Election bannerElection banner
Published:Updated:

6 ஆண்டுகளில் 561 யானைகள் மரணம்... பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட அறிக்கை சொல்வது என்ன?

மாசுபாடு
மாசுபாடு ( Pixabay )

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பிரச்னைகளின் நிலை, நாம் எதிர்கொண்டுள்ள சூழலியல் பேரிடர்கள் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு Tamilnadu Environmental Report Card என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சார்ந்த மக்கள் போராட்டங்கள் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளன. அதேநேரம், கடந்த பத்தாண்டுகளில் சூழலியல் பேரிடர்களையும் தமிழ்நாட்டு மக்கள் அதிகளவில் எதிர்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பிரச்னைகளின் நிலை, நாம் எதிர்கொண்டுள்ள சூழலியல் பேரிடர்கள், அதற்குக் காரணமாக அமைந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் உட்பட, சூழலியல் சார்ந்த மக்கள் போராட்டங்களிலும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளிலும் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு மற்றும் அவை ஏற்படுத்திய தாக்கம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு Tamilnadu Environmental Report Card என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை / Representational Image
தண்ணீர் பற்றாக்குறை / Representational Image
Pixabay

நீர் பற்றாக்குறை, காடுகள் மற்றும் காட்டுயிர், காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, போக்குவரத்து, திடக்கழிவு மேலாண்மை, மணல் கொள்ளை, இயற்கைப் பேரிடர்கள், திட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என்று பல்வேறு விஷயங்களை இந்த ஆய்வறிக்கை பேசுகின்றது. தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தில் ஏற்கெனவே இதுவரை 60 சதவிகிதம் தீர்ந்துவிட்டதாகவும் வெறும் 40 சதவிகிதம் மட்டுமே நிலத்தடி நீர் மிச்சமிருப்பதாகவும் கூறும் ஆய்வறிக்கை, இந்த நிலையிலும் மாநிலம் முழுக்க சட்டவிரோதமாக, அனுமதியின்றி நிலத்தடி நீர் வளம் சுரண்டப்பட்டுக் கொண்டேயிருப்பதாகக் கூறுகிறது.

சென்னை பல முறை கடுமையான நீர் தட்டுப்பாட்டில் சிக்கியிருக்கிறது. இதற்கு முன்னர், 1947, 1954, 1968, 1972 முதல் 1975, 1982, 1983, 2000 முதல் 2003 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் மிகவும் மோசமான வறட்சியை சென்னை சந்தித்தது. இதில், 2019-ம் ஆண்டு சென்னை மக்கள் சந்தித்த அளவுக்கு மோசமான தண்ணீர் பற்றாக்குறை இதற்கு முன்னர் ஏற்படவில்லை என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் தமிழகக் காடுகளைச் சுற்றி அதிகரித்துக்கொண்டேயிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், 2017-ம் ஆண்டு இருந்ததைவிட 2019-ம் ஆண்டில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் நிகழ்வுகள் அதிகரித்திருக்கின்றது. 2017-ம் ஆண்டு 1976 மனித காட்டுயிர் எதிர்கொள்ளல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதுவே, 2019-ம் ஆண்டில் 3,478 நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது. காட்டுயிர்கள் உணவுப் பற்றாக்குறையால் காடுகளைவிட்டு வெளியேறுவதும் விவசாய நிலங்களுக்குள் ஊடுருவி பயிர்களைச் சேதப்படுத்துவதும் தொடர்கதையாகவே இருந்துவருகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 246 பேர் யானை-மனித எதிர்கொள்ளலுக்குப் பலியாகியுள்ளார்கள். அதேநேரம், 2015-ம் ஆண்டு முதல் 2019 வரை காடழிப்பு, ஆக்கிரமிப்பு, நீர் பற்றாக்குறை, காட்டின் ஓரங்களில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் மின் வேலிகள் என்று பல்வேறு காரணங்களால் 476 யானைகள் உயிரிழந்துள்ளன. 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான தரவுகளின்படி 85 யானைகள் இறந்துள்ளன. ஆக, கடந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 561 யானைகள் மேற்சொன்ன வகையில் உயிரிழந்துள்ளன.

யானைகள்/ Representational Image
யானைகள்/ Representational Image
Pixabay

மேன்மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் மற்றும் அதுசார்ந்த மக்கள் போராட்டங்களால், அரசியல் கட்சிகளும் சூழலியல் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

அதுகுறித்து, "தமிழ்நாடு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலை நாளை சந்திக்கப்போகிறது. இந்தத் தேர்தலில் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. பல்வேறு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் சூழலியல் தொடர்பான வாக்குறுதிகளும் இருக்கின்றன. நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை போன்ற முக்கியப் பிரச்னைகள்மீது கவனம் செலுதப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள், சுற்றுச்சூழலுக்கென தனிப்பட்ட பிரிவை உண்டாக்கியுள்ளார்கள்" என்று கூறும் அறிக்கை, "கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டு அரசியலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை கடந்த சில ஆண்டுகளில் சூழலியல் பேரிழப்பை உண்டாக்கக்கூடிய, வாழ்வாதாரத்துக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மக்களுக்கு எதிரான பல்வேறு திட்டங்களில் மக்களோடு நின்று எதிர்த்துள்ளனர்" என்றும் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், காலநிலை மாற்றம் குறித்து முக்கிய அரசியல் கட்சிகள் இதுவரை பேசாமலிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. குறிப்பாக, இந்திய நிலப்பரப்பின் தட்பவெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் எதிர்காலத்தில் அதிக இயற்கைப் பேரிடர்களை விளைவிக்கும் ஆபத்து இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் காலநிலை மாற்றத்தையும் முக்கியப் பிரச்னையாக முன்னிறுத்த வேண்டியது அவசியம். இதுகுறித்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், "தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைமைகள் இன்னும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு ஆதாரமாக இந்த ஆண்டு தேர்தல் அறிக்கைகளில் பெரும்பாலான முக்கிய கட்சிகள் யாரும் காலநிலை மாற்றம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாததைக் கூறலாம். பொதுமக்களும் சில சமூக செயல்பாட்டு அமைப்புகளும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், இன்னும்கூட கருத்தொருமித்த செயல்பாடுகளை முன்னெடுப்பதில் குறைபாடுகள் உள்ளன" என்று கூறினார்.

காலநிலை மாற்றம் / Representational Image
காலநிலை மாற்றம் / Representational Image
Pixabay

தீவிரமடைந்துவரும் காலநிலை மாற்றத்தால், இந்தியாவின் சராசரி வெப்பநிலை 1901 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 0.7 டிகிரி அதிகரித்துள்ளது. இது, கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பெரியளவில் பாதித்துள்ளது. தமிழ்நாட்டில், 1,076 கிலோமீட்டர் நீளத்துக்கு கடலோரப் பகுதிகள் இருக்கின்றன. ஆனால், கடந்த 30 ஆண்டுகளின் மீன்பிடி அளவை ஒப்பிட்டால், தற்போது கடலுக்குச் செல்லும் மீனவர்களின் வலையில் சிக்கும் மீன்களின் அளவு மிகவும் குறைவு என்பது புரியும். வெள்ளம், புயல், வறட்சி போன்ற பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, ஒவ்வோர் ஆண்டும் அவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இவற்றுக்குக் காரணம் வீரியமடைந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றம்.

மெலும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தரவுகளின்படி, தமிழ்நாடு அதிகப் பேரிடர்களை எதிர்கொண்ட அதேவேளையில், அதிகளவிலான போராட்டங்களையும் சந்தித்துள்ளது. 2009-ம் ஆண்டு முதல் 2017 வரையிலான போராட்டங்களின் எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. அறிக்கைப்படி, ஆண்டுக்குச் சராசரியாக 20,000 போராட்டங்கள் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகின்றன.

அதிலும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில், அந்தப் போராட்டங்களில் பெரும்பாலானவை சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களே. 2011-ம் ஆண்டு நடைபெற்ற கூடங்குளம் அனல்மின் நிலையம், கதிராமங்கலம் மற்றும் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ல்போராட்டம் என்று சூழலியல் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கின.

வறட்சி
வறட்சி

கூடங்குளம் முதல் காட்டுப்பள்ளி வரை, சூழலியல் பேரழிவை உண்டாக்கும் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த அக்கறை மற்றும் புரிதல் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. இவை அனைத்துக்கும் பிறகு, தற்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியப் பங்கு பெற்றிருப்பதில் பெரிய ஆச்சர்யமில்லை.

மேலும், ஆளும்கட்சியான அ.தி.மு.க-வும்கூட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் கடுமையாக எதிர்க்கும் அதானி நிறுவனத்துக்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மீண்டும் ஆட்சிக்கு வந்து தடுத்து நிறுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், இந்தத் திட்டத்துக்கான வேலைகள் இங்கு நடைபெறுவதற்குக் காரணமே ஆளும்கட்சிதான் என்பது நகைமுரண்.

நாளுக்கு நாள் சூழலியல் பிரச்னைகள் அதிகரிப்பதும் அதனால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அரசு கொண்டு வரக்கூடிய திட்டங்களும்கூட, சூழலியல் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாத கண்மூடித்தனமான வளர்ச்சியாகவே இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலத்தின்போது, நீர் பற்றாக்குறை குறித்த அச்சத்தோடே நாள்களைக் கடத்துவது நகரங்களில் தொடர்கதையாகவே இருக்கிறது. காடுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மறந்து செயல்படுவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சேதங்களை விடச் சிறந்த உதாரணம் இல்லை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இந்நிலையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கை, இதுவரை நாம் கடந்து வந்துள்ள கடினமான பாதையையும் எதிர்காலத்தில் இதைத் தவிர்க்க அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் காட்டுகிறது. சுற்றுச்சூழல் சிக்கல்களும் காலநிலை மாற்றமும் அரசியலாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எந்தவொரு சமுதாயப் பிரச்னைக்கும் தீர்வு வேண்டுமெனில் அது அரசியலாக்கப்பட வேண்டும். காலநிலை மாற்றமும் அதனாலேயே பல்வேறு சூழலியல் போராளிகளால் சர்வதேச அரசியலில் முக்கிய இடம் பிடித்தது. அந்த இடத்தை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழக அரசியலிலும் வழங்க வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு