Published:Updated:

5 ஆண்டுகளில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை இவ்வளவா? - மத்திய அரசு அளித்த அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவது தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. இதனால் காலநிலை மாற்றத்தின் விளைவுகளும் தூண்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

மரங்கள்
மரங்கள் ( Pixabay )

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 1.09 கோடி மரங்கள் அரசின் அனுமதியோடு வெட்டப்பட்டுள்ளதாகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத்துக்கான மாநில அமைச்சர் பாபுல் சுப்ரியோ பதிலளிக்கையில், ``கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 1,09,75,844 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதை ஈடுசெய்யும் விதமாக 12,60,00,000 மரங்கள் காடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் நடப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மரங்களைவிட அதிக மரங்களை நட வேண்டுமென்பதே அரசாங்கத்தின் கொள்கை. இந்த மரங்கள் காடு வளர்ப்புத் திட்டம் 1980-ன் கீழ் வெவ்வேறு வளர்ச்சிக்காக வெட்டப்பட்ட மரங்களை ஈடு செய்ய வளர்க்கப்படுகின்றன. இந்தக் கொள்கையினால்தான் இந்தியாவில் வனப்பகுதியின் அளவுகோல் உயர்ந்து காணப்படுகிறது" என்றார்.

காடழிப்பு
காடழிப்பு
Pixabay

இந்தியாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவது தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. இதனால் காலநிலை மாற்றத்தின் விளைவுகளும் தூண்டப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. முக்கியமான வளர்ச்சிப் பணிக்காக மட்டும் மரங்களை வெட்ட வேண்டும். இன்று நடும் மரங்கள் எப்படியும் பின்னர்தான் பயனளிக்கும். ஆகையால், இப்போதிருக்கும் மரங்களை முடிந்த வரையில் வெட்டாமல் பாதுகாப்பதே அரசின் கடமையாகும். ஏற்கெனவே உலக நாடுகள் பலவற்றில் காலநிலை மாற்ற அவசர காலம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், இந்தியாவும் அவசரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.