Published:Updated:

8 வழி பசுமைச்சாலை விவகாரம்... சட்ட அம்சங்களை விவரிக்கும் `பூவுலகின் நண்பர்கள்!’

8 வழி பசுமைச்சாலை விவகாரம்... சட்ட அம்சங்களை விவரிக்கும் `பூவுலகின் நண்பர்கள்!’
8 வழி பசுமைச்சாலை விவகாரம்... சட்ட அம்சங்களை விவரிக்கும் `பூவுலகின் நண்பர்கள்!’

சென்னை மாநகரிலேயே வாகனங்களில் விரைவாகப் பயணம் செய்யமுடியாத நிலையில்தான் இன்றைய சாலைகளின் தரமும் போக்குவரத்து நெரிசலும் இருந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் சென்னையிலிருந்து சேலத்துக்கு சுமார் 3.30 மணி நேரத்தில் செல்லும் வகையில் விளைநிலங்கள் மற்றும் பசுமையான மரங்களை அழித்து, எட்டு வழிச் சாலை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு தொடங்கியுள்ளது. 277.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படவிருக்கும் இந்தச் சாலையினால் 159 கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று தெரியவந்துள்ளது. இந்தச் சாலை தொடர்பாக, சம்பந்தப்பட்ட மக்களின் கருத்துகளைக் கேட்காமல் 10,000 கோடி ரூபாய் செலவில் போடப்படவிருக்கும் இதனால் 2,554 ஹெக்டேர் நிலம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. பல ஹெக்டேர் அளவிலான காடுகளும் அழிக்கப்படும் என்றும் முதல்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையிலான இந்த எட்டுவழிச் சாலை யாருக்குப் பயன்படப்போகிறது என்பது அரசாங்கத்துக்கே வெளிச்சம்.

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்கள். இதுகுறித்த விவரங்களையும் விளக்கங்களையும் கேட்கப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.வெற்றிச்செல்வனிடம் பேசினோம். அவர், ``2013-ம் ஆண்டில் நிலம் கையகப்படுத்துதல் புதிய சட்டமொன்று வந்தது. Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 என்பதே அந்தச் சட்டமாகும். இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், அதற்கு முன் இருந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டங்களை எல்லாம் திரும்பப் பெற்றார்கள். வெள்ளைக்காரர்கள் காலத்திலிருந்தே நிலம் கையகப்படுத்துதல் சட்டங்கள் இருந்து வந்தன. `பொது உபயோகத்துக்காக நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தலாம்' என்பது தொன்றுதொட்டு இருக்கக்கூடிய ஒரு சட்டம்தான். நிலம் கையகப்படுத்துவதில் இதுவரை நடைமுறையில் இருந்த அம்சம் என்னவெனில், அரசாங்கத்துக்குத் தேவையென்றால் எந்தத் திட்டத்துக்கு வேண்டுமானாலும் நிலத்தைக் கையகப்படுத்திக் கொள்ளலாம். மிகப்பெரிய திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தும்போது, ஏராளமானோர் தாங்கள் இருந்த இடங்களைவிட்டு குடிபெயர்ந்தாக வேண்டும். இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு, சரியான இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுப்பதற்காகவும் மறுவாழ்வு கொடுப்பதற்காகவும் வேறொரு இடத்தில் மக்களைக் குடியமர்த்த ஏதுவாகவும் விரிவான ஒரு சட்டம் தேவைப்பட்டது. அதனால் 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டதுதான் மேற்சொன்ன அந்தச் சட்டம்.

இந்தச் சட்டமானது மூன்று சாராம்சங்களைக் கொண்டது. முதலாவதாக, கொண்டுவரப்போகும் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படும் என்பதைக் கணக்கீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தால் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மக்களுக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படும் என்பதைக் கணக்கில் கொள்வதற்காகவே இந்த நடைமுறை. மேலும், செயல்படுத்தவிருக்கும் திட்டம் உண்மையிலேயே பொதுமக்களின் நன்மைக்காக, பொது உபயோகத்துக்குப் பயன்படுகிறதா என்பது மிகவும் முக்கியமானது. பின்னர், இந்தத் திட்டத்தால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள், இடம்பெயர்வார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். 

இதற்காக, சமூகப் பாதிப்பு ஆய்வை மேற்கொள்ள ஏதுவாகக் கிராமசபைகளைக் கூட்டுவது, நகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளில் கலந்தாலோசித்து, அவற்றின் பிரதிநிதிகளின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். இந்தச் சட்டத்தின் நோக்கமே ஜனநாயகத்தின் அடிநாதத்தை நிலைநிறுத்துவதுதான். அதாவது, உள்ளாட்சி அமைப்புகளையும் உள்ளடக்கிய ஒரு ஜனநாயகபூர்வமான வழிமுறையைப் பின்பற்றக்கூடிய அம்சங்களைக் கொண்ட சட்டமாக அது உள்ளது. ஆனால், பொதுவாக அரசாங்கம் செய்வது என்னவெனில் திட்டத்தை தீட்டிவிட்டு அதை மக்கள் மீது திணிக்கிறார்கள். ஆனால், அப்படிச் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தையும் எடுத்துக் கொள்வதற்காகவே இதுபோன்ற மதிப்பீடு செய்யப்படுகிறது. பின்னர், அந்த மதிப்பீட்டைக் குறிப்பிட்ட வட்டார மொழிகளில் மொழிபெயர்த்து, மக்களிடம் முன்வைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஒப்புக்கொண்டால் மட்டுமே அந்தத் திட்டத்தைக் கொண்டு வரமுடியும். அதன் பின்னரே, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். பின்னர் 60 நாள்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அப்போது மக்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். அதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். பின்னர் அரசாங்கத்தின் முடிவே இறுதியானதாகக் எடுத்துக் கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் இந்தச் சட்டத்தில் அம்சங்களாக உள்ளன.

எந்தவொரு பொது உபயோகத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டாலும் 2013-ம் ஆண்டைய சட்டத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதை அந்தச் சட்ட வரையறையின் முதல் பத்தியிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், இந்தச் சட்டத்தில் ஒரு சிக்கல் உள்ளது. இந்தச் சட்டத்தின் 105-வது பிரிவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால், பின் அட்டவணையில் குறிப்பிட்டிருக்கிற 13 சட்டங்களைப் பயன்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்தினால் 2013-ம் ஆண்டு சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. 1956-ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை சட்டத்தைக் கொண்டு நிலம் கையகப்படுத்தும்போது, 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பின்பற்றத் தேவையில்லை. அந்தவகையில் சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த 1956-ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், மக்களுக்கு இழப்பீடு கொடுப்பதற்கும் மீள் குடியேற்றம் ஆகியவற்றுக்கும்
2013-ம் ஆண்டு சட்டத்தைத்தான் அரசுப் பயன்படுத்தியாக வேண்டும்.

இதனால் மக்களின் அடிப்படை உரிமைகள் அடிபட்டுப்போகின்றன. அதாவது, நிலம் கையகப்படுத்த ஒரு சட்டம், இழப்பீடு கொடுப்பதற்கு வேறொரு சட்டம். ஏன் இந்த முரண்? 2013-ம் ஆண்டு சட்டத்தில் விதிவிலக்காகச் சொல்லப்பட்டுள்ள 13 சட்டங்களைக் கொண்ட பின் அட்டவணையைக் குறிப்பிடும் 105-வது பிரிவு என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்ற வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளோம். அதேபோல தவறாக உள்ள இந்தச் சட்டத்தை முன்வைத்து எட்டுவழிச் சாலைக்கு நிலத்தைக் கையகப்படுத்தும் தற்போதைய நடவடிக்கைகளை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்ற வாதத்தையும் முன்வைத்து வழக்கு தொடுத்துள்ளோம்" என்றார்.