Published:Updated:

''ஒரு வைஃபை மரம் 21 லட்சம்... மொத்தம் 25 மரங்கள்!'' - கோவை ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
''ஒரு வைஃபை மரம் 21 லட்சம்... மொத்தம் 25 மரங்கள்!'' - கோவை ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்
''ஒரு வைஃபை மரம் 21 லட்சம்... மொத்தம் 25 மரங்கள்!'' - கோவை ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்

. தனியார் நிறுவனத்துடன் இணைந்து, கோவை மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட் ட்ரீயை கோவை சிட்டி முழுவதும் 25 இடங்களில் அமைக்க உள்ளது. இதுதான், இந்த ஸ்மார்ட் ட்ரீ பரவலாக பேசப்படுவதற்குக் காரணம்.

ஸ்மார்ட் ட்ரீ.. கோவையில் கடந்த சில மாதங்களாக முக்கியமான பேசுபொருளாக ஆகியிருக்கிறது இந்த வார்த்தை. வைஃபை, சோலார் பேனல், எல்.இ.டி டிஸ்ப்ளே, அதில் ஏதாவது ஒளிபரப்பு ஆகிக் கொண்டிருக்கும். இவை அனைத்தும் அந்த ஸ்மார்ட் ட்ரீ என்றழைக்கப்படும், வைஃபை மரத்தின் கீழ் கிடைக்கும். தனியார் நிறுவனத்துடன் இணைந்து கோவை மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட் ட்ரீயை கோவை சிட்டி முழுவதும் 25 இடங்களில் அமைக்க உள்ளது. இதுதான், இந்த ஸ்மார்ட் ட்ரீ பரவலாக பேசப்படுவதற்குக் காரணம்.

ஃபை-பரில் செய்யப்பட்ட செயற்கை மரம், கோல்டு பெயின்ட் அடித்த இலைகளுடன் கோவை வ.உ.சி பூங்காவில் முதல் ஸ்மார்ட் ட்ரீ திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. 12 லட்சம் ரூபாயில் அமைக்கப்படுவதாகச் சொன்ன அந்த மரத்துக்கான செலவு, தற்போது 21 லட்சம் ரூபாயைத் தொட்டுவிட்டது.

"தற்போதைய சூழ்நிலைக்கு இணையதளம் முக்கியம்தான். ஆனால் அது எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது. அதற்குப் அவ்வளவு செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யலாமே" என்று அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் அஸரஃப் அலி, "பல கோடி ரூபாய் செலவு செய்து செயற்கை

மரங்களை அமைப்பது அவசியமில்லை. இந்த மரம், சுற்றுச் சூழலுக்கு எந்த விதத்திலும் உதவப் போவது இல்லை. இணையதளம் வந்த புதிதில் வைஃபைக்கான தேவை இருந்தது. ஆனால், தற்போது எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. 199 ரூபாய்க்கு, போட்டி போட்டு கொண்டு டேட்டா பேக்குகளுக்கு சலுகைகளை அள்ளி வழங்கி வருகின்றனர். மேலும், ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்ட வைஃவை, வேறு விஷயத்துக்காகத்தான் பயன்படுத்தப்பட்டது.

 செல்போனால், குடும்ப உறவுகளுக்குள் பேச்சுவார்த்தை குறைந்துவிட்டது. பல மாநகராட்சிப் பள்ளிகளில் கழிவறை இல்லாமல் இருக்கிறது. அங்குக் கழிவறைகள் அமைக்கலாம். மரக்கன்றுகள் நடுவது. கழிவறை இல்லாத பொது இடங்களிலும் கழிவறைகள் அமைப்பது போன்ற மக்களுக்கு பயன்படக் கூடிய திட்டங்களை அமைக்கலாம்" என்றார்.

வைல்ட் விங் (Wild Wing)  அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரவணன், "நான் நர்சரி நடத்தி வருகிறேன். 8 ஆயிரம் மரங்களை

ஓராண்டுக்கு வளர்த்தேன். அவை, 5 அடி வளர்ந்தவுடன் இலவசமாகக் கொடுத்துவிட்டேன். 8 ஆயிரம் மரங்களை பராமரிக்க எனக்கு, 3 லட்ச ரூபாய் ஆனது. அதில், 1,000 மரங்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும், அதனால் நமக்கு கிடைக்கும் பயன்கள் அதிகம். ஆனால், இவ்வளவு செலவு செய்தும் இந்தச் செயற்கை மரத்தின் பலனை அதனுடன் ஒப்பிடவே முடியாது. ஸ்மார்ட் சிட்டி என்கிற பேரில், ஆர்.எஸ்.புரத்தில் மாடல் ரோடு கொண்டு வரப்படும் என்றனர். தற்போதுவரை, மாடல் ரோடுக்கான பணிகள் தொடங்கவில்லை.

எந்த ஒரு பணியும் செயல்படுத்தப்படாத நிலையில்தான் இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், குளங்களை மேம்படுத்துவதற்கு 700 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். அவற்றில், குளங்களை அழகுபடுத்துவதற்காக மட்டும் 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். அழகுபடுத்துவதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வெளிநாடுகளிலும் அழகுபடுத்துதல் இருக்கிறது. அதில் பெரிய தவறு இல்லை. ஆனால், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை முதலில் பார்க்க வேண்டும். அவார்டு வாங்குவதற்குத்தான் இதுபோன்ற பணிகளை மாநகராட்சி செய்கிறது. எனவே, மக்களுக்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் பணிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றார்.

"மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஸ்மார்ட் ட்ரீ கொண்டு வரப்பட்டது. அதே கேட்பாரற்றுத்தான் கிடக்கிறது. சாலை விரிவாக்கம், நகரமயமாதல் என்ற பெயரில், அவிநாசி, திருச்சி, மேட்டுப்பாளையம், தடாகம், சிறுவாணி சாலைகளில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஒரு மரம் வெட்டினால், 10 மரம் வைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இங்கு ஒரு மரம் கூட வைக்கப்படுவதில்லை. ஒரு மரக்கன்று 8 ரூபாயில் இருந்து 10 ரூபாய் விலைக்குக் கிடைக்கிறது. ஒரு மரத்துக்கு 12 லட்ச ரூபாய் என்று இவர்கள் சொல்லும் கணக்கை எடுத்துக் கொண்டாலும், இதற்கு 3 கோடி ரூபாய் செலவாகிறது. ஆனால், ஒரு ஸ்மார்ட் ட்ரீக்கே 21 லட்ச ரூபாய் செலவு ஆகியுள்ளது. உண்மையில், இதற்கு ஆகப்போகும் செலவு குறித்த விபரங்கள், அவர்களுக்கே தெரிவதில்லை. ஸ்மார்ட் ட்ரீ அமைக்கும் பணத்தில், கோடிக்கணக்கான மரங்களை நட்டுவிடலாம்" என்று சுழலியில் ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ஸ்மார்ட் ட்ரீ பணிகளை செய்துவரும் ஜே.சி மீடியா என்டர்டெய்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சதீஸ்குமார், "உலகிலேயே முதல்முறையாக இதுபோன்ற செட் அப்பில் ஸ்மார்ட் ட்ரீயை அமைத்துள்ளோம். வ.உசி-இல் அரசமர வடிவில் இந்த ஸ்மார்ட் ட்ரீயை அமைத்துள்ளோம். இதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியான மர வடிவில் அமைப்போம். ஒரு மரத்துக்கு 12 லட்ச ரூபாய் என்று திட்டமிட்டோம். ஆனால், தங்க இலை வடிவு போன்றவற்றால், இந்த மரத்துக்கு தற்போதுவரை 21 லட்ச ரூபாய் செலவாகிவிட்டது. அடுத்த நான்கு மாதங்களுக்குள் மீதம் உள்ள மரங்களையும் அமைத்துவிடுவோம். இதில் 30 பேர் அமரலாம். 500 மீட்டர் தூரத்துக்கு வைஃபை வசதி பெற முடியும்" என்றார்.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மேலாளர் சுபாஷ், "முழுக்க முழுக்க அந்தத் தனியார் நிறுவனத்தின் செலவில்தான் ஸ்மார்ட் ட்ரீ அமைக்கப்படுகிறது. இடம் மட்டும்தான் மாநகராட்சி வழங்கியுள்ளது.  அதில், விளம்பரம் வைக்கப்படும். அதில் கிடைக்கும் வருமானத்தை, மாநகராட்சியும், தனியார் நிறுவனமும் பகிர்ந்து கொள்வோம்" என்றவரிடம், அடிப்படை தேவைக்கு இதுபோன்ற திட்டங்களை கொண்டு வரலாமே? என்று கேட்டதற்கு, "நல்ல திட்டத்தை யார் வைத்திருந்தாலும், அதை மாநகராட்சியிடம் கொடுக்கலாம்" என்றார்.

ஊரை அழகுபடுத்துவது முக்கியம்தான். ஆனால், அழகைவிட அடிப்படைத் தேவைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு