
- முகில்
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்கத்தாவிலும், இந்தியாவின் வேறு பல பகுதிகளிலும் நிறைந்திருந்த பிரிட்டிஷ் ஆண்களுக்கு இருந்த மிகப்பெரிய பிரச்னை என்ன தெரியுமா?
இணை தேடுவது.
1800 -ம் ஆண்டு சமயத்திலே, கல்கத்தாவிலே சுமார் 4,000 சொச்ச பிரிட்டிஷ் ஆண்கள் வாழ்ந்தார்கள். அப்போது அங்கே வாசம் செய்த ஐரோப்பியப் பெண்களின் எண்ணிக்கை வெறும் 250. பதினெட்டாம் நூற்றாண்டில் கும்பெனி ஊழியர்கள், மனைவியையோ, காதலியையோ இந்தியாவுக்கு உடன் அழைத்து வர நிர்வாகம் தடை போட்டிருந்தது. அதை வெட்டிச் செலவு என்றே எண்ணியது. தவிர, வேலையில் கவனம் செலுத்தாமல் காதலித்துக் கொண்டிருந்தால், கும்பெனியின் வளர்ச்சி பாதிக்கும் என்றும் கடுமை காட்டியது.
அப்போது இந்தியாவில் வாழ்ந்த மைனாரிட்டி வெள்ளைக்காரப் பெண்களுக்கு ஏகப்பட்ட போட்டி. பழமொழியாகச் சொல்வதென்றால், ‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?’ என்றே வெள்ளை ஆண் கொக்குகள் காத்திருந்தன. மிஸ்டர் எக்ஸ் என்ற பிரிட்டிஷ் அதிகாரி திடீரென நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் மண்டையைப் போட்டார். மிஸ்டர் எக்ஸின் இறுதிச் சடங்கில் ஏகப்பட்ட பேர் கலந்து கொண்டார்கள். தேவாலயத்தில் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு, மிஸ்டர் எக்ஸின் பூத உடல் கல்லறைத் தோட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. மிஸஸ் எக்ஸ் கனத்த மனத்துடன் தன் கணவருக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு, கல்லறைத் தோட்டத்தின் வாசலுக்கு வந்தார். அப்போது அங்கே நாலைந்து பேர் கையில் பூங்கொத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். ‘வில் யூ மேரி மீ?’ என்று முட்டி போட்டு கூச்ச நாச்சமின்றி விண்ணப்பம் போட்டனர். பதினெட்டாம் நூற்றாண்டில் கல்கத்தாவில் இந்தக் காட்சியானது சர்ச் வாசல்களிலும், கல்லறைத் தோட்டங்களிலும் வெகு சாதாரணமாக நடந்தது. சில பெண்களின் கணவராகப்பட்டவருக்கு இழுத்துக் கொண்டிருக்கும்போதே ‘அடுத்த கணவர்’ நிச்சயிக்கப்படும் நிகழ்வுகளும் நடந்தன. அந்த அளவுக்குப் பெண் பஞ்சம்.

இந்தியாவில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒரு பிரிட்டிஷ் ஆண், தான் திருமணம் செய்துகொள்ள ஐரோப்பியக் கண்டத்திலிருந்து ஒரு பெண்ணை தனது சொந்தச் செலவில் கப்பலில் அழைத்து வர வேண்டுமென்றால், அதற்கு ஐயாயிரத்து சொச்ச ரூபாய் (இன்றைய மதிப்பில் அது சில லட்சங்களுக்குச் சமம்) தேவைப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியிலே பணியாற்றிய கேப்டன் வில்லியம்ஸ் என்பவர் 1810-ஆம் ஆண்டு வெளியிட்ட The General East India Guide என்ற நூலிலே இந்தச் சோகமான தகவலைச் சொல்லியிருக்கிறார்.
ராணுவத்தில் வேலை பார்க்கும் பிரிட்டிஷ் வீரர்கள், 26 வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. மீறினால் திருமணத்துக்கான உதவித்தொகை கிடையாது என்று விதியும் போடப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் வசதியான வெள்ளைக்கார உயர் அதிகாரிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்தியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு சொப்பன வாழ்வில் மகிழ்ந்தார்கள். சிலர், மன்னர்கள் பாணியில் உள்ளூர்ப் பெண்கள் நிரம்பிய ஓர் அந்தப்புரத்தையே அமைத்து ஏகாந்தமாகக் கிடந்தார்கள். அதற்கெல்லாம் வசதியில்லாத கடைநிலை வெள்ளை மன்மதன்கள், உள்ளூரில் சிக்கிய இந்திய ரதிகளிடம் காதல் வளர்த்துக் காமம் தணித்தனர். அதற்கு மாதம் ஒன்றுக்கு நாற்பது சொச்ச ரூபாயே செலவானது என்று கணக்கு காட்டியிருக்கிறார் கேப்டன் வில்லியம்ஸ்.
இந்த இனக்கலப்பு வருங்காலத்தில் மாபெரும் பிரச்னையாகிவிடுமோ என்று கும்பெனியாருக்குள் அச்சம் சூழ்ந்தது. கலத்தல் சமாசாரத்தில் போகப்போக வெள்ளைக் காளைகளின் விபரீதங்களும் அதிகரித்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனி இந்திய மண்ணில் வலுவும் வளமும் பெறத் தொடங்கியிருந்தது. ஆகவே, பிரிட்டிஷ் பெண்களை இந்திய மண்ணுக்கு அழைத்து வரப் போட்டிருந்த தடையை நீக்கியது. காலனி வளர வேண்டுமென்றால், பிரிட்டிஷார் இந்தியாவிலே குடும்பமும் குட்டியுமாகப் பல்கிப் பெருக வேண்டும் என்று மாற்றி யோசித்தது.
கும்பெனிப் பணியாளர்களின் ‘இல்வாழ்க்கை’ சிறக்க, பிரிட்டனிலிருந்தே பெண்டிரைக் கப்பல்களில் அழைத்து வரும் நோக்கில் அங்கே பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. ‘ஹாய் யங் லேடீஸ், வளமையும் மேன்மையும் மிகுந்த சொகுசான இந்திய வாழ்க்கைக்குத் தயாரா?’ என்பதாக விளம்பர வாசகங்கள் தூண்டில் போட்டன. ஆனாலும் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் இளம் பெண்கள் முன்வரவில்லை. ‘இந்தியா என்பது பாம்புகளும் அழுக்கும் நோய்களும் நிறைந்த வளமற்ற நாடு’ என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே கும்பெனி நிர்வாகத்தினர், ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று பருவ வயதுப் பெண்களைப் பிடித்து வந்து கப்பல்களில் ஏற்றினர். நாளடைவில் கிழக்கிந்திய கம்பெனியின் அசுர வளர்ச்சியினால், வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் இளம்பெண்கள் பெரு விருப்பத்துடன் இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்களில் இடம் பிடித்தனர். அந்த மணமகள் கப்பல்கள், Fishing Fleet என்ற பதத்தில் அழைக்கப்பட்டன. கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் பம்பாய் துறைமுகங்களுக்கு அந்தக் கப்பல்கள் வந்து சேர்ந்தபோது, காய்ந்து கிடந்த வெள்ளைக்கார மாப்பிள்ளைகளின் முகங்கள் மேலும் சிவந்தன. ‘என்னுடன் வருகிறீர்களா? நான் மெட்ராஸைச் சுற்றிக் காண்பிக்கிறேன்’, ‘என்னிடம் குதிரைகள் பூட்டிய சாரட் இருக்கிறது. போவோமா ஊர்கோலம்?’, ‘இன்று இரவு பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறேன்’ என்று கன்னிகைகள் கரையிறங்கியதுமே தூண்டில் போட்டார்கள். அடுத்த சில நாள்களுக்கு டேட்டிங். பின் அது திருமணத்திலும் முடியலாம். ஜோடி மாறியும் போகலாம். சிங்கிள் ஸ்டேட்டஸ் மாறாமல் அடுத்த பெண்பால் கப்பல் வரும்வரை கன்னத்தில் கைவைத்துக் காத்திருக்கும் நிலையும் தொடரலாம்.

அந்தச் சமயத்தில் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய பிரெஞ்சுக்காரரான கேப்டன் எட்வர்ட் வாரென் இப்படி ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். ‘இந்தப் பெண்கள் கப்பலில் ஏறுவதற்கு முன்பாக அவர்களது சொந்தக்காரப் பெண்கள் ஒரு முக்கியமான அறிவுரையைச் சொல்லி அனுப்புகிறார்கள். அடியேய் இவளே! பார்ட்டிகளுக்கு நன்றாக உடையணிந்து கொண்டு போ. ஆனால், எவன் அழைத்தாலும் ஆள் நன்றாக இருக்கிறானே என்று இளித்துக்கொண்டு ஆடப் போய்விடாதே. நீ தேர்ந்தெடுக்கும் ஆள் முதல் நிலை அதிகாரியாகவோ, ராணுவ அதிகாரியாகவோ பணியாற்ற வேண்டும். அவனிடம் ஒரு பல்லக்கோ, சாரட் வண்டியோ இருக்க வேண்டும். அவனது வீட்டில் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து வேலைகளைச் செய்ய நாலைந்து வேலைக்காரர்கள் வேண்டும். வெள்ளியினாலான பெரிய தேநீர் ஜாடி, கோப்பைகள் உள்ளிட்ட பாத்திர பண்டங்கள் நிச்சயம் இருக்க வேண்டும். புரிந்ததா?’
கேப்டன் எட்வர்ட் பதிவு செய்யாத, ஆனால், எல்லா ஐரோப்பியப் பெண்களிடமும் தவறாமல் ஓதப்பட்ட ஒரு விஷயம், ‘நீ ஆளும் பிரிட்டனைச் சேர்ந்தவள். இந்தியர்களிடம் தேவையின்றிப் பழகாதே. அவர்கள் நம் அடிமைகள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே!’
கப்பல் பயணத்திலேயே ‘ஜோடி’ சேர்ந்த கதைகளும் நடந்தன. திருமணங்கள் நடுக்கடலிலேயே நிச்சயிக்கப்பட்டன. அதில் கரை சேராத காதல்களும் உண்டு. கரை சேர்ந்த பின் தடம்புரண்ட காதல்களும் உண்டு. அதில் ஒரு முக்கியமான காதல் கதை வாரன் ஹேஸ்டிங்ஸ் உடையது. கிழக்கிந்திய கம்பெனியில் முதல் தலைமை ஆளுநராகப் பதவி வகித்தவர். 1769-ம் ஆண்டு Duke of Grafton என்ற கப்பலில் மெட்ராஸ் நோக்கி வந்துகொண்டிருந்தார். கடல் பயணத்தால் உடல் பாதித்தது. அப்போது அவருக்கு மருத்துவ உதவி செய்ய பரோனெஸ் இம்ஹாஃப் என்ற ஜெர்மானியப் பெண் முன் வந்தாள். மருந்துகள் எல்லாம் கொடுத்து அக்கறையுடன் உடன் இருந்து கவனித்துக் கொண்டாள். ஹேஸ்டிங்கின் உடலில் நோய் குறைந்தது, இதயம் காதலால் நிறைந்தது. 22 வயது பரோனெஸுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தது. குழந்தையும் உண்டு. கணவர் இம்ஹாஃப், மெட்ராஸில் ராணுவத்தில் ஒரு வேலையில் சேருவதற்காக அவளுடன் கப்பல் ஏறியிருந்தார். கரையிறங்கும்போது அவர் கிட்டத்தட்ட ‘சிங்கிள்’ ஆக்கப்பட்டிருந்தார்.
ஹேஸ்டிங், மனைவியை இழந்தவர். பரோனெஸை தன் புது மனைவியாக்க முடிவு செய்திருந்தார். அதற்காகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இம்ஹாஃபை மிரட்டவில்லை. கூப்பிட்டு உட்கார வைத்துப் பேசினார். ‘மிஸ்டர் இம்ஹாஃப், பரோனெஸை நான் எவ்வளவு காதலிக்கிறேன் என்று வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவள் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆகவே, எனது வருங்காலப் பெண்டாட்டிக்கு தயவுசெய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள். அதுவரை அவளோடு நீங்கள் சேர்ந்து வாழ்வதில் எனக்குப் பிரச்னையில்லை.’
ஜென்டில்மேன்ஸ் ஒப்பந்தம். இங்கே பரோனெஸின் மனநிலையையும் குறிப்பிட்டாக வேண்டுமல்லவா. அவளுக்கும் அதில் பரிபூரண சம்மதம். அதிகாரமும் செல்வமும், அதீதக் காதலும் நிறைந்த ஹேஸ்டிங்கைப் புதிய மணவாளனாக ஏற்றுக்கொள்ளும் நாளுக்காகக் காத்திருந்தாள். ஆம், அந்த நாள்களில் காதல் ரசம் சொட்டச் சொட்ட அவளுக்குக் கடிதங்கள் எழுதி மகிழ்ந்திருந்தார் ஹேஸ்டிங்ஸ். அந்தக் காதல் கடிதங்கள் எல்லாம் இலக்கியத் தரம் வாய்ந்தவை என்று வரலாற்றாசிரியர்கள் பலரும் புல்லாங்குழல் வாசிக்கிறார்கள். ஆனால், ஜெர்மனியிலே அந்த விவாகரத்துக்கான தீர்ப்பு வாசிக்கத்தான் 1777-ம் ஆண்டு ஆயிற்று. சுமார் எட்டு வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்த ஹேஸ்டிங்ஸ், பரோனெஸின் கரம் பற்றி மோதிரம் அணிவித்தார். அவளது குழந்தையையும் தனதாக ஏற்றுக்கொண்டார். புதிய துரையம்மாவாக பரோனெஸ் ஹேஸ்டிங்ஸின் வாழ்க்கை இந்தியாவில் சுபிட்சமாகத் தொடர்ந்தது.
மத்தியத் தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும்விதமாக, 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட சூயஸ் கால்வாய் 1869-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை பிரிட்டனிலிருந்து இந்தியா நோக்கிய கப்பல் பயணம் என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி வருவதாக இருந்தது. அதற்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆயின. சூயஸ் கால்வாய் ஏற்படுத்திய வழி, அந்தப் பயண நாள்களை ஒரு மாதமாகச் சுருக்கியது. அதனால் பிரிட்டிஷ் பெண்களின் இந்தியப் படையெடுப்பு அதிகரித்தது. புள்ளி விவரமாகச் சொல்ல வேண்டுமென்றால், 1870-களில் பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் மட்டும் சுமார் 5,000 பிரிட்டிஷ் பெண்கள் இருந்தனர். 1901-ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா முழுக்க, தோராயமாக 42,000 பிரிட்டிஷ் பெண்கள் வரை வசதியாக வாழ்ந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்குச் செல்லும் ஐரோப்பியப் பெண்களுக்கு வழிகாட்டும்படியாக, இந்திய வாழ்க்கைக்கு உதவும் விதத்தில் பல புத்தகங்கள் வெளியாயின. அதில் முதன்மையான புத்தகம், A Few Words of Advice on Travelling and its Requirements Addressed to Ladies. இந்தப் புத்தகத்தில் இந்தியாவுக்குச் செல்லும் ஐரோப்பியப் பெண்கள் என்னென்ன மாதிரியான உடைகளை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்று ஓர் அத்தியாயம் விரிகிறது.
‘…கப்பல் பயணத்துக்குப் பழைய உள்ளாடைகளையே பயன்படுத்துவது நல்லது. கரையிறங்கியதும் தூக்கிப் போட்டு விடலாம். முக்கியமான விஷயம், கப்பலில் இருந்து இந்தியாவில் இறங்கும்போது, உடை நளினமானதாக, ஆண்களைக் கவரக்கூடியதாக இருக்க வேண்டியது மிக அவசியம். தைத்த உடைகளை எடுத்துச் செல்லாமல், உடைகளுக்கான துணிகளை அதிகம் எடுத்துச் செல்வது நல்லது. இந்தியாவில் தையல்காரர்களுக்குப் புதிய வடிவத்தில் உடைகள் தைக்கத் தெரியாது. ஆனால், இதேபோல வேண்டும் என்று நாம் மாதிரி காண்பித்தோம் என்றால், அச்சு அசலாக அதேபோல உடையைத் தைத்துத் தந்துவிடுவார்கள். கவுன்களின் இருபுறமும் பாக்கெட் தைத்துக்கொண்டால் அதனுள் கைக்குட்டை, சீப்பு, அழகு சாதனப் பொருள்கள் முதலிய பலவற்றை வைத்துக்கொள்ளலாம். வெள்ளை நிற உடைகள் இந்தியாவின் கடும் வெப்பத்துக்கு ஏற்றவை. கறுப்பு நிற பட்டுத்துணியாலான உடை ஒன்றை எடுத்துச் செல்வது இரவு விருந்துகளில் அணிந்துகொள்ள உதவும். லேஸ், ரிப்பன், பட்டன் போன்ற அலங்காரப் பொருள்களை வாங்கி காற்றுப்புகாத டின்களில் எடுத்துச் செல்லவும். அவை அங்கே கிடைக்காது. இந்தியாவில் டோபி என்பவன் கடினமான கைகளுடன் படைக்கப்பட்டவன். துணிகளின் அலங்காரங்களையும் பொத்தான்களையும் பிய்ப்பதில் குரூர சந்தோஷமடைபவன். முதல் வெளுப்பிலேயே உடையின் அழகு அனைத்தையும் காலி செய்துவிடுவான். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.’
ஆம், ஒண்ட வந்த ஐரோப்பியர் பதிவுகளில், இந்தியர்கள் குறித்த விஷயங்களில் விஷம் இயல்பாகவே தோய்க்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில் அறியாமை நிறைந்த இந்திய வேலைக்காரர்களோ தங்கள் ஐரோப்பிய எஜமானர்களை ‘சாஹிப்’ என்றும், எஜமானிகளை ‘மேம்சாஹிப்’ என்றும் விசுவாசமாகவே அழைத்தனர். Sahib என்ற அரபுச்சொல்லின் பொருள் எஜமானர். இது Sir என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரானது. Sahib அல்லது Saab என்ற ஆண்பால் சொற்கள், பெண்பாலில் Memsahib அல்லது Memsaab என்று அழைக்கப்பட்டன. அதாவது Madam Sahib என்பதே பேச்சு வழக்குச் சொல்லாக Memsahib என்று உருமாறியது. பொதுவாக பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனைவிகளும் காதலிகளும் இந்த வார்த்தைகள் கொண்டே இந்தியர்களால் மரியாதையாக விளிக்கப்பட்டனர். இதன் தமிழ்ச்சொல், துரையம்மா.
மேம்சாஹிப் என்ற மரியாதைக்குரிய சொல்லில் பிரிட்டிஷ் பெண்களுக்கு ஒரு கிளுகிளுப்பும் மிகுமிதப்பும் கிடைக்கவே செய்தது. காரணம், இங்கே வெள்ளைக்கார அதிகாரிகளின், கிழக்கிந்திய கம்பெனிப் பணியாளர்களின் மனைவிகளாக வந்து சேர்ந்த பெரும்பாலான பிரிட்டிஷ் பெண்கள், தங்கள் தேசத்தில் நடுத்தர அல்லது அதற்கும் கீழான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தவர்களே. சிறிய வீடுகளில் வசித்தவர்கள். அங்கே சமையல், வீடு சுத்தம் செய்வது, பாத்திரம் துலக்குவது, குழந்தைகளைக் கவனிப்பது, கணவனுக்குப் பணிவிடைகள் செய்வது என்று எல்லாமும் அவர்களேதான் செய்தாக வேண்டும். கையில் பெரிய அளவில் பணப்புழக்கம் எல்லாம் கிடையாது. டாம்பீகமான விருந்துகளையும் மரியாதையையும் அவர்கள் அனுபவித்ததே கிடையாது.

ஆனால், இந்தியாவுக்கு வந்திறங்கியபின் அந்தப் பெண்களின் வாழ்க்கை முந்நூற்று அறுபது டிகிரி மாறிப்போனது. வாய்பிளந்து பார்க்கும் அடிமை மனிதர்கள். ஏற்றிக்கொண்டு செல்ல குதிரை வண்டி. அல்லது பல்லக்கில் தூக்கிக் கொண்டு செல்ல ஐந்தாறு சுமை கூலிகள். அடேயப்பா! எவ்வளவு பெரிய மாளிகை. சுற்றிலும் தோட்டம் வேறு. ‘சொல்லுங்கள் மேம்சாஹிப்!’ என்று எந்நேரமும் கட்டளைக்காகக் காத்திருக்கும் வேலைக்காரர்கள். ஒரு வேலையும் செய்ய வேண்டாம். எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். குழந்தை பெற்றால் ‘ஆயாக்கள்’ வளர்த்துக்கொள்வார்கள். அவ்வப்போது கணவனது பிரத்யேகத் தேவைகளைக் கவனித்துக்கொண்டால் மட்டும் போதும். மாலை நேரத்தில் விருந்திலோ, பிற ஐரோப்பியப் பெண்களின் வீடுகளிலோ சந்தித்து வெட்டிக்கதை பேசி, கொட்டமடித்துவிட்டு வரலாம். அடடா, என்ன ஒரு சொகுசான வாழ்க்கை!
1839-ம் ஆண்டில் பம்பாய் மாகாணத்தில் சுகமாக வாழ்ந்த எம்மா வால்டர் என்ற துரையம்மா, தான் வாழ்ந்த மாளிகையில் பத்தொன்பது வேலையாள்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் சமையல்காரர்கள், வீட்டைச் சுத்தம் செய்வோர், தோட்டக்காரர், தண்ணீர் சுமந்து வரும் Bhisties, இரவு தீவட்டி அல்லது மெழுகுவத்தி ஏற்றும் Masalchies ஆகியோர் போக பெரும்பாலானோர் பங்காவாலாக்கள் (Punkhawalas). அந்தக் காலத்தில் மின்விசிறி புழக்கத்தில் இல்லை அல்லவா. வெள்ளைத்தோல் வெக்கை தாங்காது. ஆகவே, மாளிகைகளின் உட்பக்கக் கூரைகளில் நீண்ட செவ்வக வடிவத்தில் துணியினால் ஆன மிகப்பெரிய விசிறிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை ‘பங்கா’ என்றழைக்கப்பட்டன. அறைக்கு வெளியே வாசற்படி அருகில் அல்லது விராண்டாவில் பங்காவாலா(க்கள்) அமர்ந்து அந்த விசிறியுடன் இணைக்கப்பட்டிருக்கும் கயிற்றை இழுத்து விசிறியை ஆட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பகலில் மட்டுமல்ல, இரவில் துரையும் துரையம்மா குடும்பமும் சொகுசாகத் துயில்வதற்கு பங்காவாலாக்கள் நொடிப்பொழுதும் கண்ணயரக் கூடாது.
இப்படியாக நம் வளத்தைச் சுரண்டிக்கொண்டு வசதியாகவும், நம் முன்னோர்களின் உழைப்பை உறிஞ்சிக்கொண்டு பவுசாகவும் மேம்சாஹிப்கள் மேட்டுக்குடி வாழ்க்கை வாழ்ந்தனர். மேம்சாஹிப்புகளுக்கு வேலைக்காரர்களின் பழக்க வழக்கங்களும், மத நம்பிக்கைகளும், சாதிசார்ந்த கொள்கைகளும் பெரும் குழப்பத்தையே கொடுத்தன. இஸ்லாமிய வேலைக்காரர்கள், பன்றிக் கறியைத் தொட மாட்டோம், மது ஊற்றிக் கொடுக்க மாட்டோம் என்று மறுத்தார்கள். இந்து வேலைக்காரர்களோ, குறிப்பிட்ட சில வேலைகளை எங்கள் சாதிக்காரர்கள் செய்ய மாட்டோம் என்று மறுத்தார்கள். அதனால், குறிப்பிட்ட சில வேலைகளை மட்டும் செய்வதற்கென்றே புதிய வேலைக்காரர்களை நியமித்துக்கொண்டார்கள். இப்படியாகச் சில மாளிகைகளில் வேலைக்காரர்களின் எண்ணிக்கை இருபதையும் தாண்டியது. இப்படி தங்களது வசதிக்காக வேலைக்காரர்களைப் பெருக்கிக்கொண்ட துரையம்மாக்கள் பகுமானமாகப் பதிவு செய்திருக்கும் கருத்து என்ன தெரியுமா? ‘இந்திய வேலைக்காரர்கள் மிகவும் சோம்பேறிகள். பாதி நேரம் தூங்கியே கழிக்கிறார்கள்.’
இருபதாம் நூற்றாண்டில் மின்விசிறி, தண்ணீர் வடிகட்டி, மின்சார விளக்குகள், கார்கள் போன்றவை புழக்கத்தில் வந்தன. மேம்சாஹிப்புகள் வேலைக்காரர்களின் எண்ணிக்கையைப் பத்துக்கும் கீழ் குறைத்துக்கொண்டார்கள். இங்கே ‘ஆயா’க்கள் குறித்து நிலவிய அரசியலையும் பதிவு செய்தே ஆக வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் இங்கே குடிவந்த துரையம்மாக்கள், தங்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள ‘ஆயாக்களை’ பயந்தபடியே நியமித்தனர். காரணம்? இந்துக்களும் முஸ்லிம்களும் மந்திரம், மாந்தரீகம் என்று பழக்கம் கொண்டவர்கள். குழந்தைகளை ஏதாவது செய்துவிடுவார்களோ, மதம் மாற்றிவிடுவார்களோ என்று பயந்தார்கள். ‘நான் எனது குழந்தையை பெரும்பாலும் என்னுடனேயே வைத்துக் கொண்டேன்’ என்று ஜூலியா தாமஸ் என்ற துரையம்மா தனது அச்சத்தை 1839-ம் ஆண்டு எழுதிய ஒரு கடிதத்தில் பதிவு செய்துள்ளார்.

சில துரையம்மாக்கள், கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆயாக்களைத் தேடிப்பிடித்து வேலைக்கு நியமித்தனர். அதிலும் அவர்களுக்கு ஒரு சங்கடம் இருந்தது. நம் மண்ணின் கிறிஸ்துவர்கள், போர்ச்சுக்கீசியர்களின் வழியில் மதம் மாறிய ரோமன் கத்தோலிக்கர்களாக இருந்தனர். இங்கிலாந்து அல்லது ஸ்காட்லாந்து திருச்சபையைச் சேர்ந்த பிரிட்டிஷாருக்கு, அந்த ஆயாக்களின் பழக்க வழக்கங்கள் ஒவ்வாமையாக இருந்தன. 1809ஆம் ஆண்டில் மரியா கிரஹாம் என்ற துரையம்மா செய்திருக்கும் ஒரு பதிவு இது. ‘இந்த ரோமன் கத்தோலிக்க கறுப்புநிற அழுக்கு நிறைந்த வேலைக்காரர்கள் பண்பற்றவர்களாக, பாசாங்குத்தனம் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள்.’
சில மேம்சாகிப்புகள், தாங்கள் இங்கிலாந்துக்கோ ஸ்காட்லாந்துக்கோ திரும்பிச் செல்லும்போது குழந்தைகளுக்காக ஆயாக்களையும் உடன் அழைத்துச் சென்ற சம்பவங்களும் நிகழ்ந்தன. அந்தக் கப்பல் பயணங்களில் பெரும்பாலும் பயணிகளின் பெயர்ப் பட்டியலில் அந்த இந்தியப் பெண்களின் பெயர்களானது வெறுமனே ‘Ayah’ என்றே குறிப்பிடப்பட்டன. இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் சேவையைத் தொடர்ந்த ஆயாக்கள், அந்தக் குழந்தைகள் வளர்ந்த பிறகு கைவிடப்பட்ட கதைகளும் நிறையவே உண்டு. 1908-ம் ஆண்டு லண்டனின் கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையத்தில் வெறும் ஒரு பவுண்டு பணத்தைக் கையில் ஏந்தியபடி கைவிடப்பட்ட ஓர் ஆயா தவிப்புடன் நின்று கொண்டிருந்ததாக வரலாற்று ஆய்வாளர் சாஸ்தா அலி எழுதியிருக்கிறார். அந்த ஆயா, இந்தியா திரும்பினாரா என்று வரலாறு பதிவு செய்யவில்லை.
1850-களில் English Woman’s Domestic Journal மற்றும் Queen ஆகிய இரண்டு பத்திரிகைகள் வெளிவந்தன. சாமுவேல் ஆர்சர்ட் பீட்டோன் என்பவர் வெளியிட்ட இந்தப் பத்திரிகைகளில் இந்தியா முழுவதுமிருந்து ஏகப்பட்ட மேம்சாஹிப்புகள் (பெரும்பாலும் புனைபெயர்களில் அல்லது இனிஷியல் மட்டும் வைத்துக்கொண்டு) அனுபவக் கட்டுரைகள் எழுதினார்கள். அவர்கள் கலந்துகொண்ட விருந்துகள், ஆடிய விளையாட்டுகள், வேட்டையாடிய சம்பவங்கள், சுற்றிப் பார்த்த இடங்கள், உடை மற்றும் அலங்கார நாகரிகம், சமையல் போன்ற பல விஷயங்களுடன் அவர்களது வேலைக்காரர்கள் குறித்த அனுபவங்களும் எழுதப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் இந்தப் பத்திரிகைகள் 50,000 பிரதிகள் வரை விற்பனையாயின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு வந்து மேம்சாஹிப்பாக வெறுமனே சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பதில் சலிப்படைந்த பிரிட்டிஷ் பெண்கள், காலப்போக்கில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தனர். அவர்கள் பல்வேறு துறைகளில் நிபுணர்களாகவும் தொழில்முனைவோராகவும் மிளிர்ந்தனர் என்று தற்கால பிரிட்டிஷ் எழுத்தாளரான கேட்டி ஹிக்மேன் தனது She-Merchants, Buccaneers and Gentlewomen: British Women in India என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். செவிலியர்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள், தாவரவியலாளர்கள், தோட்டக்கலை நிபுணர்கள் என்று பல்வேறு விதங்களில் இங்கே பிரிட்டிஷ் பெண்கள் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக, இந்தியப் பெண்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கும் பணியிலும் பல மேம்சாஹிப்புகளின், கிறிஸ்துவ மிஷனரிகளின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்திருக்கிறது.

இங்கே இந்தியாவின் சமூக மாற்றத்துக்காக உழைத்திட்ட சில மேம்சாஹிப்களைப் பற்றியும் பேசியாக வேண்டும். மேரி ஆன் ஸ்கார்லிப், 1845-ம் ஆண்டில் பிரிட்டனில் பிறந்தவர். வில்லியம் ஸ்கார்லிப் என்ற பாரிஸ்டரைத் திருமணம் செய்துகொண்டு மெட்ராஸுக்கு வந்த பெண். சகல வசதிகளுடனும் இருந்த மாளிகையில் நிம்மதியான வாழ்க்கை வாய்த்தது. ஆனால், இங்கே சமூகத்தில் புரையோடிக் கிடந்த மூட நம்பிக்கைகளும் பிற்போக்குத்தனங்களும் மேரியை நிலைகுலையச் செய்தன.
‘அந்த இஸ்லாமியப் பெண்ணுக்கு வயது மிகவும் குறைவு. அவளுக்குப் பிரசவ வலி எடுக்கத் தொடங்கியது. அவள் கணவன் மத விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடித்தவர். பெண்கள் பிற ஆண்களைப் பார்க்கவே கூடாது என்பதில் மிகவும் கறாராக இருந்தவர். தன் மனைவியின் நிலைமை படுமோசமான சூழலில் வேறு வழியின்றி பிரிட்டிஷ் டாக்டர் ஒருவரை வீட்டுக்குள் அனுமதித்தார். அந்தப் பெண், ஓர் ஆண் டாக்டரைக் கண்டதும் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். ஓர் ஆண் டாக்டர் தன்னைப் பார்க்கவோ, தொடவோ, சிகிச்சை அளிக்கவோ கூடாது என்பதில் முரட்டுப் பிடிவாதத்துடன் இருந்தாள். பிரசவ வலி அதிகரித்துக்கொண்டே சென்றபோதும் அவள் மனம் மாறவில்லை. அவளது கதறல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. திறக்கப்படாத கதவுக்குப் பின் இரண்டு உயிர்கள் மரித்துப்போயின.’
இது மேரி ஸ்கார்லிப் தன் சுயசரிதையில் பதிவு செய்திருக்கும் சம்பவம். அன்றைய சமூகத்தில் இந்துப் பெண்களும், இஸ்லாமியப் பெண்களும் மேற்குலக மருத்துவத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஓர் ஆண் டாக்டர், தங்கள் உடலைத் தொடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். இதனால் பிரசவம் சார்ந்த மரணங்கள் பெருகிக் கொண்டே போயின. இதுபோன்ற பல சம்பவங்களைக் கடந்து வந்த மேரி ஸ்கார்லிப், இந்தியப் பெண்களுக்காகத் தான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் படிக்க ‘முதல் பெண்ணாக’ இணைந்தார். பின்பு லண்டனுக்குச் சென்று மருத்துவ மேற்படிப்பும் படித்து வந்தார். மெட்ராஸுக்கு மீண்டும் திரும்பி, மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். பல பெண்களின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவராகவும் சேவை புரிந்தார். பெண்களும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற விதையை ஆழமாக ஊன்றியதில் மேம்சாஹிப் மேரி ஸ்கார்லிப்புக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இதேபோல பெரிய பங்களிப்பைச் செய்த இன்னொரு பெண், டாக்டர் இடா ஸ்கட்டெர். வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை உருவாக்கியவர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றாலும், இருபதாம் நூற்றாண்டில் இவர் இங்கே செய்த மருத்துவ சேவைகள் தன்னிகரற்றவை.
சில துரையம்மாக்கள் இந்த மண்ணில் வாழ்ந்தது கொஞ்ச காலம் என்றாலும் தங்கள் பெயர் காலத்துக்கும் நிலைக்கும்படி ஏதோ ஒன்று செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒன்று. 1856-ம் ஆண்டில் கல்கத்தாவுக்கு கவர்னர் ஜெனரலாக வந்தவர் சார்லஸ் கன்னிங். அவரின் மனைவிக்குப் பிறந்த நாள் வந்தது. அந்த விருந்துக்காக, கல்கத்தாவிலே புகழ்பெற்ற மிட்டாய்க் கடை வைத்திருந்த பீம் சந்திர நாக்கிடம் சிறப்பு இனிப்பு செய்து தரச் சொன்னார். சந்திர நாக், புதிதாக குலோப் ஜாமூன் போன்ற ஓர் இனிப்பு செய்து விருந்துக்கு எடுத்துச் சென்றார். கன்னிங்கின் மனைவி இனிப்பைச் சுவைத்தார். ‘வாவ்... டெலிஷியஸ்!’ என்று அகமகிழ்ந்தார். ‘இந்த இனிப்பின் பெயர் என்ன?’ என்று கேட்டார்.
‘மேம்சாஹிப், இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. லேடி கன்னிங் என்று உங்கள் பெயரே வைத்துவிடலாம்’ என்றார் சந்திர நாக். மகிழ்ந்த லேடி கன்னிங் கூடுதலாகச் சில இனிப்புகளை எடுத்துச் சுவைத்தார்.
அது முதல் லேடி கன்னிங் வைத்த விருந்துகளில் எல்லாம் அந்த இனிப்பு தவறாமல் பரிமாறப்பட்டது. 1861-ம் ஆண்டில் லேடி கன்னிங் இறந்துபோனார். கல்கத்தா மக்கள் துரையம்மாவுக்காகக் கண்ணீர் சிந்தினார்கள். ‘லேடி கன்னிங்’ என்று பெயர் வைக்கப்பட்ட அந்த இனிப்பு அதற்குப் பிறகு புகழ்பெற ஆரம்பித்தது. சந்திர நாக்கின் மிட்டாய்க் கடையின் அடையாளமாக மாறிப்போனது. லேடி கன்னிங் என்று பெயரிடப்பட்ட அந்த இனிப்புதான் பின்பு பேச்சு வழக்கில் லெடிகேனி (Ledikeni) என்று இன்றும் நிலைபெற்றிருக்கிறது.
இன்னொரு பெரிய துரையம்மாவின் அழிச்சாட்டியங்களுடன் நிறைவு செய்வோம்.
ஆண்டு 1936. பரோடா சமஸ்தானத்தின் மகாராஜாவான சாயாஜி ராவ், பதவியேற்று வைர விழா கொண்டாடியிருந்தார். வெள்ளைக்காரனுக்குக் கூழைக்கும்பிடு போட விரும்பாத நேர்மையான மகாராஜா என்று சாயாஜி ராவைத் தாராளமாகச் சொல்லலாம். அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த வில்லிங்டன், சாயாஜி ராவோடு நல்லுறவு வைத்திருந்தார். ஆனால், வைஸ்ராயின் பெண்டாட்டி லேடி வில்லிங்டனைக் கண்டால்தான் எல்லோருக்குள்ளும் ஒருவித பயம். வெறுப்பு என்றுகூடச் சொல்லலாம்.
லேடி வில்லிங்டனது பழக்க வழக்கங்கள் அப்படிப்பட்டவை. ‘அட, இதென்ன புது மாடல் நெக்லஸா? நல்லாருக்கே! நான் எடுத்துக்கிறேன்’, ‘இந்த வெள்ளைக் குதிரை அழகா இருக்குது. எனக்குத்தானே?’, ‘அந்த வெள்ளிக்கோப்பைகளை நீங்க ஏன் எனக்குப் பரிசாகக் கொடுக்கக் கூடாது?’ - இப்படி வலியச் சென்று அடுத்தவர்களது பொருள்களை ஆட்டையைப் போடும் குணம் கொண்டவள். யாரோ தம் உழைப்பால் அரும்பாடுபட்டுக் கட்டிய கட்டடங்களுக்கும், உருவாக்கிய நிறுவனங்களுக்கும் தனது பெயரைச் சூட்டிக்கொள்ளும் புகழ்வெறி பிடித்தவள். மெட்ராஸில் லேடி வில்லிங்டன் நர்சிங் ஹோம், தி வில்லிங்டன் லேடீஸ் கிளப் போன்றவை எல்லாம் அப்படி வலுக்கட்டாயமாகப் பெயர் சூட்டப்பட்டவையே!
அதுபோக மெல்லிய ஊதாநிறம் (Mauve) மீது அவளுக்குப் பைத்தியம். தான் அணியும் உடை முதல், தன்னைச் சுற்றியிருக்கும் பொருள்கள் வரை எல்லாமே மெல்லிய ஊதா நிறத்தில் இருப்பதையே விரும்புவாள். தான் விருந்தினராகச் செல்லும் இடங்களிலும் ‘எங்கெங்கு காணினும் மெல்லிய ஊதா நிறைந்திருக்க வேண்டும்' என்று எதிர்பார்ப்பாள்; அல்லது அப்படி மாற்றச் சொல்லிப் படுத்தி எடுப்பாள்.
பரோடாவுக்கு வைஸ்ராய் வில்லிங்டன் வந்து தங்கப்போவதாக சாயாஜி ராவுக்குத் தகவல் வந்தது. அவர்கள் பரோடா வருவதற்கென சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாயாஜி ராவ், லேடி வில்லிங்டன் பிரயாணம் செய்யும் ரயில் பெட்டியில் எல்லாப் பொருள்களுமே மெல்லிய ஊதா நிறத்தில் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.
வந்து இறங்கிய லேடி வைஸ்ராயிடம், ‘பிரயாணம் எல்லாம் சௌகரியமாக இருந்ததா?’ என்று கேட்டார் சாயாஜி ராவ்.
‘எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் டாய்லெட் பேப்பரையும் மெல்லிய ஊதா நிறத்தில் வைத்திருக்கலாம்’ - லேடி வில்லிங்டன் அங்கலாய்த்தாள்.
லேடி வில்லிங்டன், பரோடாவின் லட்சுமி விலாஸ் அரண்மனைக்கு வருகிற செய்தி அறிந்த உடனேயே, மகாராணி சிம்னா பாய் உஷாரானாள். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாள். தான் புழங்கிக்கொண்டிருந்த முக்கியமான நகைகளை எல்லாம் ரகசிய இடங்களில் மறைத்து வைத்தாள். குறிப்பாக முத்து மாலை மற்றும் சில முத்து நகைகளை வெல்வெட் பெட்டி ஒன்றில் போட்டு, அரண்மனையின் தோட்டத்தில் புதைத்து வைத்தாள். புன்னகை தவழ, லேடி வில்லிங்டனை வரவேற்றாள்.
சிம்னா பாயின் கெட்ட நேரம். பரோடாவை விட்டு வில்லிங்டன் தம்பதியினர் கிளம்பும் எண்ணத்திலேயே இல்லை. மழை வேறு தொடங்கியிருந்தது. அவர்களது டேரா நீண்டது. மழைக்காலம் முடியும் நேரத்தில் ஒருவழியாகப் புறப்பட்டுச் சென்றார்கள்.
புன்னகை மாறாமல் அவர்களை வழியனுப்பிய சிம்னா பாய், அவசர அவசரமாகத் தோட்டத்துக்குச் சென்றாள். அந்த இடத்தைத் தோண்டச் சொன்னாள். வெல்வெட் பெட்டி சேதமடைந்து இருந்தது. அதனுள் மழைநீர் இறங்கி முத்துக்களில் பாதி காணாமல்போயிருந்தன. மீதமுள்ளவை வீணாகிப்போயிருந்தன. சிம்னா பாய்க்கு, மேம்சாஹிப் வில்லிங்டன் கைகொட்டி கேலியாகச் சிரிப்பதுபோலத் தெரிந்தது.