Published:Updated:

``குவியும் மக்கள்... வலுக்கும் எதிர்ப்பு.. மற்றொரு மெரினா ஆகிறதா ஸ்டெர்லைட்!?’’ #BanSterlite

``குவியும் மக்கள்... வலுக்கும் எதிர்ப்பு.. மற்றொரு மெரினா ஆகிறதா ஸ்டெர்லைட்!?’’ #BanSterlite
``குவியும் மக்கள்... வலுக்கும் எதிர்ப்பு.. மற்றொரு மெரினா ஆகிறதா ஸ்டெர்லைட்!?’’ #BanSterlite

``குவியும் மக்கள்... வலுக்கும் எதிர்ப்பு.. மற்றொரு மெரினா ஆகிறதா ஸ்டெர்லைட்!?’’ #BanSterlite

``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் மீண்டும் வெடித்துள்ள நிலையில், தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்திருப்பது, தமிழகத்தை மத்திய அரசு மேலும் புறக்கணிக்கக்கூடிய செயல். தமிழகத்துக்கு  ஆட்கொல்லி திட்டங்களைத் தருவதுதான் மத்திய  அரசின் பரிசு'' என்று தி.மு.க. செய்தித்தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரின் பேட்டி...

``நியூட்ரினோ திட்டத்தை நீங்கள் எதிர்ப்பது ஏன்..?''

``காந்தத் தூண்டுதலால் துகள்களை ஆய்வுசெய்யும் பொருட்டு அண்ட வெளியில் சக்தி மிகுந்த கதிரலைகள் உருவாகும். அதை உருவாக்க 1000 டன் ஜெலட்டின் வெடிமருந்துகளை 800 நாள்களுக்கு வெடிக்கச் செய்து 11,25,000 பாறைகளுடன் மலைகளும் தகர்க்கப்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமல்லாமல் தேனி மாவட்டத்துடன், கேரளத்தின் இடுக்கி மாவட்டமும் சேர்ந்து பாதிக்கப்படும். பூமியே சிதறுண்டுவிடுவது போன்ற விளைவுகள் ஏற்படுமென்ற அச்சம் உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட ஆபத்தான திட்டம் தமிழகத்திற்கு தேவைதானா...? இதுமட்டுமல்ல, ஆபத்தை விளைவிக்கும் பல திட்டங்களை, குப்பைக் கூளம் போல தமிழகத்தில் மத்திய அரசு திணிக்கிறது. இது என்ன நியாயம்? 

நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதோடு, அந்தத் திட்டத்திற்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளொன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்ற கொடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, காவிரியில் தண்ணீர் தர கர்நாடகம் மறுக்கிறது. மத்திய அரசும் கர்நாடக அரசோடு சேர்ந்து கொண்டு தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது. இந்நிலையில் முல்லைப்பெரியாறிலிருந்து நாளொன்றுக்கு மூன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவது தமிழகத்தை மேலும் வஞ்சிப்பதாகும். இத்தகைய துரோகத்தை மன்னிக்க முடியுமா?" 

``ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி மீண்டும் வெடித்துள்ளதே..?''

``தூத்துக்குடி நகரை தூசி, விஷக்குடியாக ஆக்குகின்ற ஸ்டெர்லைட் ஆலையை அங்கிருந்து விரட்ட மக்கள் திரண்டுவிட்டனர். மெரினா கடற்கரையில் மக்கள் குவிந்ததுபோல தூத்துக்குடி வி.வி.டி சந்திப்பில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் ஆர்ப்பரித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மராட்டிய மாநிலம் மாம்பழம் விளையும் பூமியான ரத்தினகிரியிலிருந்து விரட்டப்பட்டு, கேரளாவில் அனுமதி கிடைக்காமல் தூத்துக்குடிக்கு இடம் பெயர்ந்தது. ஆரம்பகட்டத்தில், 25 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டமும், மறியலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்களும் என்று வைகோ-வுடன் இணைந்து கடமையாற்றியவன். இந்த தாமிர விஷவாயு கக்கும் ஆலைகள் அதிகமாக மக்கள் நடமாட்டம் இல்லாத தென்அமெரிக்காவின் சிலி போன்ற நாடுகளில்தான் உள்ளன. மக்கள் நெருக்கம் கொண்ட  தூத்துக்குடி நகரில் இதை அமைக்கும் போதே எதிர்ப்புக்காட்டிய போது பலரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதனால்தான் இன்றைக்குப் பெரும் கேடுகள் அந்த ஆலை மூலம் அரங்கேறிவிட்டன. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம், கொங்கு மண்டலத்தில் விவசாயத்தைப் பாதிக்கும் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன், தெற்கே சாத்தான்குளம் வரை பதிக்கும் திட்டம், தேனியில் நியூட்ரினோ திட்டம், நெடுவாசல் மீத்தேன் திட்டம் என இந்தியாவில் நஞ்சைக் கக்கும் ஆலைகளை தமிழகத்தில் நிறுவ தமிழகம் என்ன புறக்கணிக்கப்பட்ட மண்ணா? இவ்வாறு பல உயிர்க்கொல்லி ஆலைகளை, தமிழகத்திற்கு தள்ளி விடுகிறது மத்திய அரசு''.

``உயிர் குடிக்கும் நச்சு ஆலைகளுக்கு எதிரான தங்களின் சட்டப்போராட்டங்கள் குறித்து சொல்லுங்களேன்?''

``ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இருபத்தைந்து ஆண்டுகளாக வைகோவுடன் இணைந்து களப்பணியாற்றி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளேன். இன்றைக்குத் தூத்துக்குடி மக்களே வெகுண்டெழுந்துள்ளனர். கூடங்குளம் அணுமின் திட்டத்தை அறிவித்தவுடன் அது மிகவும் ஆபத்தானது என்று 1989- ம் ஆண்டிலேயே வழக்குத் தொடுத்தவன் நான். இரண்டாவது முறையாக கூடங்குளம் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன் (வழக்கு எண் / WP No. 22771 of 2011). 

எங்கள் கரிசல் பகுதியில் ராஜபாளையத்திலுள்ள தமிழ்நாடு சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு, குடிநீர் வசதியில்லாமல், மக்களுக்கு சுவாசநோய், புற்றுநோய் என 1970-களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அதை எதிர்த்து விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு, சட்டப்பேரவைத் துணைத் தலைவரும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான பெ. சீனிவாசன், அன்றைய மக்களவை உறுப்பினராக இருந்த சிவகாசி வி.ஜெயலட்சுமி போன்றோர் போராடி எந்தவிதத் தீர்வும் எட்டப்படவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு (வழக்கு எண். 10589/1986) தாக்கல் செய்து அதன்படி, உயர்நீதிமன்ற உத்தரவைப் பெற்று ஆலையிலிருந்து தூசி வெளியேறாமல் பலகோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களும் கருவிகளும் பொருத்தப்பட்டன. அப்போதே ஆலையினை விற்றுவிடலாம் என்று தமிழ்நாடு அரசு யோசித்தபொழுது 1986-ல் என்னுடைய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் ஆலையினை விற்கமுடியாமல் போனது. மேலும், 2015ம் ஆண்டு (WP No. 4696 of 2015) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கின் தீர்ப்பின்படி 80 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டு, தமிழக அரசு ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தியது. சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புஉணர்வு இல்லாத காலத்திலேயே இதுபோன்ற வழக்குகளை நான் தொடுத்துள்ளேன்.

கேரளாவின் மருத்துவக் கழிவுகள், குப்பைகளை தமிழக எல்லைப் பகுதிகளான பாலக்காடு, நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் குமரி மாவட்டத்தின் எல்லைகளில் லாரிகளில் கொண்டுவந்து கொட்டும் பிரச்னையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இப்போது, அந்தப் பிரச்னை குறித்த விழிப்புஉணர்வு எல்லை மாவட்ட மக்களிடையே அதிக அளவில் ஏற்பட்டுள்ளது''.

``தமிழகம் இப்போது எதிர்நோக்கும் ஆபத்தான திட்டங்கள் என்னென்ன..?''

``தமிழகத்தின் கெயில் குழாய்கள் பதிப்பு கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாமல் திருத்தணி அருகே இருந்து மதுரை வரை பதிக்கும் பணிகளும், கடலூர் முதல் சேலம் வரை பதிக்கும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. விவசாயத்தைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் கிணறுகளை தமிழகத்தில் பல பகுதிகளில் தோண்டும் திட்டமும் உள்ளன. ஏற்கெனவே, இது நடைமுறைக்கு வந்துவிட்டது. முன்பு, இறால் பண்ணைகளும் விவசாய நிலங்களை களர் நிலங்களாக்கின. விவசாய நிலங்களில் மின்சாரக் கடத்தி கோபுரங்களை அமைத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இம்மாதிரி ஆலைகளால் ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் இருக்கும் தண்ணீர் ஒரு பக்கம் மாசடைகின்றது. இன்னொரு பக்கம் தொற்று வியாதிகள் பரவுகின்றன 'அரியலூர் சிமென்ட் தொழிற்சாலை, மதுரை பொய்கைக் கரைப்பட்டியிலுள்ள கெமிக்கல் தொழிற்சாலை, தூத்துக்குடி சிப்காட், கடலூர் சிப்காட், திருப்பூர் பின்னலாடை - நொய்யலாற்றின் மரணம், சேலம் கஞ்சமலை தாது கம்பெனி, மேட்டூர் அனல்மின் நிலையம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், கெயில் திட்டம், திருவண்ணாமலை - ஜிண்டால் தாது கம்பெனி (இன்னும் தொடங்கப்படவில்லை), ஊட்டி ஸ்டெர்லிங் ஆலை, கொடைக்கானல் பாதரச (மெர்குரி) தொழிற்சாலை...' என்று பல திட்டங்களைச் சொல்லலாம்''.

``தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்கிறீர்களா..?''

``தமிழகத்திற்கு பலனளிக்க வேண்டிய சேது சமுத்திரத் திட்டத்தின் கதி என்ன ஆனது? ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அதை இழுத்து மூடி விட்டார்கள். தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்ததால், தமிழக மீனவர்களின் நிம்மதி தொலைந்தது. 1959-ம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சேலத்தில் 1982-ம் ஆண்டு நிறுவப்பட்ட சேலம் இரும்பாலை தற்போது முடக்கப்படுகிறது. ஊட்டியில் முக்கியமாக இயங்கிவந்த இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலையை மூடி நைனிடாலுக்கு மத்திய அரசு அனுப்பிவிட்டது. ஆனால், பல்வேறு ஆபத்தான நஞ்சைக் கக்கும், சுற்றுச் சூழுலுக்குத் தீங்கிழைக்கும் தொழிற்சாலைகளையே தமிழகத்துகு அனுப்பி வைக்கிறது. தமிழகத்திற்குத் தேவையான, ஆக்கபூர்வமான திட்டங்களை முடக்கிவிட்டு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய, மக்கள் விரோத திட்டங்களுக்குத் தாராளமாக அனுமதியை வழங்குவதுதான் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் பரிசு''.

அடுத்த கட்டுரைக்கு