Published:Updated:

செறிவூட்டப்பட்ட அரிசி..! நல்லதா ? கெட்டதா ?

அரிசி
News
அரிசி

''சத்துக் குறைபாடு என்பது நபருக்கு நபர் வேறுபடக்கூடியது. ஒருவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கிடைத்தாலும் மற்றவருக்கு அது பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.''

Published:Updated:

செறிவூட்டப்பட்ட அரிசி..! நல்லதா ? கெட்டதா ?

''சத்துக் குறைபாடு என்பது நபருக்கு நபர் வேறுபடக்கூடியது. ஒருவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கிடைத்தாலும் மற்றவருக்கு அது பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.''

அரிசி
News
அரிசி

உடலில் வைட்டமின் பற்றாக்குறை, இரும்புச்சத்துக் குறைபாடு போன்றவை ஏற்படும்போது, தினசரி உணவில் செயற்கை சத்துகளைச் சேர்த்துக் கொடுத்தால், மக்கள் பயன்பெற முடியும் என செயற்கை ஊட்டமேற்றிய உணவில் சமீபகாலமாக முனைப்புக் காட்டி வருகிறது இந்திய அரசு. 

இது தொடர்பாக, நேற்றைய தினம் பேசியுள்ள தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,  ''அடுத்த வருடம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்,  இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், வழக்கமான அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கலந்து விற்பனை செய்யப்படும்'' என்று தகவல் தெரிவித்துள்ளார். 

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன; அது நமக்கு நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா?  வாருங்கள், முதலில், அதைத் தெரிந்து கொள்வோம். 

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

அரிசியைச் செறிவூட்ட உலக அளவில் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நம் நாட்டில், ஆரம்ப காலத்தில் அரிசியின் மேல் தேவையான சத்துகளைப் பூசிச் செறிவூட்டினார்கள். ஆனால், தண்ணீரில் அரிசியைக் களைந்தாலோ அல்லது ஊற வைத்தாலோ செறிவூட்டிய சத்துகள் நீங்கி விடும். அதனால், தற்போது, அரிசியுடன் தேவையான சத்துக்களைச் சேர்த்து கூழாக்கி, அதை மீண்டும் அரிசியைப் போலவே செய்து விடுவார்கள். பார்க்க சாதாரண அரிசியைப் போலவே இருக்கும். இதை, ஒரு கிலோ சாதாரண அரிசியில் 10 கிராம் வீதம் சேர்ப்பார்கள்.

இயற்கையாகவே அரிசி, எண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்தைத் தொழில்நுட்பம் மூலம் பிரித்தெடுத்துவிட்டு, செயற்கையாகச் சத்துகள் சேர்க்கப்படுவதே 'செயற்கை ஊட்டமேற்றம்' எனப்படுகிறது.

உதாரணமாக, அரிசியை நன்றாகப் பாலிஷ் செய்து அதை மாவாக்கும்போது அதிலுள்ள இயற்கை சத்துகள் பிரிக்கப்படும். பிறகு, செயற்கையான சத்துப் பொருள்களை அதில் கலந்து, கூழாக்கி உயர்வெப்ப அழுத்தத்தில் மீண்டும் அரிசியாக மாற்றப்படும். இதற்குப் பெயர் 'வெளியேற்ற முறை'. இத்தகைய செயற்கை ஊட்டமேற்றப்பட்ட உணவு குறித்து, 'பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்' அனந்து சொல்வதைக் கேளுங்கள்.

 'பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்'  அனந்து
'பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்' அனந்து

‘‘உடலில் ஏற்படும் சத்துக் குறைபாட்டைச் சீர்செய்யச் சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடுவது ஒருவகை. சத்தைத் தனியாக அதாவது மருந்தாக எடுத்துக்கொள்வது மற்றொரு வகை. இதில், கவனிக்க வேண்டிய விஷயம், மருந்துகளைவிட உணவுகளில் இருக்கும் சத்துகளை உடல் எளிதாகக் கிரகித்துக் கொள்ளும் என்பதுதான். இதை 'bio-absorption' என்போம்.

மக்களின் உடலில் சத்துகளை அதிகரிக்கும் நோக்கில், மக்கள் அதிகம் உட்கொள்ளக்கூடிய உணவில் செயற்கை ஊட்டமேற்ற வேண்டும் என்கிறது அரசு. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் 15 முதல் எல்லா மாவட்டங்களிலும் மதிய உணவு மற்றும் ஐ.சி.டி.எஸ் திட்டத்தின் மூலம் அரசாங்கம் செயற்கை ஊட்டமேற்றப்பட்ட அரிசி விநியோகத்தைத் தொடங்கியது. அரிசியைக் கழுவுதல்; சமைத்தல்; வடித்த ஆகிய நிலைகளைத் தாண்டி, இந்தச் செயற்கை ஊட்டம் முழுமையாக நம் உடலுக்குள் சென்றடையுமா என்பது சந்தேகமே. தவிர, சத்துகளை உணவு மூலம் செயற்கை ஊட்டமேற்றிக் கொடுத்தாலும் சரி, மருந்துகள் மூலம் கொடுத்தாலும் சரி, உடலில் பின்விளைவுகள் இருக்கவே செய்யும்.

அரிசி செயற்கை ஊட்டமேற்றம் செய்யப்படும்போது அதில் இரும்புச்சத்து அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. செயற்கை ஊட்டமேற்றப்பட்ட உணவால் உடலில் சத்து அதிகரித்ததற்கான சான்று உலகில் எங்கேயும் இருப்பதாகத் தெரியவில்லை. தவிர, சத்துக் குறைபாடு என்பது நபருக்கு நபர் வேறுபடக்கூடியது. ஒருவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கிடைத்தாலும் மற்றவருக்கு அது பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். உதாரணமாக, ‘ஹீமோகுளோபின்’ குறைபாட்டைச் சரிசெய்வதற்குக் குறிப்பிட்ட உணவில் செயற்கையாக இரும்புச்சத்துச் சேர்க்கப்படுகிறது என வைத்துக்கொண்டால் ‘ஹீமோகுளோபின்’ குறைபாட்டுக்கு இரும்புச் சத்து மட்டுமன்றி வேறு ஊட்டச் சத்துக் குறைபாடுகளும் காரணமாக இருக்கின்றன. இப்படி இருக்க, இரும்புச்சத்தை மட்டுமே அதிகரித்தால் அது ‘ஹீமோகுளோபின்’ பிரச்னையைச் சரிசெய்துவிடாது. அதே சமயம், உணவில் இரும்புச்சத்து அதிகரிப்பதால் நீரிழிவு, கணையப் பிரச்னை, காசநோய் போன்ற நோய்கள் வருவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகக் கூறப்படுகின்றன.

ரேஷன் கடை
ரேஷன் கடை

இது, சத்துக் குறைபாடு உடையவர்களை மீட்டெடுக்கும் முயற்சி என்றாலும், இதில் வியாபார யூகம் இருப்பதையும் மறுக்க முடியாது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டால் இந்திய மக்கள் உடல்ரீதியான பிரச்னைகளைத் தாண்டித் தொழில்ரீதியான பிரச்னைகளையும் எதிர்கொள்ள நேரிடும். அதாவது, இதில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் முதலீடு செய்வதால் சிறு, குறு தொழில்கள் வெகுவாக அப்புறப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். தற்போதைய காலகட்டத்தில் இயற்கை சத்துள்ள உணவுகள் விளைவிக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் கிடைப்பது முன்பைவிட வெகுவாகக் குறைந்திருக்கிறது.

இந்தச் சூழலில் அரசு செயற்கை செறிவூட்டப்பட்ட உணவுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்துக்குக் கோடிகளில் முதலீடு செய்வதில் முனைப்புக் காட்டுவதைக் காட்டிலும், இயற்கை உணவுகளை அதிக அளவில் விளைவிக்கும் முயற்சியில் அதிக ஆர்வம் காட்டினாலே இத்தகைய ஊட்டச் சத்துக் குறைபாடுகளை வெகுவாகக் குறைக்க முடியும்'' என்றார் 'பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்' அனந்து.

ரேஷன் அட்டைதாரர்கள்
ரேஷன் அட்டைதாரர்கள்

ஊட்டச்சத்து நிபுணர் ஶ்ரீமதி வெங்கட்ராமன், ''உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி இந்திய மக்கள்தொகையில் 60 சதவிகிதத்தினருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் இருக்கிறது. இந்தப் பிரச்னை கொரோனா பாதிப்புக்குப் பின் மேலும் தீவிரமடைந்திருப்பதாகவும், பெரும்பான்மை ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. இந்நிலையில்தான் இத்தகைய திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்திருக்கிறது.

ஒவ்வொருவரின் உணவு முறையும் வெவ்வேறாக உள்ள சூழலில், எல்லோருமே சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளும் சூழல் இங்கு இருக்கிறதா என்றால், இல்லை என்பதே உண்மை. பெரும்பான்மையான மக்கள் வெறும் அரிசி உணவை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.

அவர்களுக்குக் காய்கறி, பழங்கள், கீரைகள், பருப்பு வகைகள் எனத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதற்கான பொருளாதாரம் இல்லாமல் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில்தான் அனைவரும் அதிகமாக உண்ணக்கூடிய உணவில் ஊட்டச்சத்துகளைச் சேர்த்து வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஊட்டச்சத்து நிபுணர் ஶ்ரீமதி வெங்கட்ராமன்
ஊட்டச்சத்து நிபுணர் ஶ்ரீமதி வெங்கட்ராமன்

இந்தச் செயற்கை ஊட்டமேற்றம் நடவடிக்கையானது உலகச் சுகாதார நிறுவனம், உணவு பாதுகாப்பு அமைப்பு போன்றவற்றின் வழிகாட்டுதல்களின்படிதான் செயல்படுத்தப்படுகிறது. அதேசமயம் இந்தத் திட்டத்தை முறையாகக் கண்காணித்துச் செயல்படுத்துவது அவசியம். செயற்கை ஊட்டமேற்ற நடவடிக்கைகள் முறையாகக் கையாளப்பட வேண்டும்’’ என்கிறார், அழுத்தமாக.

செறிவூட்டப்பட்ட அரிசி... நல்லதா ? கெட்டதா ?  வரும்காலத்தில் நம் உடல்நிலை மட்டுமே இதற்கான பதிலைச் சொல்ல முடியும்.