Published:Updated:

கொளுந்து விட்டு எரியும் கொடைக்கானல்... அணைக்க இருக்கும் கருவிகள் இவைதான்!

கொளுந்து விட்டு எரியும் கொடைக்கானல்... அணைக்க இருக்கும் கருவிகள் இவைதான்!
கொளுந்து விட்டு எரியும் கொடைக்கானல்... அணைக்க இருக்கும் கருவிகள் இவைதான்!

கோடைக்காலத்தில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக நாமெல்லாம் ஊட்டி,கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்குச் செல்கிறோம். ஆனால், கோடைக்காலத்தில் இந்தப் பகுதிகளில் உள்ள காடுகளும் கானுயிர்களும் சந்திக்கும் பிரச்னை கொஞ்ச நஞ்சமல்ல. குறிப்பாக கடும் வெயில் காரணமாக வனங்கள் பற்றி எரிவது அடிக்கடி நடக்கும். களைச்செடிகள், உண்ணிச்செடிகளால்தான் பெரும்பாலான தீ விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் 650 சதுர கிலோ பரப்பில் அமைந்துள்ளது கொடைக்கானல். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் தீ விபத்துக்கள் நடப்பதும், ஏக்கர் கணக்கில் புல்வெளிகள் அழிவதும், அரிய வகை மரங்கள் கருகுவதும் வாடிக்கையான ஒன்று. இந்த நிகழ்வுகள் மார்ச் மாதத்தின் கடைசியில் தொடங்கி ஏப்ரல் வரை நீடிக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே தீ விபத்துக்கள் நடந்து வருகின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தாண்டிகுடி வனப்பகுதியில் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து கொடைக்கானல் பகுதியில், வடகவுஞ்சி மற்றும் கீழ்மலை கிராமங்கள், வில்பட்டி, பாத்திமாகுருசடி, ஏரிரோடு, பிரகாசபுரம் ஆகிய பகுதிகளிலும் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. தீ விபத்துகளால் கானுயிர்கள் பல கருகி இறந்துவிடுகின்றன. பெரிய விலங்குகள் வாழ்விடத்தை இழந்து, ஊருக்குள் வரும் அவலம் நேர்கிறது. காட்டுத்தீ எரியும் காலங்களில் ஏற்படும் கடுமையான புகை காரணமாக ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால் மனிதர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. கோடைக்காலத்தின் தொடக்கமே பயங்கரமாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் அதிக தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றைத் தடுக்க வனத்துறையினர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல் மலையைப் பொருத்தவரை தீத்தடுப்பு நடவடிக்கையில்தான் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர். தீயை அணைப்பது குறைவுதான். பெரும்பாலும் தானாக தீ அணைந்தால்தான் உண்டு. காரணம் அவர்களிடம் எந்த நவீன கருவிகளும் இல்லை. இன்னமும் மனித உழைப்பை மட்டும் வைத்து தீ விபத்துகளை எதிர்கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி தேவைப்படும் நேரங்களில் ஹெலிகாப்டர் போன்ற நவீன முறைகளைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சி எடுக்க வேண்டும்‘‘ என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

"தீ விபத்துக்களைத் தடுப்பதில் வனத்துறையினர் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் வனத்துறையினர் பணி மிகவும் சவாலானது. தீயை அணைப்பதற்கான அவர்களது போராட்டம் போற்றத்தக்கது. மலை முகடுகளில், பள்ளத்தாக்குகளில், அடர் வனப்பகுதியில் என திடீரென பற்றும் சிறுநெருப்பு, மளமளவென பற்றி சில மணி நேரங்களில் பெரும் பிழம்பாக எரியத்தொடங்கிவிடும். இத்தனை சவாலான பணியில் இருந்தாலும் போதுமான கருவிகளும், வசதிகளும் இல்லை. அவை இருந்தால் தீ விபத்துகளைப் பெருமளவில் தடுக்க முடியும்" என்கிறார்கள் வனத்துறை ஊழியர்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர் ஒருவர், ‘‘ பொதுவா பனிக்காலம் முடிஞ்சு கோடைக்காலம் தொடங்கும்போது, மலையில இருக்க செடி,கொடிக காஞ்சு சருகாக் கிடக்கும். அந்த நேரங்கள்ல அதிக வெயில் காரணமாகவோ, மரங்கள் உரசுறதுனாலயோ தீப்பிடிச்சுக்கும். சின்னப் பொறியா ஆரம்பிக்கிறது கொஞ்ச நேரத்துல பெரிய நெருப்பாக மாறிடும். சில நேரங்கள்ல சமூக விரோதிகளும் தீ வெச்சுடுவாங்க. காட்டைப் பொறுத்தவரை தீயைத் தடுக்குறதுதான் சவாலான வேலை. காட்டுல ஏதோ ஒரு மூலையில தீ பிடிச்சுக்கும். உடனே நாங்க அங்க போவோம். சரியான பாதை இருக்காது. புதர்களுக்கு இடையில புகுந்து போய் தீயை அணைக்கணும். தீ எரியுற காட்டை வெளிய இருந்து பார்த்திருப்பீங்க. ஆனா, பக்கத்துல பாக்கும்போது ஈரக்கொலையே நடுங்கிடும். தீயோட அனல் அரை கிலோ மீட்டருக்கும் மேல அடிக்கும். சின்னச் சின்ன பறவைகள் அலறிகிட்டு, மரண ஓலத்துல கத்துறதை கேட்கும்போது மனசு பாரமாகிடும். விலங்குகள், பறவைகள், இன்னும் சில சின்ன சின்ன உயிருங்க இதுவரைக்கும் வாழ்ந்த இடத்தை விட்டு, உசுர் பயத்தோட தறிகொட்டு ஓடுறதை பார்க்க சகிக்காது.

இதுக்கு இடையில எவ்வளவு வேகமா முடியுமோ அவ்வளவு வேகமா தீயை அணைக்குற வேலையில இறங்குவோம். பெரும்பாலும் பள்ளம் எடுத்து தீ மேலும் பரவாம தடுக்குறது, பச்சை இலைதழைகளை வெட்டி போட்டு தீயை அணைக்கிறதுனு முயற்சி செஞ்சி அணைச்சுட்டு வர்றோம். எங்ககிட்ட எந்த நவீனக் கருவிகளும் கிடையாது. முறையான பூட்ஸ் கூட கிடையாதுன்னா பாத்துக்கோங்க. இந்த வருஷம் கோடைக்காலம் ஆரம்பிச்சிடுச்சு. இன்னும் உக்கிரமாகலை. ஆனா, அதுக்குள்ள அங்கங்க தீ பிடிக்க ஆரம்பிச்சிடிச்சு. இந்த கோடை முடியற வரைக்கும் நாங்க தினமும் செத்து செத்துதான் பிழைக்கணும். வெளிநாட்டுலயெல்லாம், வனத்துல தீ பிடிச்சா, ஹெலிகாப்டர் மூலமா, தண்ணியைத் தெளிச்சு, தீயை அணைச்சுடுறாங்க. எங்களுக்கு ஹெலிகாப்டர் எல்லாம் வேணாம்.  அடிப்படை வசதிகளை அரசாங்கம் செஞ்சிக்கொடுத்த போதும். காட்டை நாங்க காப்பத்திடுவோம்‘‘ என்றார்.

வனங்களைக் காப்பதில் அரசு கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். வனத்துறையினருக்கு நவீன கருவிகள் வழங்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை. 

பின் செல்ல