் எலும்பு பெண் நோய்

பெண்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்

காப்ரியல் ஜாக்ஸன்

னக்கு 23 வயதாகும்போது தீராத வலியால் பீடிக்கப்பட்டேன். `எண்டோமெட்ரியாசிஸ்' என்றொரு பெயரைச் சொல்லி, `அதுதான் உனக்கு' என்று என் மருத்துவர் சொன்னார். புரியவில்லை. எனக்கு ஏன் புரிய வேண்டும், மருத்துவர் கொடுக்கும் மாத்திரையை விழுங்கிவிட்டு, அவர் சொல்வதைப் பின்பற்றினால் போதாதா என்று அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், வலி குறைவதாக இல்லை. எத்தனை முறை வலியுறுத்தியும் மருத்துவரால் என் வலியைப் போக்கவே முடியவில்லை. ஏனென்று விளங்கவில்லை.

புத்துயிர்ப்பு: பெண் கிருமி பெண் எலும்பு பெண் நோய்

இது அப்படியொன்றும் அபூர்வமான நோயல்லவே... இதற்கு நிச்சயம் தகுந்த நிவாரணம் கண்டுபிடித்திருக்க வேண்டுமே... பத்து ஆண்டுக் காலம் வலியோடு போராடிய பிறகு எனக்கோர் உண்மை புரிந்தது. என் மருத்துவரால் எனக்கு சரியான சிகிச்சை அளிக்கமுடியாமல் போனதற்குக் காரணம், எனக்கு என்ன நடக்கிறது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான். இது என் மருத்துவரின் குறையல்ல, மருத்துவத்தின் குறை என்பதைக் கண்டுபிடித்தேன். இப்போது எனக்கு வலிக்கவில்லை. காரணம், இது என் வலியல்ல; பெண்களின் வலி. இந்த வலியை அறிவியலால் தீர்க்கமுடியவில்லை என்பதோடு, அந்த வலிக்கு அறிவியலும் ஒரு காரணம்.

காப்ரியல் ஜாக்ஸன் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் Pain and Prejudice புத்தகத்தின் கதை இதுதான். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேட் யங் என்பவரின் ஆய்வொன்றை காப்ரியல் ஜாக்ஸன் தனது நூலில் கவனப்படுத்துகிறார். பொதுப்புத்தியில் அழுத்தமாகப் பதிந்து போயி ருக்கும் ‘பெண் என்றால் குழந்தை பெற்றுக்கொடுப்பவர் என்னும் கருத்தை அறிவியலும் நீண்ட காலத்துக்கு ஏற்றுக்கொண்டு செயல்பட்டுள்ளது' என்கிறார் யங். அதற்கோர் எடுத்துக்காட்டும் தருகிறார் அவர்.

மருத்துவ மாணவர்கள் கற்பதற்கு உதவியாக ஓவியர்களை அமர்த்தி விதவிதமாக மனித எலும்புக்கூடுகளை வரையவைத்து வாங்கும் வழக்கம் தொடக்கத்தில் இருந்திருக்கிறது. சாதாரண ஓவியர்கள் அல்ல, உடற்கூறியலில் திறன்பெற்ற நிபுணர்களே இவற்றை வரைவார்கள். இந்த ஓவியங்களை கேட் யங் பார்வையிட நேர்ந்தபோது இரண்டு விஷயங்கள் அவருக்குப் புரிந்தன. முதலாவது, இந்த எலும்புக்கூடுகளில் பெரும்பாலானவை ஆண்களின் எலும்புக்கூடுகளாக இருந்தன. இரண்டாவது, மிகச் சிறிய எண்ணிக்கையில் இடம்பெற்றிருக்கும் பெண்களின் எலும்புக்கூடுகள் இயல்பானவையாக இல்லை. பெண்ணின் மண்டையோடு ஆணுடையதைக் காட்டிலும் அளவில் மிகச் சிறியதாகவும் இடுப்பெலும்புகள் அசாதாரணமாகப் பெருத்தும் காணப்பட்டன.

பெண் மனம் என்றொன்று தனியாக இயங்குகிறதா அல்லது அதுவும் ஆண் மனம் போன்றதுதானா என்னும் கேள்வியை வைத்துக்கொண்டு உருட்டிக்கொண்டிருந்தது உளவியல்.

காரணத்தை யூகிப்பது எளிது என்கிறார் கேட் யங். குழந்தை சுமப்பதே பெண்ணின் முதன்மைப்பணி என்பதால் பெரிய இடுப்பையும், சிந்திக்கவேண்டிய அவசியம் குறைவு என்பதால் சிறிய மூளையைச் சுமக்கும் சிறிய மண்டையோட்டையும் ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள். இதை வரைந்தவர்கள் அனைவருமே ஆண்கள் என்பதால், அவர்கள் உடற்கூறியல் நிபுணர்களைப் போலல்லாது ‘ஆண்களைப் போலவே’ சிந்தித்து வரைந்திருக்கிறார்கள். இந்த ஓவியங்களைத் தினம் தினம் பயிலும் மாணவர்களிடம் பெண்கள் பற்றிய எத்தகைய பிம்பங்கள் வளர்ந்திருக்கும்? அவர்கள் மருத்துவர்களான பிறகு பெண்களை எப்படி அணுகியிருப்பார்கள்?

அறிவியலின் தொடக்க காலத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்கலாம், இப்போது எல்லாம் மாறிவிட்டிருக்கும் என்று நினைக்க வேண்டாம். இன்றளவும் மருத்துவமனைகளிலும் ஆய்வுக்கூடங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் ஆண்களே பெருமளவில் நிறைந்திருக்கிறார்கள். ஆய்வுகள் அதிகம் மேற்கொள்பவர்கள் ஆண்கள். அறிவியலுக்கான நோபல் பரிசுகள் அதிகம் பெற்றவர்கள் ஆண்கள் (866 ஆண்கள், 53 பெண்கள்). முடிவெடுக்கும் உயர் நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்கள் ஆண்கள்.

பல்துறை ஆய்வுகளுக்கு அதிகம் உட்படுத்தப் பட்டவை ஆண் உடல்கள். விலங்குகளில் அதிகம் பரிசோதிக்கப்பட்டவை, ஆய்வு செய்யப்பட்டவை ஆண் விலங்குகள். அவ்வளவு தூரம்கூடப் போக வேண்டாம், நோய்களை ஆராய்வதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட அணுக்களில்கூட ஆண் அணுக்களே மருத்துவர்களின் கவனத்தை இதுவரை அதிகம் பெற்றிருக்கின்றன. பெண் அணுக்கள் முக்கியமற்றவை. நோய்களிலும் பாரபட்சம். பெண் நோய்களைவிட ஆண் நோய்கள் தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பெண் ஆரோக்கியத்தைவிட ஆண் ஆரோக்கியத்துக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்
பெண்

அறிவியல் உலகில் பெண்களைவிட ஆண்கள் அதிகமிருப்பதால் பெண் உடலைவிட ஆண் உடலைப் பற்றி மருத்துவர்கள் அதிகம் தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஒரே விதிவிலக்கு, இனப்பெருக்க உறுப்புகள். ஓர் ஆணைப் பெண்ணிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் ஒரே அம்சம் அவளுடைய இனப்பெருக்க உறுப்புதான் என்பதால், அதற்கு மட்டும் கவனம் கொடுத்தால் போதும்; மற்ற உறுப்புகளும் அவை செயல்படும் விதங்களும் ஆண்களிடமிருந்து எந்த வகையிலும் மாறுபட்டிருக்கப்போவதில்லை என்பதே மருத்துவ உலகம் வந்தடைந்த ‘அறிவியல்பூர்வமான’ முடிவு.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் சுரப்பிகளை உற்பத்தி செய்யும் அகச்சுரப்பித் தொகுதி (எண்டோக்ரைன் சிஸ்டம்) குறித்து மருத்துவர்கள் முதல்முறையாகத் தெரிந்து கொண்டனர். பெண் உடல் தனித்துவமான சுரப்பிகளை உற்பத்தி செய்கிறது என்பதை அறிய நேர்ந்தபோது இத்துறைக்குத் தனி கவனம் கிடைத்தது. ஆனால், அங்கும் ஆய்வுக்கு முன்பே ஓர் அவசர முடிவை வந்தடைந்துவிட்டார்கள். பெண்கள் எதிர்கொள்ளும் உடல், மனப் பிரச்னைகளுக்கு ‘பெண் சுரப்பி'களே காரணமாம்!

இதையொட்டி ஒரு பிரிவினர் துணிச்சலான புதிய வாதமொன்றையும் முன்வைத்தார்கள். `மாதவிடாய் சுழற்சியைப் பரிசோதனை செய்தோம். ஒரே நேரத்தில் பலவிதமான சுரப்பிகளைப் பெண்ணுடல் உற்பத்தி செய்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில்கொண்டு ஆராய்வதற்குள் தலை சுற்றுகிறது. பெண்ணுடல் சிக்கலானதாக, அணுகமுடியாததாக இருக்கிறது.பெண்ணுடலில் ஒன்றுமே இல்லை' என்னும் அலட்சியத்தில் தொடங்கி, `அது புரிதலுக்கு அப்பாற்பட்டது' என்னும் மிரட்சிக்கு இப்படியாக வந்து சேர்ந்தது மருத்துவ உலகம்.

மருத்துவ உலகின் அலட்சியம், மிரட்சி இரண்டுமே இறுதியில் பெண்களைத்தான் பாதித்தன. அவர்களைத் தாக்கிய பல நோய்கள் பரிசோதிக்கப்படாமலேயே போய்விட்டன அல்லது தவறாக அனுமானிக்கப்பட்டன. பெரும்பாலும் குறைவான சிகிச்சையே அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அல்லது தவறான சிகிச்சை. இரண்டுமே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தியது. `மன்னிக்கவும், உங்கள் பிரச்னைக்குத் தீர்வில்லை' என்று சொல்லி பல பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தப் ‘பிரச்னை'களுள் மார்பகப் புற்றுநோயும் ஒன்று.

`பெண் உடலும் ஆண் உடலும் சமம் என்னும் கருத்து மருத்துவ வரலாற்றில் வெளிப்பட்டு நான் பார்த்ததில்லை' என்கிறார் கேட் யங். `ஆணுடல் உயர்ந்தது, பெண்ணுடல் தாழ்ந்தது. ஆண் நோய் உயர்ந்தது, பெண் நோய் தாழ்ந்தது. பாலின சமத்துவத்தை மருத்துவம் அங்கீகரிக்க வேண்டும்' என்று 1980-களில் அமெரிக்காவில் பெண்கள் தனி அமைப்பொன்றை நிறுவிப் போராட வேண்டியிருந்தது. ‘பெண்களின் உடல்நலப் பிரச்னைகள் போதுமான அளவுக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இது அவர்களுக்கான சிகிச்சையின் தரத்தை பாதித்துள்ளது’ என்று அமெரிக்க அரசின் சுகாதார மையமே ஒப்புக்கொள்ள நேரிட்டது.

அமெரிக்கச் சந்தையில் நீண்டகாலமாகப் புழங்கிக்கொண்டிருந்த 20 மருந்துகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்று கண்டறியப்பட்டு, 1997-ம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகளில் தடை செய்யப்பட்டன. அவற்றுள் எட்டு மருந்துகள் பெண்களுக்கானவை. மோசமான பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்தும் மருந்து களும் இவையே.

ஒரு மருத்துவர் ஆண் நோயாளியைப்போல் பெண் நோயாளியை நடத்துவதில்லை. பிரச்னைகளைக் கேட்டறிவதிலும் சரி, நோய்களை ஆராய்வதிலும் சரி, சிகிச்சைகள் பரிந்துரைப்பதிலும் சரி... இருவருக்கும் ஒரே மாதிரியான கவனத்தை அவர் செலுத்துவதில்லை. மருத்துவமனைக்குச் செல்லும் பெரும்பான்மை பெண்களின் வாக்குமூலம் கிட்டத்தட்ட இப்படித்தான் அமைந்திருந்தது. ‘எனக்கு என்னவெல்லாம் நேர்கிறது என்பதை விரிவாக என் மருத்துவ ரிடம் விவரித்தேன். ஆனால், அவர் பொறுமை யாகக் கேட்கவில்லை. நான் சொல்வதை அவர் உள்வாங்கிக்கொண்டது போலவும் தெரியவில்லை. அவரால் எப்படி எனக்குச் சரியாக சிகிச்சை அளிக்கமுடியும்? இதேபோல அவர் ஓர் ஆணிடம் நடந்துகொள்வாரா?’

மனநலம் சார்ந்த சிக்கல்களின் நிலை இன்னமும் மோசம். பெண் மனம் என்றொன்று தனியாக இயங்குகிறதா அல்லது அதுவும் ஆண் மனம் போன்றதுதானா என்னும் கேள்வியை வைத்துக்கொண்டு உருட்டிக்கொண்டிருந்தது உளவியல். உடல் நலப் பிரச்னைகளுக்குக் கிடைத்த கவனத்தில் ஒரு சிறு பகுதிகூட மனநலப் பிரச்னைகளுக்குக் கிடைக்கவில்லை. ‘அது அப்படித்தான் இருக்கும். பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்றோ ‘நீங்கள் விவரிப்பது இந்த வயதில் எல்லாப் பெண்களுக்கும் வரக்கூடியதுதான்’ என்றோ ‘இது புதுமையானதாக இருக்கிறது. மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்பட்டது போல் தெரியவில்லை’ என்றோ ‘உண்மையில் அப்படி உங்கள் உடலில் நடக்கிறதா அல்லது அப்படி நடப்பதாக நீங்கள் கற்பனை செய்துகொள்கிறீர்களா?’ என்றோ சாக்கு சொல்லி பெண் நோயாளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெவ்வேறு காரணங்களுக்காக நீடித்த வலியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 70 சதவிகிதம். சந்தையில் கிடைக்கும் வலி நிவாரண மருந்துகளில் 70 சதவிகிதம் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டவை. அதாவது, மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்போது ஆண்களே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கும் வலிகளே ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தீர்வுகளும் அவர்களுக்கே கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட பிறகு ஆண்களின் மாத்திரைகள் அனைவருக்குமான பொது மாத்திரைகளாக அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. ஏனைய பல மருந்துகளின் நிலையும் இதுவே.

இன்று நிலைமை நிச்சயம் மாறியிருக்கிறது என்றாலும், பாலின சமத்துவம் என்னும் இலக்கை அறிவியல் உலகம் நெருங்கக்கூட இல்லை. அப்படியோர் இலக்கை அது வகுத்துக்கொண்டுள்ளதா என்பதுகூடத் தெரியவில்லை. இல்லை என்றால் அதை அழுத்தமாக வலியுறுத்தவேண்டியது அவசியம் என்கிறார் காப்ரியல் ஜாக்ஸன்.

உயிரியல் என்பது ஆண் உயிரியலாக மட்டும் இருக்கும்வரை, ஆய்வுக்கூடம் என்பது ஆண் ஆய்வுக்கூடமாக மட்டுமே நீடிக்கும்வரை, மருந்து என்பது ஆண் மருந்தாகவே இருக்கும்வரை பெண் வலி குறையப்போவதில்லை. பெண் வலி நீங்கும் வரை அறிவியல் உலகைப் பீடித்துள்ள நோய் மறையப்போவதும் இல்லை. அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் அறிவியல் உயிர் பிழைக்கவேண்டுமானால் புது ரத்தம் செலுத்தியாக வேண்டும். பெண் ரத்தம்.