Published:Updated:

காவிரி மண்டலத்தில் மேலும் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகள்! - மத்திய அரசு ஏலத்தை வென்ற ஓ.என்.ஜி.சி!

மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறையின் கீழ் இயங்கும் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் OALP முறைப்படி, இந்தியாவில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் மண்டலங்களை, ஏலத்தில் வென்ற நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது.

ஹைட்ரோகார்பன் திட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டம் ( விகடன் )

தமிழக சட்டப்பேரவையில், ஜூலை 3-ம் தேதியன்று, ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக தி.மு.க கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

`ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை’ எனச் சொல்லும் அமைச்சர் செய்ய வேண்டியது என்ன?

தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, இந்தத் தீர்மானத்தின் மீது பேசியபோது, ஹைட்ரோகார்பன் திட்டம் அமல்படுத்தப்படுவது டெல்டா பகுதியின் நீர் ஆதாரத்தைப் பாதிக்கும் என்றும், டெல்டா பகுதியைச் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் இதை வாக்குறுதியாக முன்வைத்திருந்தது.

விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ``தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை. விதிகளின்படி, இந்தத் திட்டத்தைக் கடற்பரப்பில் நிறைவேற்ற வேண்டுமானால் மத்திய அரசே நிறைவேற்றலாம். ஆனால், நிலத்தில் நிறைவேற்ற தமிழக அரசின் அனுமதி வேண்டும். ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியும், தமிழக அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை. எதிர்காலத்திலும் எப்போதும் வழங்காது" என்று தெரிவித்தார்.

தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை. எதிர்காலத்திலும் வழங்காது.
அமைச்சர் சி.வி.சண்முகம்

இப்படியான சூழலில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் கீழ் இயங்கும் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் OALP முறைப்படி, இந்தியாவில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் மண்டலங்களை, ஏலத்தில் வென்ற நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது. கடந்த ஆண்டு முதல்சுற்று ஏலத்தில் வெற்றிபெற்ற நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளை வென்றுள்ள நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

குழாய் அமைக்கும் பணி
குழாய் அமைக்கும் பணி

OALP என்ற முறைப்படி, நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஏற்ற மண்டலங்களைத் தேர்வு செய்து, அரசுக்கு அளிக்கலாம். மத்திய அரசு அந்த மண்டலங்களை ஏலத்தில் விட்டு, நிறுவனங்களுக்கு அளிக்கும். ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதால் கிடைக்கும் வருமானத்தில், அரசுக்கு பங்கு தரப்படும். கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, HELP (Hydrocarbon Exploration and Licensing Policy) என்ற திட்டத்தின் கீழ் இது செயல்படுகிறது.

2016-ம் ஆண்டுக்கு முன், ஹைட்ரோகார்பனுக்கான இடங்களை அரசு தேர்வு செய்துவந்தது. தற்போதைய திட்டத்தின்படி, நிறுவனங்களே தேர்வு செய்யலாம்; மண்ணிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை விற்பதற்கும், விலையை நிர்ணயம் செய்வதற்கும் அந்தந்த நிறுவனங்களுக்கே உரிமையுண்டு.

ஹைட்ரோகார்பன் திட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டம்
விகடன்

கடந்த ஆண்டு, OALP முறையின் கீழ், இந்தியா முழுவதும் ஏலத்தில் விடப்பட்ட 55 மண்டலங்களில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமம் 41 இடங்களை வென்றது. தமிழ்நாட்டில் டெல்டா பகுதியில் மூன்று மண்டலங்கள் ஏலம் விடப்பட்டன. இதில் இரண்டு மண்டலங்கள் கடல் பகுதியிலும், ஒன்று நிலத்திலும் உள்ளன.

நிலத்திலுள்ள மண்டலம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும், கடல் பகுதியிலுள்ள இரண்டு மண்டலங்கள் வேதாந்தா நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டன.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இரண்டு சுற்று முடிவுகளிலும், மொத்தம் 32 மண்டலங்கள் ஏலத்துக்கு விடப்பட்டன. இவற்றில் பெரும்பான்மையாக ஆயில் இந்தியா நிறுவனம் 12 மண்டலங்களையும், வேதாந்தா குழுமம் 10 மண்டலங்களையும் பெற்றுள்ளன.

காவிரி ஆற்றுப்படுகை மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலம் இந்தியன் ஆயில் நிறுவனத்திடமும், மற்ற இரண்டு மண்டலங்கள் ஓ.என்.ஜி.சியிடமும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் காவிரிப்படுகையில் தோண்டப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் சூழலில், மத்திய அரசு மீண்டும் தமிழக விவசாய நிலங்களையும், கடற்பரப்பையும் பெருநிறுவனங்களுக்கு ஏலத்தில் விற்று, ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.