Published:Updated:

முன்னறிவிப்பில்லாமல் திறந்துவிடப்பட்ட கேரள பனாசுர சாகர் அணை... நடந்ததை விவரிக்கிறார் ஆட்சியர்!

முன்னறிவிப்பில்லாமல் திறந்துவிடப்பட்ட கேரள பனாசுர சாகர் அணை... நடந்ததை விவரிக்கிறார் ஆட்சியர்!

முன்னறிவிப்பில்லாமல் திறந்துவிடப்பட்ட கேரள பனாசுர சாகர் அணை... நடந்ததை விவரிக்கிறார் ஆட்சியர்!

முன்னறிவிப்பில்லாமல் திறந்துவிடப்பட்ட கேரள பனாசுர சாகர் அணை... நடந்ததை விவரிக்கிறார் ஆட்சியர்!

முன்னறிவிப்பில்லாமல் திறந்துவிடப்பட்ட கேரள பனாசுர சாகர் அணை... நடந்ததை விவரிக்கிறார் ஆட்சியர்!

Published:Updated:
முன்னறிவிப்பில்லாமல் திறந்துவிடப்பட்ட கேரள பனாசுர சாகர் அணை... நடந்ததை விவரிக்கிறார் ஆட்சியர்!

மாலிக்கடவு என்ற ஊராட்சியில் புனூர்புழா நதிப்படுகையில் வசித்து வந்தது மேடைல் வாசு என்பவரது குடும்பம். கடந்த 17-ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் புனூர் நதியில் வெள்ளம் கரைகடந்து ஊருக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்துவிட்ட வெள்ளத்தால் கடுமையான மழையிலும் மக்கள் தங்களுக்குத் தேவையான சிறிதளவு உடைமைகளோடு தத்தம் வீடுகளைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். மேடைல் வாசுவின் குடும்பமும் அவர்களோடு காலி செய்துகொண்டிருந்தார்கள். வீடுகளுக்குள் நான்கு அடிவரை நீர் புகுந்துவிட்டது. குடும்பத்தினரை வெளியேற்றிவிட்டு அவரும் வெளியேறினார். சில அடிதூரம் நடந்ததும் அவருக்குப் பின்னால் நிலம் அதிரும் சத்தம்கேட்டுத் திரும்பினார்.

திரும்பிப் பார்த்த வாசுவின் இதயத்தில் அதைவிட அதிக அதிர்விருந்தது. உழைத்துச் சேர்த்த பணத்தில் சேமித்துக் கட்டிய வீடு கண்முன்னே மழை வெள்ளத்தில் அட்டைப்பெட்டியைப் போல் சுக்கல் சுக்கலாக நொறுங்குவதைப் பார்க்கும்போது யாருக்குத்தான் நெஞ்சம் அதிராமலிருக்கும். அந்தக் குடும்பத்தைச் சந்தித்த நம்மையும் அவர்களது அதிர்ச்சியும் சோகமும் ஆட்கொண்டன. 

கண்ணப்பன்குண்டு. கோழிக்கோட்டில் இருக்கும் ஒரு கிராமப் பஞ்சாயத்து. பெரியார் நதியின் கிளை ஆறுகள் பாய்ந்தோடும் பகுதி. அவை தற்போது அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திலும்கூடப் பாய்ந்துகொண்டிருக்கிறது. மக்கள் வாழ்ந்த இடங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சீர்செய்து குளிப்பாட்டிய பூப்படைந்த பெண்போல் அழகாய் நின்றிருந்தன அப்பகுதியின் தென்னை மரங்கள். இன்று அவையனைத்தும் அங்கு வாழ்ந்த மக்களின் வீடுகள் மீதும் சாலைகளிலும் சீரழிந்து வீழ்ந்துகிடக்கின்றன. வீடுகளை மூழ்கடித்த வெள்ளம் வாசலுக்குச் சென்றுவிட்டது, வந்துபோன தடங்களாக மணல் குவியல்களை வீட்டுக்கு இரண்டு லோடு அன்பளிப்பாக வழங்கிவிட்டு. 

அங்கு வாழ்ந்த குடும்பங்கள் மீட்கப்பட்டுத் தற்போது மயிலாடும்பாறை நிவாரண முகாமில் தங்கியுள்ளனர். வாசலுக்குச் சென்ற வெள்ளம் எப்போது நதிகளுக்குத் திரும்புமென்று காத்திருக்கிறார்கள். ``ராத்திரி 11 மணியிருக்கும். பெரிய சத்தம் கேட்டு எழுந்தேன். கட்டிலைவிட்டு இறங்கலாமுன்னு கால எடுத்து வெச்சேன். வீடு முழுக்கத் தண்ணி. அலறியடிச்சுட்டு புருஷன் புள்ளையோட வெளிய வந்துட்டேன். இடுப்பளவு வரதுக்குள்ள தட்டுத்தடுமாறி மேட்டுக்குப் போயிட்டுத் திரும்பிப் பார்த்தா வீடு பாதிக்குமேல மூழ்கிருச்சு" என்கிறார் தனது குழந்தையின் பாடப் புத்தகங்களை மணல் குவியலில் தேடியெடுத்துச் சுத்தம் செய்துகொண்டிருந்த பெண்மணி.

வயநாடு, கோழிக்கோடு, கொல்லம் போன்ற மாவட்டங்களுக்குச் சென்றிருந்தோம். மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் சேதம் எண்ணிலடங்கா. வீடுகளுக்குள் நீர் புகுந்ததாலும், வீடு முழுவதுமாக இடிந்துவிட்டதாலும் தற்போது கேரளா மொத்தமும் 1.74 லட்சம் மக்கள் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் இருபதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. செங்கனூர், பொழுதுப்புனா போன்ற கிராமங்களில் முற்றிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் ஆயிரக்கணக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சேதாரங்களுக்குக் கடும் மழையும் அதன் விளைவாக நிரம்பி வழிந்த அணைகளைத் திறந்துவிட்டதுமே காரணமாகச் சொல்லப்படுகின்றது. மாநிலத்தின் 35 அணைகள் இதுவரை திறந்துவிடப்பட்டுள்ளன. பெரும்பான்மைப் பகுதிகளில் முன்னறிவிப்பு செய்யப்பட்டு மக்கள் வெளியேற்றப் பட்டுவிட்டனர். ஆனால், வயநாடு மாவட்டத்தில் அது சரியாகச் செய்யப்படவில்லை.

வயநாட்டில் மானந்தவாடி, மணியங்காடு போன்ற பல பழங்குடி கிராமங்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்தனர். கடந்த 9-ம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில் அவர்களது வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் அந்தக் கிராமங்களை முற்றிலுமாக மூழ்கடிக்கத் தொடங்கியது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மக்கள் முடிந்தவரைப் பொருள்களைக் காப்பாற்ற முயன்று தோற்றுப்போனார்கள். அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு கால் முட்டிக்கும் மேலே உயர்ந்துகொண்டிருந்த நீர்மட்டத்தில் குழந்தைகளை இறுகப் பிடித்துப் பாதுகாத்து உதவிக்குக் காத்திருந்தனர். மீட்புப்பணி வீரர்கள் அவர்களைப் படகில் ஏற்றியதுதான் தாமதம், அங்கிருந்த வீடுகளில் பலதையும் ஆற்று வெள்ளம் அடித்துச்சென்றுவிட்டது. 

இவையனைத்துமே எப்படி நிகழ்ந்தது. நாமிருப்பது நதியிலிருந்து சில நூறு மீட்டர்கள் தள்ளித்தானே. இங்கு எப்படி வீடுகளை மூழ்கடிக்கும் அளவுக்கு இவ்வளவு நீர். பல கேள்விகளும் குழப்பங்களும் வயநாட்டைச் சுற்றியிருந்த கிராம மக்களின் மனங்களுக்குள் அலைமோதிக் கொண்டிருந்தன. கேரளாவில் வெள்ளத்தால் இதுவரை 354 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் வயநாட்டில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

வயநாடு மாவட்டத்தில் பனாசுர சாகர்அணை உள்ளது. அதன் கொள்ளளவு 775.5 மீட்டர். தங்களையும் தத்தம் குடும்பங்களையும் போராடிக் காப்பாற்றி மீண்டு வந்த பிறகே அந்த அணை திறந்துவிடப்பட்டது அப்பகுதி மக்களுக்குத் தெரிந்தது. நம்மிடம் முன்பே ஏன் அறிவிக்கவில்லை என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர். நாம் பனாசுர சாகர் அணை திறப்பால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசினோம். அங்கிருந்து பிழைத்து வந்ததே அதிர்ஷ்டம் தானென்கிறார்கள் தற்போது முண்டேரி நிவாரண முகாமில் வசிக்கும் அந்தப் பழங்குடி மக்கள்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராமங்களின் அதிகாரிகளைச் சந்தித்தபோது, அவர்களுக்கே மேலதிகாரிகள் முறையாக அறிவிக்கவில்லை என்று வருத்தப்பட்டனர்.

மாவட்டப் பேரிடர் மேலாண்மை வாரியத்தோடு அணை திறக்கப்படுவதால் அதிகமாகச் சேதங்களைச் சந்திக்கும் கிராமங்களின் அதிகாரிகளையும் ஆலோசித்திருக்க வேண்டும். பிறகு, மக்களை முற்றிலும் வெளியேற்றிவிட்டுத்தான் மதகுகளைத் திறந்திருக்க வேண்டும். ஆனால், இவற்றில் எதையுமே செய்யவில்லை. மதகுகளைத் திறந்துவிட்ட மின்வாரியம் குறைந்தபட்ச அறிவிப்புகளைக் கூட வழங்கவில்லை. இதுகுறித்து விசாரிக்க அவர்களைச் சந்திக்க முயன்றோம், முடியவில்லை. தொடர்புகொண்டோம். இதுகுறித்துப் பேச அதிகாரிகள் மறுத்துவிட்டனர். வெள்ளப் பாதிப்புகள் தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்ள வயநாடு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.அஜய்குமார் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம்.

``வயநாட்டில் வெள்ளச் சேதங்கள் அதிகமாகவே ஏற்பட்டுள்ளன. அதைவிடத் தற்போது மண்சரிவுகள் அதிக ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. பல்வேறு ஊர்களிலிருந்து வரும் பொருள்களைச் சரியான முறையிலும் சுகாதாரமான முறையிலும் அனைத்து முகாம்களுக்கும் கொண்டு சேர்க்கிறோம். தற்போதுள்ள பிரச்னைகளைவிட முக்கியமான ஒன்று உள்ளது. மக்கள் திரும்பித் தங்கள் வீடுகளுக்குச் செல்லவேண்டும். அதனால் வீடிழந்தவர்கள் மற்றும் மற்ற பாதிப்புகள் குறித்தும் விவரமாக ஆய்வுசெய்ய கிராமப் பஞ்சாயத்து அளவில் ஆய்வுக் குழுக்களை அமைத்துள்ளோம். பனாசுர சாகர் அணை எந்த அறிவிப்புமில்லாமல் திறந்துவிடப்பட்டிருப்பது உண்மைதான். நிவாரணப் பணிகள் முடிந்தவுடன் இது முழுமையாக விசாரிக்கப்படும்" என்று கூறினார்.

ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வைத்திரி நகராட்சியின் துணை தாசில்தார் சுதா அவர்களைச் சந்தித்துப் பேசினோம், ``சரியான முன்னறிவிப்புகளை மேலதிகாரிகள் வழங்காதபோதும் அனைத்து அரசு அதிகாரிகளும் ஆசிரியர்களும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் ஊர்கள் மிதந்துகொண்டிருக்கின்றன. மீண்டெழுவது மட்டுமே தற்போது முக்கியம். தமிழக மக்களின் உதவி எங்களுக்குக் குறைவின்றிக் கிடைக்கிறது. விரைவாக மீண்டெழுவோம்" என்றார்.