திமுக துணைப் பொதுச்செயலாளரான ஆ.ராசா, நீலகிரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி-யாகவும் உள்ளார். இந்நிலையில் ஆ.ராசாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்துகளை முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கோவையில் 45 ஏக்கர் பரப்பளவிலான ரூ.55 கோடி மதிப்பு சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இவை ஆ.ராசா 2004 – 2007 காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, அவரின் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்துகளாகும். சுற்றுச்சூழல் அனுமதிக்காக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ஆ.ராசா வாங்கிய லஞ்ச தொகையில் இந்த நிலம் வாங்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம், குருகிராமை சேர்ந்த அந்த நிறுவனம் நாட்டிலேயே மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம்.
அதே 2007-ம் ஆண்டு ராசா தன் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் பெயர்களில் நிறுவனங்களை தொடங்கி இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. கோவையில் நிலம் வாங்கியதைத் தவிர அந்த நிறுவனங்கள் வேறு எந்தத் தொழில் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

இதன் மூலம் சட்டவிரோதமாக பெற்ற பணத்தில் அந்த நிலம் வாங்கியது உறுதியாகிறது. அதன் காரணமாக சொத்துகளை முடக்கியுள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.