Published:Updated:

வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் திணறும் வட இந்தியா... தமிழகத்திற்கும் சிக்கல் ஏற்படுமா?

படைவெட்டுக்கிளிகள்
படைவெட்டுக்கிளிகள் ( AP )

படைவெட்டுக்கிளிக் கூட்டம் கடந்து சென்றால், மொத்த விவசாய நிலமுமே போருக்குப் பிந்தைய நிலத்தைப்போல் பெருஞ்சேதங்கள் நிறைந்ததாய் இருக்கும்.

இந்தியாமீது கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துக் கொண்டிருக்கும் படைவெட்டுக்கிளிகள் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் பெருஞ்சேதங்களைப் படைவெட்டுக்கிளிகள் விளைவித்துள்ளன. பாலைவன வெட்டுக்கிளிகளாக அறியப்படும் இந்த வகை வெட்டுக்கிளிகள், கூட்டமாகவே உலவுவதால் அவற்றைப் `படைவெட்டுக்கிளிகள்' (Swarm Locusts) என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு வெட்டுக்கிளியும் அதனதன் எடைக்குச் சமமான பயிர்களைச் சாப்பிடும். லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் சாரிசாரியாக வந்து பயிர்களைச் சாப்பிட்டால் என்னவாகும்?

அந்தப் படை கடந்து சென்றால், மொத்த விவசாய நிலமுமே போருக்குப் பிந்தைய நிலத்தைப்போல் பெருஞ்சேதங்கள் நிறைந்ததாய் இருக்கும். உலகிலேயே, பயிர்களுக்கு மிகவும் ஆபத்தான பூச்சியாகப் பாலைவனப் படைவெட்டுக்கிளிகள் குறிப்பிடப்படுகின்றன. கற்பனை செய்துபாருங்கள்... ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பரவியிருக்கும் 80 லட்சம் வெட்டுக்கிளிகளைக் கொண்ட ஒரு படை, விவசாய நிலத்தைச் சுற்றி வளைத்தால் எப்படியிருக்கும்! அங்கிருக்கும் பயிர்களில் சிறிதாவது மிஞ்சுமா. இந்தியாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகளின் படையைக் கண்களால் பார்த்தவர்கள், பாகிஸ்தானிலிருந்து இங்கு திரளாக வந்தவற்றின் நீளம் மட்டுமே சுமார் இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் நீளத்துக்கு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இவை குஜராத்தின் சில பகுதிகளில் மட்டுமே பரவியபோது 25,000 ஹெக்டேர் நிலப்பகுதியை அழித்துவிட்டன. இந்தமுறை, ஐந்து மாநிலங்களைச் சுற்றி வளைத்துள்ளன. கடந்த ஆண்டின் இறுதியில் ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த இவை, அங்கிருந்து இந்தியாவுக்குள் சமீபத்தில் நுழைந்தன. ராஜஸ்தான் வழியாக உள்ளே நுழைந்து, மத்தியப் பிரதேசம் வரையிலுமே பரவிவிட்டன. மேலும் உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா என்று இந்தப் படை வெட்டுக்கிளிகள் சேதங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. பாகிஸ்தானுக்கு அருகிலிருந்ததாலும் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு வெகு அருகிலிருந்ததாலும் பஞ்சாப் மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், அந்த மாநிலம் தன்னுடைய விவசாயிகளை எச்சரித்ததோடு முடிந்த அளவுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறது.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளி, திரளாக வந்த இவற்றை விரட்டுவதற்காக விவசாயிகள் படும் பாட்டை உணர்த்துகின்றது. ராஜஸ்தானில் இந்தத் தாக்குதல் ஜெய்பூரின் குடியிருப்புப் பகுதிகள் வரை வந்துவிட்டது. அந்த மாநிலத்தில் மட்டும் 5,00,000 ஹெக்டேர் பயிர்களை அழித்துவிட்டன. இருந்த பயிர்களையெல்லாம் தின்று தீர்த்துவிட்டதால், சாப்பிடப் பயிர்களின்றி அவை மரங்களையும் அழிக்கத் தொடங்கிவிட்டன. கடந்த மூன்று மாதங்களாக இதைச் சரிசெய்ய அந்த மாநிலம் போராடிக்கொண்டிருக்கிறது. மேற்கு ராஜஸ்தானில் அமைந்துள்ள ஸ்ரீ கங்காநகர், பிகானீர், பர்மெர் மாவட்டங்களில் பிங்க் நிறத்திலிருந்த படை வெட்டுக்கிளிகள் பச்சைப் பசேலென்றிருந்த வயல்வெளிகளை முற்றிலுமாக அழித்துவிட்டன. ஜோத்பூர், ஜாலவார், கரௌலி, புண்டி ஆகிய பகுதிகளில் தங்கள் பயிர்களில் கொஞ்சம்கூட மிஞ்சவில்லை என்று விவசாயிகள் புகாரளித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் முழுக்க, படைவெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரச்னையின் வீரியம் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. அம்மாநில விவசாயத்துறை அமைச்சகம், அவை மேன்மேலும் சேதங்களை விளைவிப்பதைத் தடுக்க வேதிமப் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தப் வெட்டுக்கிளிகளை வெறும் பூச்சிக்கொல்லிகளால் கொன்று விட முடியாது. அவற்றைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுக்கவுள்ள பல்வேறு விவசாயிகள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டுக் கொண்டிருக்கிறார்கள். மதியம் மற்றும் மாலை வேளைகளில் இரும்புப் பாத்திரங்களை ஒன்றோடு அடித்து ஓசை எழுப்புவது, அதிகம் ஒலியெழுப்பும் இசையை இரவு நேரத்தில் ஒலிக்கவிடுவது, நெருப்பு மூட்டி வைத்து வெட்டுக்கிளிகளைப் பயமுறுத்த முயல்கிறார்கள். ஆனால், இவற்றில் எந்தவித முயற்சியுமே அவற்றைக் கட்டுப்படுத்துவதில் பலனளிக்கவில்லை.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
AP

ஜஸ்காரன் சிங் என்ற விவசாயி, தன்னுடைய அம்மாவின் பெயரில் 9,00,000 ரூபாய் கடன் வாங்கி தம் நிலத்தில் முதலீடு செய்திருந்தார். அந்த முதலீடுகளைப் பயிராக்கியவரால் அவற்றால் பயனடைய முடியவில்லை. கோதுமை, பட்டாணி என்று அனைத்தையுமே படைவெட்டுக்கிளிகள் அழித்துவிட்டன. இப்போது அரசாங்கத்தின் இழப்பீட்டைப் பெறுவதற்காக முயன்றுகொண்டிருக்கிறார்.

இதே நிலையில்தான் கடந்த ஐந்து மாதங்களாக வெட்டுக்கிளிகளிடம் சிக்கித் தவிக்கும் குஜராத் மாநிலமும் இருக்கின்றது. லோடியா, சாவர்குந்த்லா, கம்பா ஜஃபார்பாத் ஆகிய பல்வேறு பகுதிகளின் விவசாய நிலங்கள் சீரழிந்துவிட்டன. சுரேந்திரநகர், பாவ்நகர் மாவட்டங்கள் சர்வநாசத்தை அனுபவித்துள்ளன. அம்ரேலி மாவட்ட ஆட்சியர், வெட்டுக்கிளிகளைச் சமாளிக்க 11 குழுக்களை அமைத்துள்ளார். இந்த நிலைமையைச் சமாளிக்கத் தயாராக இருப்பதாக குஜராத் அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால், ஐந்து மாதங்களைத் தாண்டி நீளும் பிரச்னை அவர்களுடைய கூற்றுக்கு முரணாக உள்ளது. குஜராத் அரசு, சேதமடைந்த பகுதிகளைச் சுற்றி கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது. கள அதிகாரிகளுக்கு அவற்றை எப்படிச் சமாளிப்பது என்றும் பயிற்சியளிக்கப்படுகின்றது. வாகனங்கள், பூச்சிக்கொல்லி தெளிப்பான்கள், தேவையான மருந்துகள், டிராக்டர்கள் என்று தேவைப்படுகின்ற அனைத்தும் தயாராக இருப்பதாக குஜராத் மாநில அரசு கூறுகிறது. அரசாங்கம் பூச்சிக்கொல்லி நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவதாகவும் தேவையான மருந்துகளை அவர்கள் தொடர்ந்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

இரானிலிருந்து பாகிஸ்தான் வரை வந்தவை, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைத் தாண்டி மத்தியப் பிரதேசம் வரையிலும் வந்துவிட்டன. மத்தியப் பிரதேசத்திலுள்ள 52 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் வெட்டுக்கிளிப் படை ஏற்படுத்திய சேதங்களால் நிலைகுலைந்துள்ளன. கோடை முழுக்கத் தங்கள் முழு உழைப்பையும் செலுத்தி விளைய வைத்த பயிர்களையெல்லாம் திரளாக வந்த வெட்டுக்கிளிகள் அழித்துவிட்டதால் அந்த மாநிலத்திலும் விவசாயிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் அவற்றிடமிருந்து தங்கள் பயிர்களைப் பாதுகாக்க இரவு முழுக்கவே விழித்திருக்கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜான்சி, மஹோபா, ஹமீர்பூர், ஆக்ரா, அலிகார், மதுரா, புலந்த்ஷார், ஹத்ராஸ், ஏடாஹ், ஃபிரோசாபாத், மைன்பூரி, இடாவாஹ், ஃபரூக்காபாத், ஔரையா, ஜலாவுன், கான்பூர், லலித்பூர் ஆகிய 17 மாவட்டங்கள் அதிகச் சேதங்களைச் சந்தித்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்குப் பக்கமாக நுழைந்த படைவெட்டுக்கிளிகள் விதர்பாவிலிருந்த ஐந்து கிராமங்களைச் சிதைத்துவிட்டன. தற்போது அமராவதி மாவட்டத்திற்குள்ளும் அவை நுழைந்துவிட்டதாக விவசாயத்துறை துணை இயக்குநர் ரவீந்திர போசாலே பி.டி. ஐ-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர், பஞ்சாபின் ஃபாசில்கா மாவட்டத்தில் ரூப்நகர், பரேகா ஆகிய கிராமங்களில் இவற்றின் தாக்குதல் பெருமளவில் சேதங்களை உண்டாக்கியது. கடந்த 13-ம் தேதியன்று மேலும் மூன்று கிராமங்களுக்குள் அவற்றின் தாக்குதல் நடந்துள்ளது. பஞ்சாப்பில் வீரியமிக்க தாக்குதல் இனிமேல்தான் வரவுள்ளதாக உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு (Food and Agriculture Organisation) எச்சரித்துள்ளது. மேலும், இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இன்னும் பல முட்டைகள் இருப்பதால் அவை பொறிந்து ஜூன் மாதத்தில் பல புதிய படைகள் இந்தியாவுக்குள் நுழையும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. சுமார் 8 மாவட்டங்களுக்கு பஞ்சாப் மாநில அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துரைத்து எச்சரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகள்
பாதிக்கப்பட்ட பகுதிகள்
FAO

ஆய்வாளர்கள், ``1962-ம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு பெரிய படையெடுப்பை இந்தியா சந்தித்ததில்லை" என்கின்றனர். அதற்குப் பிறகு 1978-ம் ஆண்டு ஒருமுறை வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்துள்ளது. பின்னர் 1993-ம் ஆண்டு மீண்டுமொரு படையெடுப்பு நடந்தது. அதன்பிறகு நடந்துள்ள மிக மோசமான வெட்டுக்கிளி படையெடுப்பு இதுதான் என்று கூறுகின்றனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, கடந்த 27 ஆண்டுகளில் இந்தியா சந்தித்துள்ள மோசமான வெட்டுக்கிளி படையெடுப்பாக இதை அறிவித்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டுமுதல் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் இத்தகைய படையெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. எத்தியோபியாவில் 25 ஆண்டுக்குப் பிறகு நடந்துள்ள பெரிய படையெடுப்பு இது. அதேபோல், கென்யா 75 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற தாக்குதலைச் சந்திக்கின்றது. 2018-ம் ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட இரண்டு சூறாவளிகள் ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ளது. அவையிரண்டும், ஜூன் 2018 முதல் மார்ச் 2019 வரை அரேபிய தீபகற்பத்தில் வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதன்விளைவாக அவை, எண்ணிக்கையில் 8,000 மடங்கு அதிகரித்துள்ளது.

இப்போது இந்தியாவில் தாக்குதலைத் தொடுத்திருக்கும் வெட்டுக்கிளிகள் இரானிலும் பாகிஸ்தானின் பலுஸ்சிஸ்தானிலும் பிறந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆபத்து இன்னும் முடியவில்லை. ஆப்பிரிக்காவிலிருந்து வந்துகொண்டிருக்கும் மேலும் பல படைகள் இந்தியாவை அடுத்த மாதம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற வழி தெரியாமல் அதிகாரிகளும் விவசாயிகளும் திணறிக்கொண்டிருக்கின்றனர். இது வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலுள்ள விவசாயிகளுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2020-ம் ஆண்டு அனைவருக்குமே மோசமான இழப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பது உண்மைதான். வெட்டுக்கிளி தாக்குதலைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு இறுதியிலேயே ஆப்பிரிக்கா முழுக்க அவைதம் தாக்குதலைத் தொடுத்துவிட்டன. அப்போதே இரான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் அவற்றின் முட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ஒருவேளை, அப்போதே முன்னெச்சரிக்கையாகத் திட்டமிட்டிருந்தால் நாம் இந்தப் பெருஞ்சேதங்களிலிருந்து தப்பித்திருக்கலாம். ஆனால், முன் திட்டமிடல் குறித்த சிந்தனையின்றிச் சேதங்கள் வந்த பிறகே சிந்திக்கும் அரசுகள் அமையும்வரை இதுபோன்ற பெருஞ்சேதங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

இந்த வெட்டுக்கிளிகளால் தமிழ்நாட்டுக்கு ஆபத்துண்டா?

இதுவரை இப்படியொரு படை தமிழ்நாட்டுக்கு வந்ததில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். இனியும் சாத்தியமில்லை என்பதே அவர்கள் கருத்தாக இருக்கிறது. பாலைவனப்பகுதிகளையும், அவற்றின் அருகில் உள்ள நிலப்பகுதிகளையும் குறிவைத்தே இவை தாக்குகின்றன. அதனால் தென்னிந்தியாவுக்கு ஆபத்தில்லை எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து தமிழக வேளாண்துறை அதிகாரிகளிடம் பேசினோம். பெயர்குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் பேசுகையில், ``எப்போதுமே வெட்டுக்கிளிக் கூட்டம் மார்ச் மாதங்களில் மட்டுமே இந்தியாவுக்கு படையெடுத்து வரும். அதுவும் ராஜஸ்தான் போன்ற பகுதிகளோடு நின்றுவிடும். ஆனால், இப்போது வெட்டுக்கிளிகள் அதிக அளவு படையெடுத்திருப்பது காலநிலை மாற்றமாகவோ, அல்லது இப்போது இருக்கும் மழைப்பொழிவு போன்ற காரணங்களாகவோ இருக்கலாம். தமிழ்நாட்டுக்கு வராது என்றெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது. இப்போது தமிழகத்தில் நிலவும் சூழல் காரணமாக வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வரவும் வாய்ப்புகள் இருக்கின்றன." என்றார்.

அடுத்த கட்டுரைக்கு