Published:Updated:

`புயல் பாதித்த பகுதிகளில் விரைவில் நர்சரி!’ - வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேட்டி

`புயல் பாதித்த பகுதிகளில் விரைவில் நர்சரி!’ - வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேட்டி
`புயல் பாதித்த பகுதிகளில் விரைவில் நர்சரி!’ - வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேட்டி

`கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கெங்கெல்லாம் நர்சரி அமைக்க முடியும் என்பதை நேரில் ஆய்வு செய்து அமைக்க இருக்கிறோம்' என்கிறார் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார். 

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வேளாண் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான ஆராய்ச்சி மையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கைவசம் உள்ள நெல் விதைகளைப் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். 

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் 31 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. அவ்வளவு தென்னை மரங்களையும் நேராக நிமிர்த்தி காப்பாற்றுவது என்பது கடினமான காரியம். 5 அல்லது 6 ஆண்டுகள் ஆன மரங்களை நிமிர்த்திக் காப்பாற்ற முடியும். அதற்கு 3 மாதங்கள் ஆகும். அந்தப் பகுதிகளில் தென்னை விவசாயத்தை மீட்டுருவாக்கம் செய்ய 25 லட்சம் தென்னை நாற்றுகள் தேவைப்படுகின்றன. அதை உற்பத்தி்செய்ய 40 லட்சம் தேங்காய் விதைகள் தேவை. புதிதாக தென்னை நாற்றுகள் வாங்க கர்நாடக அரசுடன் பேசி வருகிறோம். அங்கிருந்து 5 லட்சம் நாற்றுகள் வரையில் வாங்க முடியும்'' என்றவர்,

``கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக ஆய்வு செய்ய இருக்கிறோம். வருங்காலத்தில் புயலால் சேதம் ஏற்படாமல் இருக்க தென்னை நடவு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். சாய்ந்துபோன 8 ஆண்டுகளுக்கு மேலான தென்னை மரங்களை மீண்டும் காப்பாற்றுவது கடினம். சாய்ந்த தென்னை மரங்களைக் காப்பாற்ற மரத்துக்கு தலா 500 ரூபாய் வரை செலவாகும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு குழு கஜா புயல் பாதிக்கபட்ட பகுதிகளுக்குச் சென்றுள்ளது. கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கெல்லாம் நர்சரி போட முடியும் என்பதை நேரில் ஆய்வு செய்து அங்கு நர்சரி அமைக்க இருக்கிறோம். 

10 அல்லது 15 நாள்களில் புதிய தென்னை நாற்று நடவுக்கான பணிகள் தொடங்கும். புயலால் நெல் பாதிப்பு அதிகளவு இல்லை என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள். வாழைக்கு இன்ஷுரன்ஸ் செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர். சாய்ந்துபோன 31 லட்சம் தென்னை  மரங்களுக்கு மாற்றாக, புதிய தென்னை மரங்கள் மாற்று நடவு செய்ய இரண்டு அல்லது மூன்று வருடங்களாகும்" எனவும் தெரிவித்தார்.